

எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்… எங்கே சொல்லுங்க பார்க்கலாம்… நள்ளிரவில் சூரியன் எந்த நாடு? ‘நார்வே..’ நார்வே..’ ‘நார்வே..’ நல்லது. எதிர்பார்த்த மாதிரி சரியா சொல்லிட்டீங்க.
வடக்கு ஐரோப்பாவில் ஸ்காண்டினேவியன் தீபகற்பம் மேற்கு வடமேற்கு பாகத்துல இருக்கு – நார்வே நாடு. இதன் தலைநகரம் ஓஸ்லோ. மக்கள்தொகை சுமார் 55 லட்சம். பொது சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற நார்வே நாட்டில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தாதுக்கள், கடல் உணவு ஆகியன பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஐரோப்பாவின் ஆழமான ஏரி: சுற்றிலும் சுமார் 2,40,000 தீவுகள் கொண்ட நார்வே நாட்டின் பெரும்பகுதி மலைப் பிரதேசங்கள். ‘கிளேசியர்ஸ்’ மற்றும் அழகழகாய் சுமார் 4 லட்சம் ஏரிகள் உள்ளன. ஐரோப்பாவின் ஆழமான ஏரி ‘ ஹொமிண்டல் ஸ்வட்னட்’ இந்த நாட்டில் உள்ளது. தட்பவெப்ப நிலையில், உக்கிரமான கோடை, உறைய வைக்கும் குளிர் என்று இரண்டு கடுமைகளும் உண்டு. கடலோர மலை அடிவாரம், மழை மறைவுப் பகுதி ஆகும்.
நார்வே என்றதும் நம் நினைவுக்கு வருவது ‘நள்ளிரவில் சூரியன்’ செய்திதான் இல்லையா! ஆர்க்டிக் வட்டம் அருகே மே மாதம் முதல் ஜூலை முடிய பகல் பொழுது மிகுந்து இருக்கும். மிகுந்து என்றால் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் பகல் பொழுது இருக்கலாம். அதாவது நான்கு மணி நேரம்தான் ‘இரவு’. சில பகுதிகளில் நடுநிசி நேரத்திலும் ‘சூரிய ஒளி’ இருக்கும்!
இதேபோன்று நாட்டின் சில பகுதிகளில் நவம்பர் – ஜனவரி மாதங்களில் பகல் நேரம் மிகக் குறைவு. மிக நீண்ட இரவுகள் குளிரை அதிகரிக்கும். மழைப் பொழிவு அதிகம் உள்ள பகுதிகளும் உண்டு. இதற்கு ஈடாக, மலைத் தொடர்களுக்கு கிழக்கே கடும் வெப்பம் நிலவுகிற நாட்களும் அதிகம்.
நார்வே நாட்டில் அடர்ந்த மரங்கள் நிறைந்த வன பகுதிகளும் காணப்படுகின்றன. பல வகைப்பட்ட வித்தியாசமான உயிரினங்கள் இந்த நாட்டின் மற்றொரு சிறப்பு. வேறு எந்த ஐரோப்பிய நாட்டை விடவும் அதிகமாய்நார்வேயில் பலவகைக் காடுகளில், 60,000வகை உயிரினங்கள், 16,000 வகை பூச்சிகள்,17 அரிய வகைப் பூச்சிகள் வாழ்கின்றன. ‘பாஸ்கிங் ஷார்க்’ என்னும் பெரிய மீன் மற்றும் ஸ்பெர்ம் முதலை ஆகியன அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் ஆகும்.
உலக அமைதிக்குத் தொடர்ந்து அரும் பங்கு ஆற்றி வரும் நார்வே, ஐரோப்பிய நாடுகளில் முக்கிய சுற்றுலா மையமாக இருப்பதில் வியப்பு இல்லைதானே!
இந்த வாரக் கேள்வி: கடற்கரை இல்லா நாடுகளில் மழைப் பொழிவு நிலவரம் என்ன?
(பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com