

இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவரும் ‘தாதாமோனி’ (அண்ணன்) என்றுதிரையுலகினரால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான அசோக் குமார் (Ashok Kumar) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# பிஹார் மாநிலம் பகல்பூரில் (அன்றைய வங்காள மாகாணம்) 1911-ல் பிறந்தார். குமுத்லால் கஞ்சிலால் கங்குலி என்பதுஇயற்பெயர். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரசிடென்சி கல்லூரியில் சட்டம் படித்தபோதிலும், வழக்கறிஞர் தொழிலில் ஆர்வம் இல்லை.
# சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞராகப் பணிபுரிய விரும்பினார். இவரது அண்ணன் சஷாதர் முகர்ஜி, பாம்பே டாக்கீஸில் வேலை செய்துவந்தார். 1930-களில் இவரும் அங்கு சென்று, தொழில்நுட்பக் கலைஞராகப் பணிபுரியத் தொடங்கினார்.
# நடிக்கும் வாய்ப்புகூட எதேச்சையாகத்தான் கிடைத்தது. ‘ஜீவன் நையா’ என்ற படத்தில் நஜ்முல் ஹசன் நடிக்க முடியாத சூழலில் அவருக்கு பதிலாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சினிமாவுக்காக ‘அசோக் குமார்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அரை மனதுடனேயே நடித்தார்.
# அதே ஆண்டில் ‘அச்சுத் கன்யா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. தேவிகா ராணியுடன் சேர்ந்து நடித்த அந்த படம் இமாலய வெற்றி பெற்றது. இதையடுத்து, ‘ஜன்ம பூமி’, ‘சாவித்ரி’, ‘வசன்’ உள்ளிட்ட பல படங்களில் இந்த வெற்றி ஜோடி வலம் வந்தது.
# ‘கங்கண்’, ‘பந்தன்’, ‘ஆஸாத்’, ‘ஜூலா’ ஆகிய திரைப்படங்கள் இவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தின. முதன்முதலாக இவர் வில்லத்தனமான நாயகனாக நடித்து, 1943-ல் கியான் முகர்ஜி இயக்கிய ‘கிஸ்மத்’ திரைப்படம் இந்தியத் திரையுலகின் அதுவரையிலான அனைத்து சாதனைகளையும் முறியடித்து, அமோக வசூலையும் குவித்தது.
# இந்தியத் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். ‘சல் சல் ரே நவ்ஜவான்’, ‘ஷிகாரி’, ‘சாஜன்’, ‘சர்கம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை ஈட்டின. ‘ஜுவல் தீஃப்’, ‘ஆஷீர்வாத்’, ‘புரப் அவுர் பஸ்சிம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
# ஒரே மாதிரி வேடங்களில் நடிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். தேவ் ஆனந்த், திலீப் குமார், ராஜ் கபூர் என பல நாயகர்கள் வந்தாலும் இவரது புகழ் மங்கவில்லை.
# ‘ஹம்லோக்’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். ‘ஜித்தி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தார். 275 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறந்த ஓவியர், ஹோமியோபதி மருத்துவராகவும் திகழ்ந்தார்.
# சிறந்த பாடகர், நடிகரான கிஷோர் குமார் இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. 1987-ல் இவரது பிறந்த நாளன்று தம்பி கிஷோர் இறந்ததால், அதுமுதல் இவர் தன் பிறந்தநாளை கொண்டாடவே இல்லை.
# சங்கீத நாடக அகாடமி விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், சிறந்த நடிகருக்கான தேசிய விருது, தாதா சாஹேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தி திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்த அசோக் குமார் 90-வது வயதில் (2001) மறைந்தார்.