

குழந்தைகள் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கின்றனர். செல்போன் குழந்தைகளின் கல்வியியல் பயன்பாட்டில் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஏனெனில், செல்போன் குழந்தைகளுக்குப் பரந்த அளவிலான தகவல் மற்றும் கல்வி ஆதாரங்களுக்கான உடனடி அணுகலை வழங்க வல்லதாக உள்ளது.
செல்போன் கற்றலை மேலும் ஊடாடும் மற்றும் ஈடுபாடுடையதாக மாற்றும். கல்வி விளையாட்டு உருவகப்படுத்துதல்கள் மற்றும் மல்டிமீடியா உள்ளடக்கத்தைப் பயன்படுத்திக் கருத்துக்களை வலுப்படுத்தவும், புரிந்துணர்வை மேம்படுத்தவும், கற்றலைச் சுவராஸ்யமாக மாற்றவும் உதவி செய்கிறது.
அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்யத்தை டிஜிட்டல் போஸ்டர் உருவாக்கத்தில் நாம் பெற முடியும். குழந்தைகள் பெற்ற கருத்துக்கள் மீது கொண்டுள்ள புரிதல் பற்றி அறியவும், மேம்படுத்தவும், போஸ்டர்களில் நண்பர்கள் மற்றும் அவர்களின் புகைப்படம் இடம் பெறவும், கற்பனைகளைக் கட்டவிழ்த்து ஒற்றுமையுடன் செயல்படுவதற்கு டிஜிட்டல் போஸ்டர் ஆக்கம் உதவும்.
இதற்கு செல்போனில் ஒரு செயலி தேவை. ப்ளே ஸ்டோரில் எதாவது ஒரு பேக்ரவுண்ட் ரிமுவர் செயலியைடவுண்லேடு செய்ய வேண்டும். போட்டோரூம், பேக்ரவுண்ட் எரேசர், இப்படி பல.
பொதுவாக குழந்தைகள் செல்போன் கையாளத் தெரிந்தவர்களாக உள்ளார்கள். ஆகவே, குழந்தைகள் கையில் செல்போன் கொடுக்கலாம். இச்செயல்பாட்டிற்கு ஆசிரியரின் செல்போனை பயன்படுத்தலாம். அதுவும் child mode ஆன் செய்து கொடுக்க வேண்டும். அது பொருத்தமற்ற உள்ளடக்கத்தை தவிர்க்க உதவும்.
இது குழுச் செயல்பாடாகும். ஆசிரியரின் கண்காணிப்பு தேவை.ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப்பாடத்திற்கு டிஜிட்டல் போஸ்டர் தயாரிப்பு என்றவுடன் செவ்வாய் கிரகம், கேலக்ஸி, விண் கற்கள், நட்சத்திரங்கள் என க்ரோமில் ப்ரவுஸ் செய்து டவுன்லோடு செய்து கொண்டனர்.
குழந்தைகள் குழுவில் எப்படி போஸ்டர் வரவேண்டும் என்று விவாதித்தனர். குழந்தை விண்ணில் பறப்பது போல் போஸ்டரில் இருக்க வேண்டும் என தீர்மானித்தனர். ஒரு மாணவர் பெஞ்ச் மீது படுத்து,கைகளை விரித்து போஸ் கொடுத்தார். மற்றொருவர் அதை புகைப்படம் எடுத்தார். பேக் கிரவுண்டு ரிமூவர் ஆப்பில் அந்தப் புகைப்படத்தை பதிவேற்றினர். பெஞ்ச் மறைந்தது. அந்த மாணவர் பறப்பது போல் இருந்தது.
செவ்வாய் கோளை அட் (add )பட்டனில் அப்லோடு செய்தனர். பேக்கிரவுண்டு ரிமூவ் ஆகி செவ்வாய்கோள் மட்டும் வந்தது. செவ்வாய்கோள் பறந்த மாணவியை மறைத்தது. செவ்வாய் கோளை செலக்ட் செய்து பேக் (back) பட்டனை அழுத்தினர். மாணவி மேலே வந்தாள். பேக் கிரவுண்ட்க்கு பால்வெளித்திரள் புகைப்படத்தை அப்லோடு செய்தனர். பேக், ப்ரண்ட் பட்டனை தேர்வு செய்து புகைப்படத்தை வரிசைப்படுத்தினர். பாடம் சார்ந்த கருத்துக்களை அந்தப் புகைப்படத்தில் டைப் செய்தனர். அழகான போஸ்டர் உருவானது.
தமிழின் இனிமை பாடத்திற்கு போஸ்டர் செய்வது என முடிவுசெய்தனர். பாரதிதாசன் புகைப்படத்தை டவுன்லோடு செய்தனர். மாணவன் ஒருவன் கரும்பை பிடிப்பது போன்று விரல்களைக் குவித்துப் பிடித்தான். அதை படம் பிடித்தனர்.
ஆப்பில் அப்லோடு செய்து பேக் ரவுண்டு ரிமூவ் செய்தனர். கரும்பு படத்தை அப்லோடு செய்து கைகளில் பிடித்தது போன்று நிறுத்தினர். அற்புதமான போஸ்டர் உருவானது. எல்லா பாடங்களுக்கும் டிஜிட்டல் போஸ்டர் தயாரிக்க முடியும். இருப்பினும், செல்போன் பயன்பாட்டுடன் தொடர்புடைய சாத்தியமான சவால்கள் மற்றும் கவலைகள், கவனச்சிதறல்கள், சைபர் புல்லிங், பொருத்தமற்ற உள்ளடக்கம் போன்றவற்றை கருத்தில்கொள்ள வேண்டும்.
- எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.