மகத்தான மருத்துவர்கள் - 45: அறிவியல் மனப்பான்மை ஊட்ட செய்த உயிர் தியாகம்

மகத்தான மருத்துவர்கள் - 45: அறிவியல் மனப்பான்மை ஊட்ட செய்த உயிர் தியாகம்
Updated on
2 min read

மற்றவர்களுக்கு சொல்வதை, முதலில் தான் பின்பற்றி ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதை எப்போதும் விரும்பினார் நரேந்திர தபோல்கர். ஆகையால் எளிமையான கதர் ஆடைகள், இரண்டாம் வகுப்புப் பயணங்கள், விடுதிகளில் தங்காமல் உடன் இருப்பவர்களின் இல்லங்களில் தங்கி உணவு உண்பது, அனைத்து தரப்பு மக்களிடமும் உரையாடுவது என்று தான் எளிமையாக வாழ்ந்ததோடு, தனது குடும்பத்தையும் அதையே கடைபிடிக்கச் செய்தார்.

அற்புதமான குடும்பம்: ஒருகட்டத்தில் தனது சிறிய தோட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு அதில் கிடைத்த அறுவடைகளையே பெரும்பாலும் உணவுக்காக உபயோகிக்க ஆரம்பித்தார். தான் மட்டுமன்றி தனது குடும்பத்திலும் எளிமையையும் சமூக அக்கறையையும் விதைத்திருந்தார் தபோல்கர்.

தனது மனைவி தன்னைப் போலவே ஏழை மக்களுக்கு மருத்துவப் பணி புரிவதை உறுதி செய்துகொண்டார் தபோல்கர். ஆனால், அவரது மனைவியோ இன்னும் ஒரு படி தாண்டி, மக்களுக்கான மருத்துவப் பணிகளோடு தபோல்கரின் சீரிய எண்ணங்களை பெண்களிடம் கொண்டு சேர்ப்பதை உரையாடல்கள் மூலமாகத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

அதேசமயம் விருப்பத்துடன் மனநல மருத்துவம் பயின்ற மகன் ஹமீது தபோல்கரை தான் தொடங்கிய பரிவர்தன் அமைப்பை நிர்வகிக்கவும் செய்தார் தபோல்கர். மகனது திருமணத்தை நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்காமல் எளிய முறையில் நடத்தி மக்களிடையே நாள் நட்சத்திரம் குறித்த மூட நம்பிக்கைகளை தகர்க்கவும் முயற்சி செய்தார்.

அதேபோல கல்வியாளராகவும் மனவியல் ஆலோசகராகவும் தனது மகள் முக்தா தபோல்கர் உயர வழிவகுத்தார் தபோல்கர். மகளின் விருப்பப்படி தனது இயக்கங்களில் இணைந்து பணிபுரியவும் உதவி, தன்னையும் தனது குடும்பத்தையும் மக்கள் நலனுக்கான ஆயுதமாக மாற்றி போராடிக் கொண்டிருந்தார்.

ஏறத்தாழ 18 வருடங்களாக அவர் மேற்கொண்ட அயராத அரும்பணிகள் சமூகத்தில் எவ்வளவு மாற்றங்களை உண்டாக்கியதோ அதே அளவு அவருக்கு எதிரிகளையும் கொண்டு சேர்த்தது. பலமுறை பல்வேறு சாதிய அமைப்புகளால் அவரது உயிருக்கே ஆபத்து என்ற நிலையிலும், அரசாங்கமும் காவல்துறையும் அளிக்க முன்வந்த பாதுகாப்பை அவர் முற்றிலுமாக நிராகரித்து தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

மக்கள் பணியில் பிரிந்த உயிர்: 2013 ஆம் ஆண்டு சமூகத்திற்காக ‘மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசர சட்டம் வரைவு' கொண்டு வர ஒருபுறம் முயற்சி செய்துகொண்டே, சுற்றுச்சூழலை பாதுகாக்க விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் நீரில் கரைக்க செயற்கை நிறங்களற்ற சிறிய மண் கணபதி சிலைகளை உருவாக்கும் பணியையும் செய்யத் தொடங்கியிருந்தார் தபோல்கர்.

ஆனால், இந்த இரண்டும் முழுமையடைவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று காலை நடைபயிற்சியின் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார் நரேந்திர தபோல்கர்.

தபோல்கரின் மரணம் மாநிலமெங்கும், தேசமெங்கும் எதிர்ப்புக் குரல்களை, பல கேள்விக் கணைகளை எழுப்பியது. அவரது கொலை வழக்கில் உடனே இருவரைக் கைது செய்தது மாநில அரசு என்றாலும், இன்றளவும் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவரது இறுதிச்சடங்குகளைக் கூட அவரது மகள் முக்தாதான் செய்யவேண்டும் என்பதில் தொடங்கி, அவர் வரைந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் மாநிலத்தில் இயற்றப்பட்டது வரை அவரது எண்ணங்கள் இன்றுவரை வண்ணங்களாகிக் கொண்டுதான் இருக்கிறது.

இன்றளவும் அவரது பரிவர்தன் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு மக்களிடையே நல்லெண்ணங்களை விதைத்து வருகிறது. சமூக நோய்களைக் களைந்த இந்த மாபெரும் மருத்துவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகவும் வெளிவந்துள்ளது. தபோல்கர் இறந்தபின் உயரிய விருதான பத்ம விருது 2014-ல் வழங்கப்பட்டது. அத்துடன் அவரது நினைவுநாளான ஆகஸ்ட் 20-ஐ, தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக (National Scientific Temper Day) கடைபிடிக்க நமக்கு தேசம் அழைப்புவிடுக்கிறது.

"நல்லவன் வாழ்வான்" என்பது அவர்கள் ஆயுட்காலம் அல்ல. அவர்கள் இறந்த பின்னும் கொள்கையாக, செயல்களாக, மக்கள் மனதில் நீண்ட காலம் அவர்கள் வாழ்வார்கள் என்பதைத் தான் தபோல்கரின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இதோ, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பள்ளி மாணவர்களாகிய நீங்கள் கொண்டாடிய அறிவியல் தினம் கூட இந்த எளிய அரிய மருத்துவரைப் போற்ற நாம் கொண்டாடியது தான் எனும்போது, அத்தகைய மாபெரும் மனிதரைப் பற்றிய வரலாறு நமக்குத் தெரிந்திருப்பதும் அவசியம் தானே.

(மகிமை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in