தயங்காமல் கேளுங்கள் - 45: திடீர் பல் வலி எதனால்?

தயங்காமல் கேளுங்கள் - 45: திடீர் பல் வலி எதனால்?
Updated on
2 min read

ஸ்கூல் ரீ-ஓபனாகி ஒரு வாரம் கூட ஆகல திடீர்ன்னு பல்லு வலியும் காய்ச்சலும் வந்து, ஸ்கூலுக்கும் லீவ் எடுக்க வேண்டியதாயிடுச்சு லீனாவுக்கு. அவளை செக் பண்ணின டாக்டர், அவளுக்கு மூணு பல்லுல சொத்தை இருக்கறதாவும், அதுக்கு 'ரூட் கேனால்' பண்ணனும்னும் சொல்றாரு. ட்ரீட்மென்ட்க்கு வேற திரும்பத்திரும்ப போக வேண்டியிருக்கும் போலருக்கு. டென்த் படிக்கற சமயத்துல என்ன பண்றதுன்னே தெரியல டாக்டர் என்று 10-ம் வகுப்பு பயிலும் தன் மகளுக்காக ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார் லீனாவின் தாயார்.

பல்லு போனால் சொல்லு போச்சு என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் பல்லுக்கும் சொல்லுக்கும் மட்டுமல்ல பல்லுக்கும் நமது உடல் ஆரோக்கியத்துக்குமே தொடர்புண்டு என்பதுதான் உண்மை.

நாம் சாப்பிடும் உணவைக் கடித்து, மென்று உட்கொள்ள உதவுவதோடு, பேசுவது, சிரிப்பது என நம் முகத்தின் அழகுக்கும் அகத்தின் அழகுக்கும் பற்கள் முக்கியம். ஆனால் இந்தப் பற்களில் மட்டும் வலி வந்துவிட்டால், உணவு, பேச்சு, சிரிப்பு மட்டுமன்றி உடலின் மற்ற அனைத்து செயல்களையும் மட்டுப்படுத்தி, மற்ற எல்லா வேலைகளையுமே நிறுத்திவிடுகிறது என்பது தானே நிதர்சனம்.

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோய்: உலகளவில், குறிப்பாக வளரும் நாடுகளில் சொத்தைப் பல் அல்லது பல் வலிஇல்லாத குழந்தைகளே இல்லை என்றுசொல்லுமளவுக்கு அதிகளவில் காணப்படுவதுதான் இந்த பற்சிதைவு. அதிலும் அந்த வயதில் இவர்களுக்கு வரும் பெரும் வலியே இந்த பற்சிதைவு என்பதுதான் உண்மை.

மேலும் ஒரு சாதாரண பற்சிதைவு என்பது இருதய நோய், மூளைக் காய்ச்சல், சிறுநீரக பாதிப்பு என பல ஆரோக்கியக் கேடுகள்வரை கூடக் கொண்டு செல்லும். இத்தகைய பற்சிதைவும் பல் வலியும் ஏன் ஏற்படுகிறது, அதற்கான தீர்வுகள் தான் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முதலில் நமது பற்களின் அமைப்பைப் பற்றியும் அவற்றின் நோய்ப்பாதுகாப்புத் திறன் பற்றியும் அறிவது அவசியமாகிறது.

‘பளிச்’ என வெண்மையாக வெளியேதெரியும் பல்லின் மேற்பகுதி crown, கண்ணுக்குத் தெரியாத கீழேயுள்ள வேர்ப்பகுதி root என்று அழைக்கப்படுகின்றது. இதில் crown-ஐ ‘எனாமல்' என்றும், அதன் உள்ளே இருக்கும் இரு அடுக்குகளை ‘டென்டைன்' மற்றும் ‘டென்ட்டல் பல்ப்' என்றும் பல் மருத்துவர்கள் பிரிக்கிறார்கள்.

‘ஹைட்ராக்சி எபிடைட்' எனும் கால்சியம் மற்றும் ஃபாஸ்பேட் கனிமங்களால் ஆன ஒரு ஸ்டீல் கம்பியின் உறுதியுடன் கூடிய மிகக்கடினமான பகுதிதான் எனாமல். இந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் மற்றும் நரம்புகள் காணப்படுவதில்லை என்பதால் நீங்கள் எதையும்‌ கடிக்கும்போது உங்களுக்கு எனாமலில் வலி உணர்வு ஏற்படுவதில்லை.

இதற்கு உள்ளே இருக்கும் டென்டைன் பகுதி கால்சியம் மற்றும் நீர்த்தன்மையுடன் சற்று மென்மையாக இருப்பதுடன், அது ஒரு கான்கிரீட் போல எனாமலுக்கு உள்ளிருந்து பலத்தையும் கொடுக்கிறது. அதற்கடுத்து, உள்ளே இருப்பதுதான் டென்டல் பல்ப் எனும் வேருக்குள் இருக்கும் உயிர்ப்பகுதி. இதுவே பற்களை வேர்ப்பகுதியுடன் இணைத்து, பற்களை தாடை மற்றும் முக எலும்பு மண்டலத்தில் அழுத்தமாகப் பதித்து வைக்கிறது.

இந்த பல்ப்பில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் வழியாகத்தான் பல்லுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் வழங்கப்பட்டு அவை ஆரோக்கியமாக பாதுகாக்கப்படுகின்றன.

(பல் ஆலோசனை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in