

தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் இருக்கி றோம். தகவல் பரிமாற்றம் தவிர்க்கவே முடியாது. அதுவும் எல்லாமே இணைய வழி பரிமாற்றமே. நேரிடையாகப் பரிமாற்றம் நடக்கும்போதே தகவல் மாற்றப்படும் அல்லது திருடப் படும். அப்படியானால் இணைய வழியே எப்படி பாதுகாக்கப்படுகிறது? ஒரு துறையே காலம்காலமாக வளர்ந்து வந்துள்ளது. அது குறியாக்கவியல் (Cryptography). எளிமையாகச் சொல்வதெனில் தகவலை எப்படி மறைத்துச் சிதையாமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவது, பெறுவது, அதை எப்படி படிப்பது எல்லாம் அடக்கம். இதற்கு ஆதாரமாக இருப்பது கணிதம்.
அனுப்பப்படும் தகவலை வேறு யாரேனும் படித்தாலும் புரியக்கூடாது. ரகசிய மொழி வேண்டும். எப்படி செய்யலாம்? க மொழி ஒன்று உண்டு தெரியுமா?
கஇகனிகக்ககுகம் கககணகக்ககு.
இதைப் படிக்கும்போது ஏதோ புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருக்கின்றதா? ஒவ்வொரு எழுத்திற்கு முன்னரும் ஒரு ‘க’வினை அகற்றிவிடவும். இ-னி-க்-கு-ம்க-ண-க்-கு என்று வந்துவிடும். இது எளிமையான ஒரு ரகசிய மொழி. இதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்புவார்கள் அல்லவா? அப்போது அனுப்பப்படும் செய்தி வேறு யாரிடமாவது சிக்கினாலும் அவர்களுக்குப் புரியாமல் இருக்க வேண்டும்.
ர்போ துத்பஆ RAW TRELA
இதைப் படித்ததும் புரிந்துகொள்ள முடிகிறதா? ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிப்போட்டுப் படித்தால் கண்டுபிடித்துவிடலாம்.
“போர் ஆபத்து”. இதை எல்லோருமே கொஞ்சம் மெனக்கெட்டால் புரிந்து கொள்ளலாம். இப்ப அடுத்த முறைக்கு நகரலாம். இதைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
XBS BMFSU
ஏதோ குறிச்சொல் போல இருக்கு அல்லவா? ஒவ்வொரு எழுத்திலிருந்து ஒன்றினைக் கழிக்கவும். எது? எழுத்தில் இருந்து ஒன்றா? ஆமாம் ஆமாம். எழுத்துக்களை வரிசைப்படுத்தினால் ஒரு வரிசை எண் ஒவ்வொரு எழுத்திற்கும் கிடைக்கும் அல்லவா? A-1, B-2, C-3, D-4… X-24, Y-25, Z-26, A-27,… அப்படியானால் இந்த அட்டவணையிலிருந்து ஒவ்வொரு எழுத்திற்கும் முன்னால் இருக்கும் எழுத்தினை மாற்றி எழுதவும்.
X-WB–AS-RB-AM-LF-ES-RU–T
WAR ALERT. இதை Shift Algorithm எனக் குறிப்பிடுவார்கள். இதில் ஓர் எழுத்து இடம் மாறி இருக்கிறது. இதுவே இரண்டு எழுத்தாக மாறலாம், மூன்று எழுத்தாக மாறலாம். இரண்டு எழுத்து மாறலாம் எனில், A-விற்கு பதில் C, B-க்கு பதில் D, இப்படி மாற்றி எழுதலாம். உங்கள் பெயரை, நண்பர்கள் பெயரை அல்லது பிடித்தமான வரிகளை இப்படி மாற்றி உங்கள் நண்பர்களிடம் காட்டுங்கள். சரியான பொருளை கண்டுபிடிக்கிறார்களா என பார்ப்போம். அது போல சரியான Key என்னவென்று கண்டுபிடிக்கிறார்களா என்றும் பார்ப்போம். இங்கே Key என்பது 1,2,3..
XBU BNHSV என்பது தகவல் ‘1’ என்பது சாவி. இந்தச் சாவியை யார் கண்டுபிடித்தாலும் தகவலை படித்துவிடலாம். அப்படியெனில் என்னசாவி எனத் தகவல் அனுப்புபவரும் பெறுபவரும் முன்னரே பகிர்ந்துகொண்டால் இன்னும் கடினமாகச் சாவி (key)களை பயன்படுத்தலாம். உதாரணமாக வார்த்தையில் முதல் எழுத்திற்கு 1, இரண்டாம் எழுத்திற்கு 2, மூன்றாம் எழுத்திற்கு 3, எனக் கடினமாகச் சாவிகளை பயன்படுத்தலாம்
W 1 => X
A 2 => C
R 3 => U
இது இன்னும் கடினமாக மாறும். ஆனால் இதனையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். அப்படியெனில் அடுத்து அனுப்புபவர் ஒரு சாவி போட்டுப் பூட்ட வேண்டும், பெறுபவர் ஒரு சாவி போட்டுத் திறக்க வேண்டும். அது எப்படி அடுத்த வாரம் பார்ப்போம்.
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com