

கடன் இல்லாத வாழ்வே எல்லோரின் கனவாக இருக்கிறது. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், திடீர் செலவினங்களின் காரணமாக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். உறவினர்களும் நண்பர்களும் உதவாத நிலையில் கடன் கொடுக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அடகு கடைகள், வட்டிக்கு விடும் நபர்களை நாடுகிறோம். எவ்வளவு வட்டி என்பதை சரியாக விசாரிக்காமல் கடனில் சிக்கிக் கொள்கிறோம்.
கடன் வாங்குவதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும். நிதி விவகாரங்களில் பொறுமையே அதிக பலனை தரும். அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்குகிறோமா? ஆடம்பர தேவைக்காக வாங்குகிறோமா? என்ற கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இந்த கடனால் ஏற்படும் சாதக, பாதகங்களை ஒரு காகிதத்தில் எழுதி ஆராய்வது சரியானது.
2 வகை கடன்கள்: நிதி மேலாண்மையை கற்றறிந்த நிபுணர்கள், கடனை முற்று முழுதாக தவறு என்று சொல்வதில்லை. நிறைய பேர் கடனை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறியுள்ளனர். கடன் வாங்கி தொழில் தொடங்கி கோடீஸ்வரர் ஆனவர்களும் இருக்கின்றனர். ஜீரோவில் இருந்து நூறு கோடிகளை சம்பாதித்த டேவ் ரான்சே, 'கடனை நல்ல வாய்ப்பு' என்று குறிப்பிடுகிறார். கடனில் நல்ல கடன் (Good Debt), கெட்ட கடன் (Good Debt) என 2 வகைகள் உள்ளன.
எது நல்ல கடன்? - கடனில் நல்ல கடனா? கடன் என்றாலே கெட்டது தானே? என நிறைய பேர் கேட்கிறார்கள். நீண்ட காலமாக வேலைத் தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞருக்கு மார்க்கெட்டிங் வேலை கிடைத்திருக்கிறது. அந்த வேலையில் சேர அவருக்கு பைக் தேவைப்படுகிறது. அதற்காக அவர் வாகனக் கடன் மூலம் பைக் வாங்குகிறார்.
நன்றாக வேலை செய்ததால் அவருக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. வாகனக் கடனுக்கு மாதம் ரூ.4000 செலுத்துகிறார். மீத வருமானமாக அவருக்கு ரூ.16 ஆயிரம் கிடைக்கிறது. அத்தியாவசிய தேவைக்காக வாங்கிய பைக் மூலம் அவரது வருமானமும் அதிகரித்திருக்கிறது. அந்த வருமானத்தைக் கொண்டே வாகன கடனையும் அடைத்து விடுகிறார். தன் வாழ்க்கையையும் உயர்த்திக் கொள்கிறார். இதனை நல்ல கடன் எனலாம்.
மதிப்பு உயர வேண்டும்: கடன் மூலம் வாங்கும் பொருளின் வாயிலாக அதிக வருமானம் கிடைக்க வேண்டும். அந்த பொருளின் வருமானத்தை கொண்டே அதற்கான கடனையும் அடைக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் அந்த கடன், நல்ல கடன் ஆகும். கடனாக வாங்கப்படும் பொருளின் மதிப்பு, அதற்கு செலுத்தப்படும் வட்டியைவிட அதிகமான வருமானத்தை கொடுத்தால் அதுவும் நல்ல கடன். அதாவது, கடன் பெற்று வாங்கப்படும் பொருளின் மதிப்பு உயர்ந்தால் (appreciating value) நல்ல கடன், மதிப்பு குறைந்தால் (depreciating value) கெட்ட கடன் என எளிமையாக கண்டறியலாம்.
கல்விக்காக குறைந்த வட்டியில் வாங்கப்படும் கடன், நல்ல முதலீட்டுக்காக குறைந்த வட்டியில் வாங்கப்படும் கடன், தொழிலுக்காக மானிய விலையில் கிடைக்கும் கடன், விவசாயத்துக்காக தள்ளுபடி செய்யப்படும் கடன் ஆகியவற்றை நல்ல கடன் பட்டியலில் சேர்க்கலாம்.
எது கெட்ட கடன்? - சிலர் தங்களிடம் ஒரு செல்போன் இருக்கும்போதே மற்றவர்களை பார்த்து, அவர்களைப் போலவே கடன் வாங்கி மற்றொரு செல்போனை வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்கிய செல்போன் மூலம் எந்த வருமானமும் கிடைக்காது. அதன் மதிப்பும் நாளுக்கு நாள் குறையும். இவ்வாறு ஆடம்பரத்துக்காக வாங்கும் கடனை, கெட்ட கடன் என குறிப்பிடலாம். கடன் மூலம் வாங்கும் பொருளால் அதன் வட்டியை மிஞ்சும் வருமானம் கிடைக்கவில்லை என்றால் அது கெட்ட கடன்.
அதிக வட்டிக்கு தனிநபர் கடன், கிரெடிட் கார்ட் கடன், மீட்டர் வட்டி கடன் வாங்குவது எல்லாம் கெட்ட கடன் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன. கடன் பெற்று வாங்கப்படும் உடைகள், தனிநபர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், வாகனங்கள், கடன் வாங்கி சுற்றுலா செல்வது, ஆடம்பரமாக செலவு செய்வது, குடும்ப சுப நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்துவது உள்ளிட்டவற்றை கெட்ட கடன் பட்டியலில் சேர்க்கலாம்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in