கழுகுக் கோட்டை 15: சதுரங்க விளையாட்டும் சதிராடிய விதியும்

கழுகுக் கோட்டை 15: சதுரங்க விளையாட்டும் சதிராடிய விதியும்
Updated on
2 min read

திருச்சேந்தியின் வசந்த மாளிகையின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் வேறு யாருமல்ல. அவர் சந்திரகிரி தேசத்தை ஆண்டுவந்த சங்கடசேனனுக்கு வலதுகரமாக விளங்கி வந்த தென்திசை தளபதியான திருச்சேந்தியேதான். மக்கள் புரட்சிப்படைத் தலைவன் சண்டைக்கு அழைக்கிறான் என்று ஒரு முகமூடி அணிந்த மர்ம மனிதனுடன் சண்டைக்குப் போனபோதே திருச்சேந்தியின் தலைவிதி மாற்றி எழுதப்பட்டுவிட்டது. அதை இன்றும் நினைத்து வேதனையில் வெம்பிக்கொண்டிருந்தார் திருச்சேந்தி.

அவரது நினைவுகள் சுமார் இருபது வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. அதே சந்திரகிரி தேசத்தின் தென் திசைதளபதியாக திருச்சேந்தியின் தந்தையார் திருவிடங்கன் கோலோச்சிய காலம் அஃது. அப்போது திருச்சேந்தியும் அவருடன் சேர்ந்து பிறந்த சகோதரனான திருத்தோன்றியும் இளம்பிராயத்தில் இருந்தனர். அச்சுஅசலாக ஒன்றுபோலிருந்த அந்த இரட்டையர்களைப் பார்த்த அனைவரும் திருவிடங்கனின் வீரத்துக்கு ஏற்ற வாரிசுகள் இவர்களே என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.

அவர்களும் அனைத்துப் போர்க் கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர். தினசரி இருவரும் வாட்போர் புரிந்து தங்களின் வீரத்தைக் கூர் தீட்டினர். திருச்சேந்திக்கோ தன் தந்தையின் பேருக்கும் புகழுக்கும் கலங்கம் ஏற்பட்டுவிடாமல் தனது செயல்கள் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை இருந்தது. ஆனால், திருத்தோன்றிக்கோ புராண, இதிகாசக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, தானும் தனது புஜபல பராக்கிரமத்தால் ஒரு நாட்டையே ஆள வேண்டும் என்கிற லட்சியம் வந்து சேர்ந்தது.

ஒருநாள் திருச்சேந்தியுடன் சதுரங்க விளையாட்டை ஆடத் தொடங்கினான் திருத்தோன்றி. அப்போது திருச்சேந்தியிடம் விளையாட்டாக, இந்த ஆட்டத்தில் நான் தோற்றால், நீ சொன்னபடி நான் கேட்பேன். ஒருவேளை நீ தோற்றால் நான் சொல்கிறபடி நீ கேட்க வேண்டும். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்கிறாயா? என்றான். திருச்சேந்தியும் அப்போதைக்கு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ளவே சதுரங்க ஆட்டம் தொடங்கியது. திருச்சேந்தி எவ்வளவு முயன்றும் அந்த ஆட்டத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியவில்லை.

ஆனால், தான் தோற்றுவிட்டதை எண்ணித் துவண்டுவிடாத திருச்சேந்தி, எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். நாம் விளையாட்டை தொடங்குவதற்கு முன் விதித்துக்கொண்ட நிபந்தனையின்படி நீ சொல்வதை நான் இப்போது கேட்க வேண்டும். எனவே, உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? தயங்காமல் கேள் என்றதும் உடனேதிருத்தோன்றி, நிபந்தனை நிபந்தனைதான். இப்போது நான் சொல்லப்போகும் வார்த்தையைக் கேட்டுவிட்டுஉடனே உனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளக் கூடாது. அது நிபந்தனையை மீறிய செயல் என்றான்.

திருத்தோன்றி அப்படி சொன்னதும் திருச்சேந்திக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. என்றைக்கும் இல்லாமல் இன்று இவ்வளவு பீடிகையுடன் திருத்தோன்றி பேசுகிறானே? என்று ஆர்வமும் அதனால் இனந்தெரியாத ஒருபயமும் தோன்றி மறைந்தது. எதுவாகஇருந்தாலும் சொல். உனது கட்டளையைநான் ஏற்று நடப்பேன் என்று திருச்சேந்தி பதில் சொன்னதும், ஒன்றுமில்லை, எனது வீரத்தால் ஒரு நாட்டைப் பிடித்து ஆள்வதே எனது லட்சியமாக இருப்பதால், அதற்கு நீ எனக்கு உதவி செய்ய வேண்டும்.

அஃது எந்த நாட்டை நான் பிடிக்க இருக்கிறேன் என்பதைப் பொறுத்துஅந்த நாட்டின் மன்னனைக் கொல்வதற்கும் நீ தயங்கக் கூடாது. அது வேறுநாடாகவும் இருக்கலாம். ஏன்? இந்தநாடாகக் கூட இருக்கலாம் என்றுசொல்லி நிறுத்தியதும் திருச்சேந்திக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் சொன்னதைக் கேட்டதும் நெஞ்சம் ‘திக் திக்’ என்று அடித்துகொள்ள ஆரம்பித்தது. இது எவ்வளவு பெரிய ராஜத் துரோகம்? அதுவும் நாம் அரசனைக் காக்கும் ஒரு தளபதியின் மைந்தர்கள். நமக்கு இப்படிப்பட்ட சிந்தனை வரலாமா? அப்படியே வந்தாலும் அதை வெளியில் சொல்லலாமா? உனக்கு மட்டும் ஏன் புத்தி இப்படிப் போகிறது? என்று திருத்தோன்றியை கடிந்துகொண்டார் திருச்சேந்தி.

ஆனால், திருத்தோன்றியோ தனது நிலையில் பிடிவாதமாக இருந்தான். அதற்கும் மேல் திருத்தோன்றியுடன் பேசப் பிடிக்காமல் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றார் திருச்சேந்தி. அந்த சதிச் செயலை நினைத்தாலே குலை நடுங்குகிற தன்னையும் அல்லவாகூட்டு சேர்க்கப் பார்த்தான் அந்த கொடியவன் என்று நினைத்தார் திருச்சேந்தி. அப்படியே நாட்கள் கடந்து ஓடின.

அந்த நாட்டுக்கு, மன்னனுக்கு எதிராகத் திட்டங்களைத் தீட்டத்தொடங்கினான் திருத்தோன்றி. அதைக்கொஞ்சமும் சகித்துக்கொள்ள முடியாததிருச்சேந்தி தன் வீட்டிற்கு உள்ளேயேதோன்றிய அந்த சதித் திட்டம் பற்றிய செய்தியை அவரது தந்தை திருவிடங்கனிடம் தெரிவிக்காமல் பொறுமையாக இருக்க அவரால் முடியவில்லை. மிகவும் தயங்கித் தயங்கியே தந்தையிடம் திருத்தோன்றியின் கெடுமதியின் கொடுஞ்செய்தியை எடுத்துச் சொல்லத் தொடங்கினார் திருச்சேந்தி.

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in