

கோபத்தைக் கையாளும் முறைகளைப் பற்றிக் கலந்துரையாடி முடித்ததும், ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியே தீர வேண்டுமா? அதைத் தனது மனத்திற்குள்ளேயே புதைத்துக்கொள்ளக் கூடாதா? என்று வினவினாள் கயல்விழி. கூடாது. அவ்வாறு செய்தால் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு ஏற்படும் என்றார் எழில்.
என்ன கேடு ஏற்படும்? என்று வினவினான் சுடர். படபடப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய போன்ற கேடுகள் உடலுக்கு உண்டாகும். மற்றவர்களின் மீது வெறுப்பும் குற்றங்காணும் எண்ணமும் மனத்தில் உண்டாகும். எனவேதான் கோபப்படுபவர், கோபத்திற்கு உட்படுபவர் ஆகிய இருவரின் உள்ளமும் உடலும் நோகாதவாறு கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கின்றனர் என்று விளக்கினார் எழில்.
கோள் சொல்லி இருப்பார்களோ? - பிற எதிர்மறை உணர்வுகளுக்கும் இயலாமைதான் அடிநாதமா? என்று வினவினாள் இளவேனில். மகிழ்நன் வகுப்பில் அமர்ந்திருந்தான். அவனை தலைமையாசிரியர் அழைப்பதாக அவனிடம் அலுவலக உதவியாளர் கூறினார். எதற்கு? என வினவினான் மகிழ்நன். தெரியாது என்றார் உதவியாளர்.
நான் தவறே செய்யவில்லையே. பின்னர் ஏன் அழைக்கிறார்? யாரேனும் ஏதேனும் கோள் சொல்லி இருப்பார்களோ? அடிப்பாரோ? திட்டுவாரோ?’ என மனத்தில் எண்ணியவாரே இருண்ட முகத்தோடு தலைமையாசிரியரின் அறையை நோக்கி நடந்தான் மகிழ்நன். அவன் நெற்றியில் வேர்வை பூத்தது. இதயம் வேகமாய்த் துடித்தது. கண்கள் அலைபாய்ந்தன என்று விவரித்தார் எழில். மகிழ்நனுக்கு இந்நிலையில் ஏற்பட்ட உணர்விற்கு என்ன பெயர்? என்று வினவினார்.
அச்சம் என்றான் சாமுவேல். ஏன் மகிழ்நன் அஞ்சினான்? என்று வினவினார் எழில். ஏன் தலைமையாசிரியர் அழைத்தார் என்று புரியாததால் என்றாள் தங்கம். சரியாக சொன்னாய் என்பதற்கு அடையாளமாய் கட்டைவிரலை உயர்த்திக் காட்டிய ஆசிரியர், புரிந்து கொள்ளாமையின் விளைவு அச்சம் என்றார்.
இருட்டைக் கண்டால் அச்சமா? - இருட்டிலும் தனியாக இருக்கும் பொழுதும் அஞ்சுகிறோமே, அதற்கும் புரிந்துகொள்ளாமைதான் காரணமா? என்று வினவினான் சுடர். ஆம். இருட்டையும் தனிமையையும் எவ்வாறு கையாள்வது என புரியாததினால்தான் அவற்றைக் கண்டு அஞ்சக் காரணம் என்றார் எழில். அவற்றை எப்படிக் கையாள்வது? என்று வினவினாள் பாத்திமா.
நமக்கு என்ன நிகழ்கிறது எனப் புரியாத சூழ்நிலையில், முதலில் பதற்றமடையக் கூடாது. நிகழ்வதை அல்லது நிகழக்கூடும் என நாம் நினைப்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். தேவைப்பட்டால் அடுத்தவரின் உதவியை நாட வேண்டும். பின்னர் அந்தச் சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கினார் எழில்.
புரியாமல் ஒருவேளை நாம் தவறுசெய்துவிட்டால்? என்று வினவினான் கண்மணி. அந்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். பின்னர் அத்தவறு எங்கு, எதனால், எப்படி நிகழ்ந்தது என்று ஆராய வேண்டும். பின்னர் அத்தவறு நிகழாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கினார் எழில்.
பெற்றோர், ஆசிரியர், நலம் விரும்பிகள் எல்லாரும் படிக்க வேண்டிய நேரத்தில் படி. விளையாடாதே. இல்லையென்றால், அவற்றின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எங்களை அச்சுறுத்துகிறார்களே என்றாள் மணிமேகலை. மாணவர்கள் அனைவரின் முகத்திலும் மெல்லிய புன்னகை பூத்தது. அவர்கள் உங்களை அச்சுறுத்தவில்லை எச்சரிக்கிறார்கள். அதனை நீங்கள் கவனத்தில் கொள்வது உங்களுக்கு நல்லது என்றார் எழில்.
நாம் எதற்குமே அஞ்சக்கூடாதா? என்று வினவினான் அருளினியன். சமுதாயத்தால் வெறுக்கப்படும் செயல்களைச் செய்வதற்கும் கருத்துகளைப் பேசுவதற்கும் நாம் அஞ்ச வேண்டும் என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com