நானும் கதாசிரியரே! - 20: கதையை வசமாக்கும் மொழிநடை!

நானும் கதாசிரியரே! - 20: கதையை வசமாக்கும் மொழிநடை!
Updated on
2 min read

கதை எழுதும்போது எப்படி விவரித்து அழகாக எழுதலாம் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படித் தனிகவனம் எடுத்து எழுதும் உங்களுக்கு சிறப்பான மொழிநடையும் கை வந்துவிட்டால் தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மாறிவிடுவீர்கள்.

அதென்ன மொழிநடை? மொழிநடை என்பதற்கு இலக்கண வகையில் விரிவான விளக்கங்கள் சொல்வார்கள். கதை எழுதுதல் எனும் அடிப்படையில் அதை எளிமையாகப் பார்ப்போம். ஒரு கதை நம் மனத்தில் உருவாகி விட்டது. அதைச் சொற்களால் வாக்கியம் அமைத்து எழுத வேண்டும். அதற்கு என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறோம், எப்படி வாக்கியங்களை அமைக்கிறோம் என்பதே மொழிநடை. நாம் எழுதும் வாக்கியங்களை வைத்துதான், படிக்கும் வாசகர் அந்தக் கதையை தன் மனத்தில் காட்சிகளாக நினைத்துப் பார்க்க உள்ளார். அதனால், அதற்கு ஏற்றவாறு நம் மொழிநடை அமைய வேண்டும்.

ஒருவேளை ‘பசிக்கிறதோ’! - ஒரு கதையில் ‘ஒரு விவசாயி தனது மாடுகளை குளத்திற்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்’ என்ற பகுதி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இதை அப்படியே எழுதிவிடலாம். அது ரொம்பவும் சோர்வு தரும் மொழிநடை.

இதையே, ‘விவசாயி அவசரமாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, வாசலில்கட்டியிருந்த மாடுகள் அவரையே பார்த்தன. அவை பார்த்ததை விவசாயியும் கவனித்தார். மாடுகளின் பார்வையில் ஏதோ சொல்வதுபோல இருந்தது. ஒருவேளை ’பசிக்கிறதோ’ என்று நினைத்தார். ஆனால், மாடுகளின் முன்னால் ஒரு கட்டு வைக்கோல் கிடந்தது. வேறென்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே செருப்புகளை அணிந்தார்.

அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது… அடடா… மாடுகளைக் குளிப்பாட்டி இரண்டு நாட்களாயிற்றே என்பது. குளத்து நீரைப் பார்த்தாலே மாடுகளுக்கு தனி உற்சாகம் வந்துவிடும். துள்ளிக் குதித்து நீச்சல் அடிக்கும். ‘ஓ! குளத்துக்கு அழைச்சிட்டு போகச் சொல்லித்தான் இப்படிப் பார்க்கிறீங்களா?” என்று சிரித்துகொண்டே கேட்டார் விவசாயி.

அவர் சொன்னது புரிந்ததைப் போல தலையை ஆட்டின மாடுகள். உடனே, இவரும் வீட்டுக்குள் சென்று உடை மாற்றிக்கொண்டு மாடுகளை அவிழ்த்துகொண்டு குளத்தை நோக்கி அழைத்துச் சென்றார்’. என்றும் எழுதலாம். இரண்டில் எது நன்றாக இருக்கிறது என்று நீங்களே முடிவெடுங்கள்.

அழகான மொழிநடைக்கு... சரி, இப்படி விரிவான, அழகான மொழிநடையில் எப்படி எழுதுவது? முதலில் நிறையநூல்களைப் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் பழந்தமிழ் நூல்கள் எனும்போது நாம் தற்போது புழக்கத்தில் இல்லாத பல சொற்களைத் தெரிந்துகொள்ள முடியும். அவற்றை நாம் கதையின் ஊடாகப் பயன்படுத்தும்போது நன்றாக இருக்கும்.

நூல்களை வாசிக்கையில் கதையில் மட்டும் கவனம் வைக்காமல், வாக்கிய அமைப்புகள் எப்படி இருக்கின்றன. சில சொற்கள் திரும்பத் திரும்ப வந்தால் அதற்குப் பதில் என்ன சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கலாம்.

கவிதைகளைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். ஏனென்றால், சொல்லவந்ததை மிகச் சுருக்கமாகக் கவிதையில் சொல்லிவிடுவார்கள். அதாவது ஒரு பாராவில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரே வரி அல்லது இரண்டே வரிகளில் அழகாக எழுதியிருப்பார்கள். அது எப்படிச் சாத்தியமானது என்பது குறித்து யோசிக்கலாம்.

சில கதைகளைப் படிக்கையில், சரியாகப் புரியாமல் குழப்பமாக இருக்கும். ஏன் அப்படி இருக்கிறது, வாக்கிய அமைப்புகளை மாற்றினால் புரியுமா என்று நண்பர்களோடு விவாதிக்கலாம். மேலும், அந்தக் கதையின் மையத்தைப் புரிந்துகொண்டு நீங்களே எழுதிப் பார்க்கலாம்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனி மொழிநடை இருக்கும். சில எழுத்தாளர்கள் சின்னச் சின்னத் திருப்பங்கள் வைத்து எழுதுவார்கள். சிலர், பெரிய பெரிய வாக்கியங்களாக எழுதுவார்கள். சிலர் ஆங்கில மொழிச் சொற்களை அதிகம் பயன்படுத்துவார்கள். சிலர் பழந்தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்துவார்கள்.

பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நல்ல மொழிநடையில் எழுதிவிடலாம். ஒரு காட்சியை அழகாக விவரிக்க மொழிநடை மட்டும் போதுமா? இன்னொன்றும் அவசியம் தேவை. அது என்னவென்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in