போவோமா ஊர்கோலம் - 16: இந்தியாவின் பிங் நகரத்தில் ஒரு நாள்...

போவோமா ஊர்கோலம் - 16: இந்தியாவின் பிங் நகரத்தில் ஒரு நாள்...
Updated on
2 min read

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கும் ஜெய்சல்மரில் இருந்து ராஜஸ்தான் தலைநகரம் சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலைகள் கொஞ்சம் மோசமாக இருக்கும் இடத்தில் ஒரே நாளில் 600 கிலோமீட்டர் பயணிப்பது ரொம்பவே சவாலானது தான்.

நாம் ஏற்கெனவே இந்த பயணத்தில் இரண்டு முறை 600 கிலோ மீட்டருக்கு மேல் ஒரேநாளில் இருசக்கர வாகனத்தில் பயணித்திருக்கிறோம். அந்த தைரியத்தில் அதிகாலையிலேயே ஜெய்சல்மரில் இருந்து பயணத்தைத் தொடங்கிவிட்டோம். சாலையெங்கும் எச்சரிக்கை பதாகைகள் அந்த இருட்டிலும் மின்னிக்கொண்டிருந்தன. நிறைய இருக்கிறதே என்னவென்று பார்த்தோம், மாடுகள் அதிகம் நடமாடும் பகுதி ஜாக்கிரதை என்று எழுதி இருந்தது.

மாடுகளுக்கு எச்சரிக்கை பலகையா என்று யோசித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தோம். கொஞ்ச தூரத்திலேயே சாலை எங்கும் பசுமாடுகள் கூட்டம் கூட்டமாகப் படுத்து இருந்தன. நமக்குக் கிடைத்த வழியில் பொறுமையாக வண்டியை நகர்த்திக்கொண்டு தான் வந்தோம். இத்தனைக்கும் இது மாநில நெடுஞ்சாலை. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் என சில வடமாநிலங்களின் நிலைமை இப்படித்தான் இருக்கும். ஒரு வழியாக ஜெய்ப்பூர் வந்துசேர பின்னிரவு ஆகிவிட்டது.

காற்று வந்து செல்லும் மஹால்: வந்த களைப்பு தீர மறுநாள் மதியம் வரை எங்கும் செல்லவில்லை. கொஞ்ச எட்டிப் பார்க்காத மழை மீண்டும் ஜெய்ப்பூரில் வந்து சேர்ந்தது. மழை முடிந்த மாலை நேரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தைக் காணக் கிளம்பினோம். Pink City of India என்று ஜெய்பூரை அழைக்கிறார்கள்.

நாம் பார்த்து பழகிய பிங்க் நிறம் ஜெய்ப்பூரில் எங்கும் பார்க்க முடியாது. அங்கு இருக்கும் மலைகளில் கிடைக்கும் ஒருவித கற்களைக் கொண்டு ஜெய்பூர் நகர மாளிகைகள் அரண்மனைகள் கட்டப்பட்டிருக்கிறது. அது பிங்க் நிறமும் ஆரஞ்சு நிறமும் கலந்து காணப்படும் ஒரு நிறம். நுழைவு வாயில்கள், கடைவீதிகள் எல்லாமே இதே நிறத்தில்தான் இருக்கின்றன.

ஜெய்பூரின் மத்தியில் இருக்கும் ஹவா மஹாலுக்கு முதலில் சென்றோம். மாடி மீது மாடி என மிக அழகாக இருந்தது. பின்னர் தான் தெரிந்தது கிருஷ்ணரின் கிரீடம் போல இந்த கட்டடம் வடிவகைக்கப்பட்டு இருக்கிறது. மன்னர் சவாய் பிரதாப் சிங் 1799-ல் இந்த மஹாலை கட்டியிருக்கிறார். காற்று உள்ளே வருவதற்காக நிறைய ஜன்னல்கள் இருக்கிறது. காற்று வந்துசெல்லும் அரண்மனை என்ற பொருளில் இதை 'ஹவா மஹால்' என்று அழைக்கின்றனர்.

ஐந்து ஜந்தர் மந்தர்களா! - அடுத்து நாம் சென்ற இடம் ஜெய்பூர் அரண்மனை. அந்த அரண்மனையின் மைய மண்டபம், தர்பார் நடந்த இடம் இதையெல்லாம் மட்டுமே 120 ரூபாய் கொடுத்துப் பார்க்க முடியும். அதற்குமேல் பிரம்மாண்டமான கொண்டாடி அறை, சந்திர மஹால் இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்றால் இன்னும் 2500 ரூபாய் செலுத்த வேண்டும். நம்முடைய பட்ஜெட் பயணத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் கொஞ்ச நேரம் அந்த அரண்மனையை வெளியிலிருந்தே ரசித்துவிட்டு, ஜந்தர் மந்தருக்கு வந்தடைந்தோம்.

ஜெய்ப்பூர் ஜந்தர் மந்தர் யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பாரம்பரிய சின்னமாகும். அங்கு போகும் வரை அதுகுறித்த எந்தவித யோசனையும் இல்லாமல் தான் சென்றோம். வெட்டவெளியில் இருக்கும் ஒரு வானியல் ஆராய்ச்சிக்கூடமாக தெரிந்தது. 19 வானியல் கருவிகளின் தொகுப்புடன் உலகின் மிகப்பெரிய கல்லாலான சூரிய மணிகாட்டியும் இந்த ஜந்தர் மந்தரில் இருக்கிறது.

இங்குள்ள கருவிகளைக் கொண்டு வானியல் நிலைகளை கண்களாலேயே பார்க்கலாம். ஜெய்சிங் மன்னரின் ஆட்சி காலத்தில் புதுடெல்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜைன்,மதுரா மற்றும் வாரணாசியில் ஐந்து ஜந்தர்மந்தர்கள் கட்டப்பட்டன. நாம் பார்த்த இந்த ஜந்தர் மந்தர் நம்மை வியப்படையச் செய்தது. இப்படி எல்லாம் 18-ம் நூற்றாண்டிலேயே எப்படி கட்டி இருப்பார்கள் வான் அறிவியலை எப்படி துல்லியமாகக் கணித்திருப்பார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. மாணவர்கள் குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் இந்தஜந்தர் மந்தருக்கு வந்து இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in