

நான் பிளஸ் 2 படிக்கிறேன். சினிமா அனிமேஷன் அல்லது மீடியாவில் விருப்பம் அதிகமாக உள்ளது. அதில் நல்ல வேலை பெற என்ன படிக்க வேண்டும்? - மகேஷ்குமார், பிள்ளையார் பாளையம், காஞ்சிபுரம்.
நீங்கள் விரும்பும் துறை பல இலட்சக்கணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை தயாரிக்கும் நாடு இந்தியாதான். நம் மாநில மொழிப் படங்கள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. நம் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆஸ்கார் விருதுகளை பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்திய மொழிகளில் உள்ள டி.வி. சேனல்கள் மற்றும் விளம்பரப் படங்கள் சோஷியல் மீடியாக்கள் அனைத்தும் வேலை வாய்ப்பினை தகுதியான திறன் பெற்றவர்களுக்கு அள்ளி வழங்க காத்திருக்கின்றன.
திரைத்துறை மற்றும் ஊடகத் துறைகளில் பிராகாசிக்க பின்வரும் படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். இவற்றில் பல வெளி மாநிலங்களில் வழங்கப்படுகிறது.
1. பி.எஸ்சி. டெக் மீடியா சயின்ஸ் 2. பி.எஸ்சி. மல்ட்டி மீடியா புரடக்ஷன் 3. பேச்சுலர் ஆஃப் ஃபிலிம் டெக்னாலஜி 4. பேச்சுலர் ஆஃப் ஜர்னலிசம் அண்ட்கம்யுனிகேஷன் 5. பேச்சுலர் ஆஃப் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யுனிகேஷன் 6. பி.ஏ. டிஜிட்டல் அண்ட் மாஸ் மீடியா பிராட்கேஸ்டிங் 7. பி.பி.ஏ. வித் இவன்ட்ஸ், பி.ஆர். அண்ட் கார்போரேட் கம்யுனிகேஷன் 8. பி.ஏ. அட்வர்டைசிங் அண்ட் பிரான்ட் மேனேஜ்மெண்ட் 9. பி.ஏ.அட்வர்டைசிங் அண்ட மார்க்கெட்டிங், 10. பி.எஸ்சி. விஷ்வல் கம்யுனிகேஷன் 11. பேச்சுலர் ஆஃப் ஃபைன்ஆர்ட்ஸ் 12. பி.எப்.ட்டி. (பேச்சுலர் ஆஃப் ஃபிலிம் டெக்னாலஜி).
இவை மட்டுமின்றி மீடியா அண்ட் என்டர்டெயின்மெட் செக்டார் ஸ்கில் கவுன்சில் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. அதுபோலவே சென்னையிலுள்ள என்எஃப்டிசி (நேஷனல் பிலிம் டெவலப்மெண்ட் கார்பேரேஷன்) குறுகிய கால திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் ஃபோட்டோகிராபி, வீடியோ கிராப்பி மற்றும் எடிட்டிங் போன்றவை அடங்கும்.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.