கழுகுக் கோட்டை 16: சகோதர சூழ்ச்சியோ செப்படி வித்தையோ

கழுகுக் கோட்டை 16: சகோதர சூழ்ச்சியோ செப்படி வித்தையோ
Updated on
2 min read

திருச்சேந்தி சொன்ன வார்த்தையைக் கேட்ட அடுத்தக் கணமே திடுக்கிட்டுப் போனார் திருவிடங்கன். ‘அடப்பாவி, நமது குலமே மன்னர் குடியைக் காப்பதற்கென்றே பிறவியெடுத்தது. அப்படிப்பட்ட இந்தக் குடியிலேயே பிறந்து, குலத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்பாக ஆகிவிட்டாயே? இனி ஒருக்கணமும் நீ இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் உனது உயிர் உன்னுடையது அல்ல. எத்தனையோ உயிர்களைப் பலியெடுத்த எனது வாளுக்கு தந்தை தனயன் என்கிற உறவெல்லாம் தெரியாது’ என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘உனது நஞ்சு நிறைந்த நெஞ்சில் எனது வாள் விரைவாகப் பாய்ந்து உனது உயிரைப் போக்கிவிடும். ஒரு தந்தையாக உனக்கு நான் கொடுக்கும் கடைசி வாய்ப்பு. புத்தியிருந்தால், உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இந்த நாட்டை விட்டு ஓடித் தொலைந்து போ. இனி என் முகத்தில் சாகும் வரை நீ விழிக்கக் கூடாது’ என்று கொந்தளித்தார். திருச்சேந்திதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து திருத்தோன்றியை அவ்விடத்தை விட்டு அகற்றி,அவனுக்குத் தேவையான பொன், பொருள் உதவிகளைத் தந்து ஒரு குதிரையில் அமர்த்தி விடையளித்து வைத்தார்.

அப்போது திருத்தோன்றி, ‘எனதுநாட்டை விட்டே என்னை நாடுகடத்துகிறீகளா? இருக்கட்டும். இதற்கும் ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்’ என்று கூறிச் சென்றான். அதுதான் அவனைக் கடைசியாகப் பார்த்தது. அதிலிருந்து இப்போதுதான் மறுமுறை திருச்சேந்திக்கு அவனைப் பார்க்க நேர்ந்தது. இத்தனை காலத்தில் அவனது கெடு எண்ணம் அகன்றுநல்லவனாக மாறி எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பான் என்று நினைத்தது எத்துனைப் பெரிய தவறு என்று விதியை நொந்துகொண்டார் திருச்சேந்தி.

மக்கள் புரட்சிப்படைத் தலைவன் வந்திருப்பதாகச் சொல்லி, தனது முகத்தை மறைத்து, வாள் சண்டையில் சற்று நிதானம் தவறியதால், முகமூடியை எனது முகத்தில் மாட்டி, சூழ்ச்சியால் தானே திருச்சேந்தி என்று எனது படையையே நம்பவைத்து, எனது மாளிகையிலேயே என்னைச் சிறை வைத்து, என்னைக் கொல்லாமல் கொன்றுவிட்ட உடன் பிறந்த சகோதரனால் இப்படிப்பட்ட நிலைமை தனக்கு வந்துவிட்டதே. இதிலிருந்து எவ்வாறு மீள்வது என்று பலவாறாக சிந்தித்து சோர்ந்து போனார் திருச்சேந்தி.

அதே நேரம், மக்கள் புரட்சிப்படையின் தூதுவனாக மன்னரைச் சந்தித்து வரவேண்டும் என்று பெரியவர் சொன்னதைக் கேட்ட குணபாலன், கடைசியாக தனது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தைச் சந்தித்து வந்து இந்த வேலையைச் செய்கிறேன் என்றான். ஆனால், அதற்கும் அந்தப் பெரியவர் ஒப்புக்கொள்ளவில்லை.

மேலும் தங்களுக்கு கால அவகாசம் இல்லை என்றார்.குணபாலனுக்கோ, தான் வசமாக சிக்கிக்கொண்ட பலி ஆடு போன்ற உணர்வு வந்து சென்றது. வேறு வழியின்றி அந்த வேலைக்கு ஒப்புக்கொண்டான். இன்னும் இரண்டு தினங்களில் நிறைந்த பவுர்ணமி வருகிறது. அன்றைய தினமே குணபாலன் மன்னரைச் சந்திக்க வேண்டும் என்று நாள் குறிக்கப்பட்டது.

மன்னரைச் சந்திக்கச் செல்லும் தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், ஏரிக்கரைப் பொந்தில் தன்னை நம்பி வாழும் கழுகுக் குஞ்சுகளுக்கு உணவளித்து ஆதரிப்பவர் யார் என்கிற யோசனை இப்போது குணபாலனுக்கு வந்து சென்றது. அதற்கு மலையடிவார கிராமத்திலிருந்து எவரையாவது பிடித்து வந்து பணியமர்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள் காலையிலேயே அதற்கான ஆளைத் தேடி கிராமத்தினுள் புகுந்து அலைந்துகொண்டிருந்தான். அப்போது ஓரிடத்தில் மக்கள் அனைவரும் வட்டமாக நின்று ஆரவாரமாக எதையோ ரசித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தான்.

அந்தக் கூட்டத்தின் நடுவே ஒரு செப்படி வித்தைக்காரன் சில கண்கட்டு வித்தைகளை மாயம் என்றும் மந்திரம் என்றும் சொல்லி மக்களை ஒருவித ஆச்சரியத்தில் வைத்திருந்தான். அவனதுஅருகில் சில மூட்டை முடிச்சுகளும் தட்டுமுட்டுச் சாமான்களும் சில கூடைகளும் இருந்தன.

கூட்டத்தில் அனைவருக்கும் கேட்கும் விதமாக சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தான் அவன். ‘இதோ இந்தக் கூடையைப் பாருங்கள் இதில் என்ன இருக்கிறது?’ என்றான். அனைவரும் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக் கூடை என்றனர். அதனைக் கட்டாந்தரையில் கவித்துப் போட்டான்.

பிறகு வேறொரு கூடையைத் தன்கையிலிருந்த சிறிய குச்சியால் மூன்றுமுறைத் தட்டிவிட்டுத் திறந்து காட்டினான். அங்கே அழகான ஒரு மாங்கன்று முளைத்திருந்தது. சன்று முன் தன்னால் கவிழ்த்துப் போடப்பட்ட இந்தக் கூடையின் உள்ளே மாங்கன்றுமுளைத்ததும் தன் மந்திர மாயாஜாலத்தால்தான் என்றான். கூட்டம் ஆச்சரியத்துடன் கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தது.

பிறகு ஒவ்வொரிடமும் சென்று சில்லரைக் காசுகளை வசூல் செய்தான். காசுபோடாதவர்கள் வருகிற அமாவாசைக்குள் ரத்தம் கக்கிச் சாக நேரிடலாம் என்றான்.பயந்தவர் அனைவரும் காசு போட்டனர். மறுபடியும் ஏதேதோ பேசி நேரத்தைக் கடத்தியவன் கடைசியாகக் கவிழ்த்துப் போட்ட கூடைக்கு அருகில் வந்து நின்றான். அந்தக் கூடையையும் குச்சியால் மூன்று முறை தட்டிவிட்டுத் திறந்தான். அப்போது அந்தக் கூடையில்…

(தொடரும்).

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in