

பின்லாந்து நாடு, உலகின் தலைசிறந்த பள்ளிக் கல்வியை வழங்குகிறது என்பது கல்வித்துறைச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் நன்கு அறிந்ததே! நார்வே நாட்டிலும் சுவீடன் நாட்டிலும் பல்கலைக்கழகங்களில் பயின்று, ஆராய்ச்சி செய்து பணியாற்றிய அனுபவத்தோடு, நூலாசிரியர் விஜய் அசோகன் தன் குழந்தைகளை இவ்விரு நாட்டிலும் வளர்த்து, இந்நாடுகளின் பள்ளிக் கல்வித்துறையில் கல்விக்கற்க வைத்த நேரடி வாழ்க்கைமுறையால் உலகில் தலைசிறந்த கல்வி என்பது எப்படியாக இருக்க வேண்டும் என்ற புரிதலைப் பெற்றதாகச் சொல்கிறார்.
குறிப்பாக நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் நாடுகளின் கல்வித்துறையைப் பற்றி அறிந்துகொள்ள இரண்டு முக்கிய தூண்டுதல்கள் உள்ளன. ஒன்று, தாய்மொழிக் கல்விக்கென தனித்துவமான சட்டங்களை வகுத்து பல நாட்டவர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளன நோர்டிக் நாடுகள். இரண்டாவது சமூக நலத்திட்டங்களின் கூர்மையான நடைமுறைகளை வகுத்ததோடு, பள்ளிக் கல்வி, வகுப்பறைச் செயற்பாடுகளில் அதிகார பரவலாக்கத்தின் வழியாக தன்னாட்சிச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளன இந்நாடுகள்.
இந்நாடுகளின் சமூக மேம்பாடு, மனித உரிமை, தாய்மொழி உணர்வு, தேசியக் கட்டுமானம் மட்டுமல்ல, உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் முன்னணி பட்டியல், உலகின் செழிப்பான நாடுகளின் பட்டியல், அதிக நாத்திகர்கள் வாழும் நாடுகளின் பட்டியல் என எதை ஆராய்ந்தாலும் சுவீடன், டென்மார்க், நார்வே, பின்லாந்து நாடுகள் இருக்கும். நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு மற்றும் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நாடு நார்வே, ஏனைய நோபல் பரிசுகள் வழங்கும் சுவீடன் நாடு, பால் உற்பத்தியில் முன்னணியில் டென்மார்க் நாடு என ஒவ்வொரு செய்தியும் நாம் அடிக்கடி படித்து வியந்த செய்திகளோடு தொடர்புடைய நாடுகளே நோர்டிக் நாடுகள்.
இந்நாடுகளைப் பற்றி பல கோணங்களில் ஆராய முடியுமெனிலும் கல்வித்துறைச் சார்ந்த செயற்பாடுகளும் நடைமுறைச் சட்டங்களும் நாம் கற்றுக்கொள்ள ஏராளமான வியக்க வைக்கும் செய்திகளுடையது என்பதால் அதை மையப்படுத்தி முழுமையான நூலாக வந்துள்ளது நோர்டிக் கல்வி புத்தகம்.
சமத்துவம், சமூகநீதி, அதிகாரப்பரவலாக்கம் ஆகிய மூன்றையும் இணைத்தநாடுகளே கல்வித்துறையில் சாதித்துள்ளன. மொழியுரிமைக் கொள்கை, தேசியமறுமலர்ச்சிக் கோட்பாடுகள் இரண்டும்கல்வித்துறையில் தாக்கம் செலுத்தும்பொழுது அந்நாட்டின் வளர்ச்சி நிலைத்து, வலுப்பெற்று உயர்ந்துள்ளது என்ற சிந்தனையும் விரிவடைந்திருக்கிறது. நோர்டிக் நாடுகளின் கல்வித்துறையில் நாம் ஆழமாகக் கற்க வேண்டிய கோட்பாடுகள் 1. தாய்மொழிக் கல்வி 2. சமூகநீதி 3. அதிகாரப்பரவலாக்கம் 4. கல்வியியல் 5. கல்வித்துறையிலும் சமூக வளர்ச்சியிலும் பாலின சமத்துவம்.
இந்நாடுகளின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றும் இரண்டு காரணிகள் தொடக்கக்கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி என வரையறுக்கலாம். வெற்றிக்கரமான கல்வித்துறைச் செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களே முக்கிய பங்காற்றுபவர்கள், அவர்களை பன்னாட்டுக் கல்விக் கோட்பாடுகள் Agents of change என்று குறிப்பிடும்.
அனைவரையும் உள்ளடக்குதல், சமூகநீதிவகுப்பறைகள் குறித்தான புரிதல்களை ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் சேர்க்கும்பொழுதே அத்தகைய Agents வெற்றிகரமான வகுப்பறைகளை உருவாக்குபவர் என்பது இந்நாடுகளின் கோட்பாடுகளில் ஒன்று. இந்நாடுகளின் பள்ளிக் கல்வித்துறையின் மாற்றங்களும், பரிணாம வளர்ச்சியும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வரலாற்றுச் சூழல்களுக்கு ஏற்பவும், நவீன வடிவங்களுக்கு ஏற்பவும் தொடர்ந்தும் மாற்றியமைத்த செயற்திட்டங்களை ஆழமாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
கல்வித் துறையில் மாற்றங்கள்: ஒருநாட்டின் கல்வித்துறையின் வெற்றிகரமான செயற்பாடுகளை அந்நாட்டின் சமூக மேம்பாட்டுக் குறியீடுகள், மனிதவள மேம்பாட்டுத் தரவுகள், சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமைகள், சமூகத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சியின் அளவீடுகள், தனிமனித சுதந்திரம் வழியாகவே முழுமையாக அளவிட முடியும். நோர்டிக் நாடுகள் உலகின் மகிழ்ச்சியாக வாழும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
பொருளாதார மேம்பாடு அடைந்த நாடுகளின் வரிசையிலும், உலகில் மக்கள் வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலிலும் நோர்டிக் நாடுகளே உள்ளன. கல்வித்துறையில் பெற்றுள்ள மாற்றமே நோர்டிக் நாடுகளின் முன்னேற்றங்களுக்கு காரணம் எனும்போது நாமும் கல்வித்துறையில் செய்யவேண்டிய மாற்றங்களைஅறிந்து கொள்ள இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.