

கடந்த ஆண்டு காற்றில் உமிழப்பட்ட பசுமைக்குடில் வாயுக்களின் அளவு தெரியுமா? 5100 கோடி டன். இதில் அதிகம் இடம்பெறுவது கரியமில வாயு. பசுமைக்குடில் வாயுக்கள்தான் காலநிலை மாற்றத்துக்கு மூலமாகவும், சுற்றுச்சூழல் பேரழிவுக்கு முக்கிய காரணியாகவும் இருக்கிறது என்று பார்த்தோம். இது தெரிந்தும் ஆபத்தான வாயுக்கள் தொடர்ந்து வெளியாவதற்கு நாம் ஏன் காரணமாக இருக்கிறோம் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜேம்ஸ் வாட் 18ஆம் நூற்றாண்டில் இருந்த நீராவி இயந்திரத்தில் ஒரு சில மாற்றங்களைச் செய்து மேம்பட்ட வகையிலான இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். அந்த இயந்திரம் நிலக்கரி சுரங்கத்தின் அடியில் தேங்கும் நீரை வெளியேற்றும் நோக்கத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், அது யாரும் எதிர்பாராத விதமாகப் பெரும் சமூக மாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது.
வாட் கண்டுபிடித்த நவீன நீராவி இயந்திரம் தொழில்புரட்சியைக் கொண்டு வந்தது. அதுவரை மனிதர்கள் தங்கள் உடல் உழைப்பாலும், விலங்குகளைக் கொண்டும் செய்து வந்த வேலையை மிகச் சுலபமாகவும், வேகமாகவும் இயந்திரத்தின் மூலம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக உற்பத்தி, விவசாயம், போக்குவரத்து என எல்லாதொழில் துறைகளும் மாறத் தொடங்கின. புதிய தொழிற்சாலைகள் உருவாகின.
நகரமயமாக்கல் அதிகரித்தது. ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தொடர்ச்சியாக மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டு எல்லா வீடுகளுக்கும் மின்சார வசதி சென்று சேர்ந்தது. இதனைத்தொடர்ந்து மின்சார சாதனங்கள் புழக்கத்துக்கு வர, மக்களின் வாழ்வாதாரம் உயரத் தொடங்கியது. இப்படியாக இயந்திரங்களும் மின்சாரமும் இன்று மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களாகிவிட்டன.
ஆனால், மேலே சொன்ன மாற்றத்தை வளர்ச்சியாக மட்டுமே நாம் கருதிவிட முடியாது. இதே காலக்கட்டத்தில்தான் காடுகள் அழிக்கப்பட்டன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டன. சுற்றுச்சூழல் சீரழியத் தொடங்கியது. மேலே சொன்னஇயந்திரங்கள் இயங்குவதற்கு ஆற்றல்வேண்டுமல்லவா? அதற்காக நிலக்கரி,எண்ணெய், இயற்கை எரிவாயு என பலவற்றை நாம் பயன்படுத்த தொடங்கினோம். இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த ஆண்டில் 5100 கோடி டன் ஆபத்தான வாயுக்களைச் சுற்றுப்புறத்தில் நாம் வெளியிட்டு இருக்கிறோம்.
(தொடர்ந்து விவாதிப்போம்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com