மாறட்டும் கல்விமுறை - 16: குச்சி, கஞ்சி; கங்கை, காகம்

மாறட்டும் கல்விமுறை - 16: குச்சி, கஞ்சி; கங்கை, காகம்
Updated on
2 min read

குச்சி கஞ்சி என்னும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். இரண்டிலும் 'சி' என்ற எழுத்து வந்துள்ளது. ஆனால், உச்சரிப்பு வேறு வேறாக இருக்கிறதா? கங்கை காகம் என்னும் சொற்களில் வந்துள்ள க என்ற எழுத்துகளின் உச்சரிப்பும் வேறுபட்டிருக்கிறதல்லவா? பிறகு ஏன் “தமிழ் ஆங்கிலம் போலல்ல. எழுதுவதுபோலவே வாசிக்கக் கூடிய மொழி” என்று சொன்னீர்கள்?

இது 6-ம் வகுப்பு குழந்தை கேட்ட கேள்வி. இங்கு நான் மொழியியல் பற்றிப் பேசாமல் இக்கேள்வி கேட்கத் தூண்டிய குழந்தையின் சிந்தனையைப் பற்றி, அதன் பின்னணியைப் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன்.

கேள்வியின் பின்னணி: தொடக்க வகுப்புகளிலும் குழந்தைகள் இத்தகைய வினாக்களைக் கேட்டுள்ளார்கள். “கொழி என்பதை ஏன் கோழி என்று வாசிக்கக் கூடாது? துணைக்கால் வரும்போது நீட்டி வாசிக்க வேண்டும் என்று சொன்னீர்களே?”

“எந்தப் பாத்திரத்தில் திரவத்தை எடுத்தாலும் அது அந்தப் பாத்திரத்தின் வடிவத்தைப் பெறும். திடப்பொருளுக்கு அதற்கே உரிய வடிவம் உண்டு என்கிறீர்களே. ஒரு குடுவையில் மணலை எடுத்தால் அது அந்தக் குடுவையின் வடிவத்தைப் பெறுகிறது. டம்ளரில் மணல் எடுத்தால் டம்ளரின்வடிவத்தைப் பெறுகிறது. அப்படியானால் மணலைத் திரவம் என்று சொல்லலாமா?”

இதுபோன்ற பல கேள்விகளை குழந்தைகள் கேட்கின்றனர். அது எதனால் என்று பார்ப்போம்.

பெரியவர்கள் கற்பிக்கும் சூழல்: பெரியவர்கள் சொல்லிக்கொடுக்கும் சூழலைக் கூர்ந்து கவனித்தால் கீழ்க்காணும் கருத்துகள் புலப்படும்.

# பெரியவர்களின் நிலை சற்று உயர்ந்திருக்கும். குழந்தைகளின் நிலை தாழ்ந்திருக்கும்.

# பள்ளிக்கூடத்தின் சூழலும் வகுப்பறையின் அமைப்பும் ஆசிரியர்கள் என்ற பதவியும் எல்லாம் சேர்ந்து ஆசிரியர்கள் சொல்பவற்றை வேதவாக்கியங்கள் போல குழந்தைநினைத்துக்கொள்ள காரணமாகிறது.

# ஒரு கருத்தை பலமுறை நினைவுபடுத்தி, வலுவூட்டி, தேர்வு வைத்து... என அத்தனையும் செய்யும்போது குழந்தைகள் அந்தக் கருத்துக்கு அளவற்ற முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அப்படி ஏற்றுக்கொண்ட கருத்துகள்தவறாகும்போது அல்லது அக்கருத்துக்கு விதிவிலக்கான சூழலைச் சந்திக்கும்போது குழந்தைகள் தடுமாறிப்போகின்றனர்.

பிழை வருவது இதனாலே... ஒரு கருத்தை ஆழமாகப் புரிந்துகொண்டால், அதற்கு விதிவிலக்குகள் வரும் இடங்களிலெல்லாம் குழந்தைக்கு ஏற்படுவதுதான் பிழை. எத்தனை முறை அச்சூழல் ஏற்பட்டாலும் முன்பு கற்றதையே குழந்தை பின்பற்றுவதைக் காணலாம். புதுவிதி உருவாக்க குழந்தை சிரமப்படுவதைக் காணலாம்.

இக்கருத்தை புரிந்துகொள்ள ஆங்கிலத்திலுள்ள சில எடுத்துக்காட்டுகள் உதவும். ஆங்கிலத்தில் ஒரு சொல்லின் பன்மை வடிவத்தைக் கண்டுபிடிக்க அச்சொல்லுடன் S சேர்த்தால் போதும் என்ற கருத்து ஆழமாகப் பதிந்திருந்தால் babys என்று எழுதும். வினைச்சொல்லின் இறந்தகால வடிவம் காண வினைச்சொல்லோடு ed சேர்த்தால் போதும் என்று சொல்லிக்கொடுக்கும்போது maked என்று எழுதுகிறது.

என்னதான் செய்வது? - புதுடெல்லிக்குத் தொடர்வண்டியில் பயணம். ஆந்திரா எல்லையைக் கடப்பதற்குள்ளே பெட்டியில் நிறைய இந்திபேசும் நண்பர்கள் ஏறத் தொடங்கினார்கள். அவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடுவதைக் கவனித்துக்கொண்டிருந்தான் என் மூன்று வயது மகன். புதுடெல்லியை அடைந்து கீழே இறங்கியதும் “எனக்கு ஐஸ்க்ரீம் வேணும் ஹை” என்றான்.

இந்தி பேசும் நண்பர்கள் வாக்கியங்களின் இறுதியில் ஹை, ஹே ஹோஎன்றெல்லாம் சேர்ப்பதைக் கவனித்தபோது புரிந்துகொண்ட கருத்து இது. இங்கு குழந்தையே தனக்குக் கிடைத்த அனுபவங்களிலிருந்து விதியை உருவாக்குகிறது. இதுவே சுயக்கற்றல். இத்தகைய கற்றலுக்கான திறமை குழந்தைகளுக்குப் பிறவியிலேயே கிடைக்கப்பெற்றுள்ளது.

வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் வரும்போது அதுவரை கற்றவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒதுக்கிவிட்டுப் புதுக்கருத்தை அரவணைத்துக்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வார்கள்.

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in