

கோபத்திற்கு இயலாமையும் அச்சத்திற்குப் புரிந்துகொள்ளாமையும் காரணமாக இருப்பதைப் போல பிற உணர்வுகளுக்கு எது காரணமாக இருக்கிறது? என்று வினவினாள் அருட்செல்வி.
பள்ளி ஆண்டுவிழா. அதில் வரலாற்று நாடகம் நிகழ்த்த திட்டமிடப்படுகிறது. யாருக்கு எந்த வேடம் பொருத்தமாக இருக்கும் என்ற விவாதம் நடக்கிறது. தனக்கு அரசர் வேடத்தைத் தரும்படி அறிவுக்கனி கேட்கிறான். மற்றவர்கள் அவனைப் பார்க்கின்றனர். அவன் ஒல்லியாய், சற்று உயரங்குறைவாய், பொதுநிறத்தைவிடச் சற்று கருப்பாய் இருக்கிறான்.
மற்றவர்கள் அவனது உருவத்தைக் கிண்டல்செய்து, ‘ஓர் அரசன் இப்படி இருக்க மாட்டான். அதனால் நீ இந்த வேடத்தைப் போட வேண்டாம்’ என்கின்றனர். அக்கிண்டலைக் கேட்டதும் அறிவுக்கனி தன்னைப் பற்றி எப்படி உணர்வான் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று வினவினார் எழில்.
அவ்வாறு உணர்வது ஏன்? - இழிவாக என்றான் காதர். இழிவு என்றால் என்ன? என்று வினவினாள் கயல்விழி. ஒருவர் தன்னைப் பற்றித் தானே தாழ்வாகவும் குறைவாகவும் மட்டமாகவும் உணர்வதைத்தான் இழிவு என்கிறோம் என்று விளக்கினார் எழில்.
ஏன் அவ்வாறு உணர்கிறோம் என்று வினவினாள் நன்மொழி. ஒருவர் தனது அறிவு, திறன் ஆகியவற்றின் வலிமையைப் புரிந்துகொள்ளாமையும் அவற்றை முழுமையாக வெளிப்படுத்த இயலாமையுமே காரணங்கள் என்றார் எழில்.
ஒருவர் இழிவாக உணரும்பொழுது என்ன நிகழ்கிறது? என்று வினவினான் முகில். தாழ்வுமனப்பான்மை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை குறைகிறது. செயல்திறன் முடங்கிவிடுகிறது. முயற்சிகள் தளர்கின்றன. முன்னேற்றம் தடைப்படுகிறது என்று விளக்கினார் எழில்.
மற்றவர்கள் நம்மை இழிவாக உணரச்செய்ய முனையும்போது, அதனை எவ்வாறு எதிர்கொள்வது? என்று வினவினாள் தங்கம். அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன என்ற எழில், இழிவாக உணர்கின்றபொழுது, மனத்தில் ஏற்படும் வேதனைகளை நம்பிக்கைக்கு உரியவரிடம் பகிர்ந்துமனத்தை ஆற்றிக்கொள்வது ஒரு வழிஎன்றார் எழில். இன்னொரு வழி? என்றுவினவினான் சாமுவேல். புறத்தோற்றங்களைக் கடந்து தனது திறன், அறிவு ஆகியவற்றின் மீது நம்பிக்கைகொள்வது என்றார் எழில். எப்படி? என்று வினவினாள் இளவேனில். அதனை அறிவுக்கனியின் கதையின் வழியாகப் பார்ப்போம் என்ற எழில் அக்கதையைத் தொடர்ந்தார்.
எனக்கு வாய்ப்பு தாருங்கள்! - அறிவுக்கனிக்குக் கொடுக்க மறுத்த அரசர் வேடத்தை வேறொருவருக்குக் கொடுத்தனர். நாடக ஒத்திகை தொடங்கியது. அரசன் வேடமிட்டவரால் ஓர் அரசனுக்குரிய கம்பீரத்தோடு பேசி, மிடுக்கோடு நடிக்க முடியவில்லை. அதனால் அவரை நீக்கிவிட்டு, வேறொருவருக்கு அவ்வாய்ப்பைக் கொடுக்கின்றனர். அவரால் அவ்வேடத்திற்குரிய உடல்மொழியை வெளிப்படுத்த முடியவில்லை. வேறு சிலரும் அவ்வேடத்தை முயன்று பார்க்கின்றனர். யாரும் அவ்வேடத்திற்குப் பொருத்தமாக இல்லை.
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த அறிவுக்கனி, ‘எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் நடித்துப் பார்க்கிறேன்’ என்று கேட்டான். ‘எங்களாலேயே முடியவில்லை. நீ நடிக்கப்போகிறாய். சரி...ஆசைக்கு நடித்துப்பார்’ என்று அறிவுக்கனியை வேடங்கட்ட அனுமதித்தனர். அறிவுக்கனி எழுந்து மேடையேறினான். இரண்டு, மூன்று முறை மேடையை அளவெடுப்பதுபோல நடந்தான். பின்னர், ஓர் அரசனுக்குரிய கம்பீரத்தோடு பேசி மிடுக்கோடு நடித்தான். அதுவரை அவனைக் கிண்டல் செய்தவர்கள் அவனை வியந்து பார்த்தனர். அந்த வேடத்தை அவனே ஏற்று நடித்தான் என்றார் எழில். அதாவது எச்சூழலிலும் தன்னைப்பற்றித் தானே தாழ்வாக எண்ணமால் இருப்பது இழிவை எதிர்கொள்ள இன்னொரு வழி என்றான் தேவநேயன். ஆம் என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com