

தனிப்பாடல் திரட்டு நூலை வைத்துக்கொண்டு சுடரின் வருகைக்காகக் காத்திருந்தாள் குழலி.
சுடர்: என்ன குழலி, கையில் புத்தகத்தோட இருக்க. என்ன புத்தகம்...
குழலி: தனிப்பாடல் திரட்டு. உன்கிட்ட நேத்து ஒட்டக்கூத்தர் பாட்டைப் பத்திச் சொன்னேன்ல அதுக்காகத்தான்.
சுடர்: ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திப் புலவருக்கும் இடையில போட்டி நடந்ததாச் சொன்னயே அந்தப் பாட்டா...
குழலி: ஒட்டக்கூத்தருக்கும் கவிச்சக்கரவர்த்தின்னு பட்டம் உண்டு தெரியுமா. பனிரெண்டாம் நூற்றாண்டுல வாழ்ந்தார்னு சொல்றாங்க. அவரோட சமகாலத்துல தான் புகழேந்திப் புலவரும் இருந்தாராம்.
சுடர்: மூவர் உலாவைப் பாடின ஒட்டக்கூத்தர் தான...
குழலி: ஆமா சுடர். அவரேதான். அவரப் பத்தின கதைகள் நம்ப முடியாதளவுக்கு இருக்கு. தமிழ்ப் புலவர்னு சொல்லி யாராவது தமிழைத் தப்பாப் பேசினா, எழுதினா அவங்களச் சிறையில போடச் சொல்லிருவாராம். அந்த அளவுக்கு மன்னன் கிட்ட அதிகாரம் இருந்துச்சாம் ஒட்டக்கூத்தருக்கு. அவர் கேக்குற கேள்விகளுக்குச் சரியா பதில் சொல்லிட்டாத் தப்பிச்சாங்க. இல்லேன்னா சிரச்சேதம் தானாம்...
சுடர்: சரிதான். நல்லவேளை நாமெல்லாம் ஒட்டக்கூத்தர் காலத்துல பிறக்கல..
குழலி: குலோத்துங்கச் சோழனுக்காகப் பாண்டிய மன்னன் மகளப் பெண் கேட்டு ஒட்டக்கூத்தர் போனாராம். அப்ப பாண்டிய மன்னன், என் மகளைத் திருமணம் செய்து கொடுக்கறதுக்குச் சோழ நாடு எந்த வகையில பாண்டிய நாட்டைவிட உயர்வானதுன்னு கேட்டாராம். அப்பதான் ஒட்டக்கூத்தர் நான் சொன்ன பாட்டப் பாடினதாச் சொல்றாங்க.
சுடர்: கேட்கவே ஆர்வமா இருக்கு. அந்தப் பாட்டச் சொல்லு குழலி.
குழலி: கோரத்துக்கு ஒப்போ கனவட்டம் அம்மானை
கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானை
ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானை
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானை
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானை
வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ அம்மானை
ஊருக்கு உறந்தை நிகர் கொற்கையோ அம்மானை
ஒக்குமோ சோணாட்டுக்குப் பாண்டிநாடு அம்மானை
என்று புத்தகத்திலிருந்து பாடலை வாசித்தாள் குழலி.
சுடர்: இவ்வளவு பெரிய பாட்டா...நீயே பாட்டோட பொருளையும் சொல்லிடேன்.
குழலி: பாண்டியனும் பாண்டிய நாடும் சோழனுக்கும் சோழ நாடுக்கும் ஈடாகுமான்னு பொருள் வர்ற மாதிரிப் பாடின பாட்டு தான் இது.
கோரம்ங்கிறது சோழனுடைய குதிரை. கனவட்டம்ங்கிறது பாண்டியனோட குதிரை. பாண்டியனோட குதிரை, எங்க சோழ மன்னனோட குதிரைக்கு ஒப்பு ஆகுமா... ஆகாது.
பாண்டியனோட வேப்ப மாலை சோழனின் ஆத்தி மாலைக்கு நிகராகுமா... பாண்டிய நாட்டோட வைகை ஆற்றை சோழநாட்டுக் காவிரி ஆற்றுக்கு ஒப்பாச் சொல்ல முடியுமா... சோழ மன்னன் சூரிய குலத்தைச் சேர்ந்தவன். பாண்டியனோ சந்திர குலத்தைச் சேர்ந்தவன். சூரியனுக்கு நிலவு ஒப்பாகுமா.
சோழன் கொடியில் இருக்கக் கூடிய புலிச் சின்னத்திற்கு, பாண்டியனோட கொடியில இருக்கிற மீன் ஒப்பாகுமா...சோழனோட தலைநகர் உறையூர். பாண்டியனின் தலைநகர் கொற்கை. உறந்தைக்குக் கொற்கை நிகர் ஆகுமா....
இப்படி வரிசையாச் சோழ மன்னனோட, சோழ நாட்டோட பெருமையைச் சொல்லி, சோழ நாடு எல்லா வகையிலும் பாண்டிய நாட்டை விட உயர்வானதுதான்னு சொன்னாராம் ஒட்டக்கூத்தர்.
சுடர்: மன்னன் மேலயும், சோழ நாட்டு மேலயும் இப்படி ஒரு பற்றா ஒட்டக்கூத்தருக்கு... பாண்டிய மன்னன் இதக் கேட்டுப் பேசாமலா இருந்தாரு..
குழலி: எப்பவுமே நம்ம நாடு நமக்கு உயர்வானது தான... இந்தப் பாட்டுக்கு புகழேந்திப் புலவர் ஒரு எதிர்ப்பாட்டு பாடியிருக்காரு.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்னு சொல்வாங்க அதப் பத்தி இன்னொரு நாள் பேசுவோம் என்றார் அம்மா. இருவரும் விடைபெற்றார்கள்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com