

தன் மடாலயத் தோட்டத்தில் இருந்த பல்வகைப்பட்ட செடிகளுள், பட்டாணிச் செடிகளை மெண்டல் தேர்வு செய்தார். சுருங்கிய விதை × உருண்டையான விதை; பச்சை நிற விதை × மஞ்சள் நிற விதை; ஊதா நிறப் பூ × வெள்ளை நிறப் பூ என வேறுபட்ட பண்பு நிலையிலான 7 ஜோடி பட்டாணிச் செடிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.
ஒரு வசந்த காலத்தில் மஞ்சள் நிற பட்டாணிப் பூவின் இதழ்களை வெட்டியெறிந்து தன் பரிசோதனையைத் தொடங்கினார். மகரந்தப் பையிலிருக்கும் தூள், அதே பூவின் கருவுக்குள் செல்லாதபடி மகரந்தக் குச்சியை உடைத்தார். அதற்கு மாறாக பச்சை நிற பட்டாணிப் பூவின் மகரந்தங்களை மஞ்சள் பூவின் கருவில் வைத்து உரசினார். பரிசோதனைக்கு உட்படுத்தும் பூவினை பட்டாம்பூச்சிகளும் வண்டினங்களும் தீண்டாதபடி ஒரு சிறிய சாக்கு வைத்து கட்டினார்.
இப்படியாக 287 பட்டாணி மலர்களை தன் கைப்பட கலப்பு செய்து சாக்கு வைத்து கட்டினார். பூப்பூக்கும் காலம்வரை அமைதியாகக் காத்திருந்தார். பின்னர் அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
காணாமல் போன பண்புகள் எங்கே? - கலப்பு செய்த மஞ்சள் நிற விதைகளும் பச்சை நிற விதைகளும், தன் அடுத்த சந்ததியில் வெறும் மஞ்சள் நிற பட்டாணிகளை ஈன்றன. அதேபோல் சுருங்கிய விதைகளும் உருண்டையான விதைகளும் உருண்டையான பட்டாணிகளை மட்டுமே ஈன்றன. மெண்டல் திடுக்கிட்டார். பச்சை நிற விதைகளின் பண்பும், சுருங்கிய விதைகளின் பண்பும் எங்கே போயின என்று ஆச்சரியப்பட்டார்.
ஹைபிரிட் விதைகள் மீண்டும் கலப்பு செய்தபோதும் அடுத்தடுத்த சந்ததியில் மீண்டும் பழைய பண்புகள் தோன்றுவதைக் கண்டு தன் கணித அறிவினால் ‘ஒரு முறைமாதிரி’ பின்பற்றப்படுவதைக் கண்டறிந்தார். இப்படித்தான் மரபுச் சங்கிலியை மெண்டல் கண்டடைந்தார்.
காலம் கண்டுகொள்ளாத ஆய்வாளர்: தன் 8 ஆண்டுகால நெடிய ஆராய்ச்சியில் 28,000 பட்டாணிச் செடிகளை மெண்டல் விதைத்திருந்தார். பட்டாணிகளைத் தவிர்த்து 14 வகைப்பட்ட வேறு செடியினங்களிலும் அவர் ஆய்வுப் பரப்பு விரிவடைந்தது. 1865இல் பெறனோ இயற்கை வரலாற்றுச் சங்கத்தில் இவ்வாய்வை எடுத்துச் சொன்னார். அறிவியல் சஞ்சிகையில் கட்டுரையாக வெளியிட்டார்.
பட்டாணியில் என்ன பெருங்கதை இருக்கிறது என்று எல்லோரும் உதாசீனப்படுத்தினார்கள். இதுதான் மரபணு என்று வெளிப்படையாக காண்பிக்க, அன்றைய காலத்தில் நுண்ணோக்கிகளும் இல்லை. ‘எனக்கான காலம் வரும்’ என்று கடைசிவரை காத்திருந்த கிரிகர் மெண்டல் தன் 63வது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.
மெண்டலுக்கு அங்கீகாரம்: 1900ஆம் ஆண்டு மூன்று வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த அறிவியல் அறிஞர்கள், 1865இல் மெண்டல் வெளியிட்ட கட்டுரையைப் படித்து அதிர்ந்து போனார்கள். விரைவில் அவரை உலகறியச் செய்தனர். தன் வாழ்நாளில் கிடைக்காத அங்கீகாரமும் மரியாதையும் இறந்த பிற்பாடு மெண்டலுக்கு வந்தது.
அவர் வரையறுத்த கோட்பாடுகள் மெண்டலியன் விதிகள் என்று அழைக்கப்பட்டன. முதல் மரபணுவியலாளர் என்றதோடு, மரபியலின் தந்தை என்றும் நினைவுகூரப்படுகிறார். காலம் கடந்தும் மரபு வழிபட்டு மெண்டலின் ஆராய்ச்சிகள் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் துணையாக நிற்பதற்கு நாமே சாட்சி.
- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com