முத்துக்கள் 10 - நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்

முத்துக்கள் 10 - நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்
Updated on
1 min read

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாடக ஆசிரியரும், எழுத்தாளர், நடிகர், கவிஞர் என பன்முகத்திறன் கொண்டவருமான ஹரோல்டு பின்ட்டர் (Harold Pinter) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# இங்கிலாந்து தலைநகர் லண்டனின் ஹாக்னி பகுதியில் யூதக் குடும்பத்தில் (1930) பிறந்தவர். பள்ளி நாட்களில் தடகள, கிரிக்கெட் வீரராக இருந்தார். தன்னைச் சுற்றி நிலவிய யூத எதிர்ப்பு உணர்வால் கடும் மனப் போராட்டத்துக்கு ஆளானார்.

# இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மன் படையினர் குண்டு வீசியதை நேரடியாகப் பார்த்தார். ‘வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சம்பவங்கள்தான் என்னை நாடக ஆசிரியராக மாற்றின’ என்பார். 12 வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்.

# கட்டாயப் போர் பயிற்சி, கட்டாய ராணுவ சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதில் இணையவும் மறுத்துவிட்டார். சிறு வயதில், கிராமப்புறங்களில் நடந்த நாடகங்களால் ஈர்க்கப்பட்டார். ராயல் நாடகக் கலை அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

# சிறு நாடகம் ஒன்றை 1957-ல் எழுதினார். பின்னர் எழுதிய ‘தி பர்த்டே பார்ட்டி’ நாடகம், இலக்கிய உலகத்தில் கவனம் பெற்றது. தொடர்ந்து பல நாடகங்கள் எழுதினார். தனது நாடகங்கள் மட்டுமின்றி, மற்றவர்களின் நாடகங்களிலும் டேவிட் பாரோன் என்ற பெயரில் நடித்தார்.

# கதாபாத்திரங்களின் ஆழ்மன பயங்கள், ஆசைகள், தீர்க்கப்பட முடியாத வேட்கைகளை இவர் சித்தரித்த விதம் மாறுபட்ட கோணத்தில் இருந்தது. இவரது பாணி ‘பின்ட்டரெஸ்க்’ என்று இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஏறக்குறைய 50 நாடகங்களை இயக்கியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.

# ‘கேர் டேக்கர்’ (1960), ‘ஹோம் கமிங்’ (1964) ஆகிய நாடகங்கள் அபார வெற்றி பெற்றன. ‘ஹோம் கமிங்’ நாடகம், இவரது ‘மாஸ்டர் பீஸ்’ ஆகும். ‘தி பேஸ்மென்ட்’, ‘தி டீ பார்ட்டி’, ‘ஓல்டு டைம்ஸ்’, ‘நோ மேன்ஸ் லேண்ட்’ என பல புகழ்பெற்ற நாடகங்களைப் படைத்தார்.

# ‘தி சர்வன்ட்’, ‘ஆக்ஸிடென்ட்’ உட்பட பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ‘தி பிரெஞ்ச் லெப்டினென்ட்ஸ் உமன்’ படத்துக்கு திரைக்கதை எழுதியதற்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

# 1980-களில் இவரது கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. அரசின் பொருளாதாரக் கொள்கை, அமெரிக்க - பிரிட்டிஷ் அரசுகளின் போர் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். போருக்கு எதிரான தன் கருத்துகளை கவிதைகளாகப் படைத்தார்.

# படைப்புகளால் பரபரப்பை ஏற்படுத்துவாரே தவிர, சொந்த வாழ்க்கையில் அமைதி விரும்பி. இவரது படைப்புகள் வானொலி நாடகங்களாகவும் ஒலிபரப்பாகின. ‘கெய்ட்டீஸ்’ என்ற கிரிக்கெட் கிளப் தலைவராகவும் இருந்தார்.

# இலக்கியத்துக்கான நோபல் பரிசை 2005-ல் பெற்றார். 50-க்கும் மேற்பட்ட விருதுகள், பரிசுகளைப் பெற்ற ஹரோல்டுபின்ட்டர் 75-வது வயதில் (2008) மறைந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in