ருசி பசி -15: பிரியாணிக்கு அந்த காலத்தில் என்ன பெயர் தெரியுமா?

ருசி பசி -15: பிரியாணிக்கு அந்த காலத்தில் என்ன பெயர் தெரியுமா?
Updated on
2 min read

ஊன் என்பது இறைச்சியையும் துவை என்பது கலந்த தன்மையையும் அடிசில் என்பது சமைக்கப்பட்ட உணவையும் குறிக்கிறது. பிரியாணி என்று இன்று அழைக்கப்படும் உணவு சங்ககாலத்தில் ஊன்துவை அடிசில் என்றே அழைக்கப்பட்டது. பாரசீக சொல்லான பிரியாணியை இன்று சைவ பிரியாணி, அசைவ பிரியாணி என்று பிரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் பிரியாணி என்றாலே அசைவம்தான்.

ஆதிமனிதர்கள் வேட்டையாடி உணவு உண்டார்கள் என்பது வரலாறு. நாகரிக வளர்ச்சியின் காரணமாக விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு வேளாண்மை செய்தனர். பின் உணவிலும் மாற்றம் வந்தது. இறைச்சியை மட்டுமே உண்டு வந்தவர்களுள் சிலர் இன்று இறைச்சி வேண்டாம் என்று தவிர்க்கவும் செய்கின்றனர். ஒரு பிரிவினர் உயிர்க்கொலை கூடாது என்கின்றனர்.

ஐவகை நிலங்கள்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களைச் சார்ந்த மக்கள் ஊன்துவை சோற்றை விரும்பி உண்ட செய்தியை பல சங்க இலக்கிய பாடல்களில் காணமுடிகிறது.

நெய் குய்ய ஊன் நவின்ற

பல்சோற்றின், இன் சுவைய

நல் குரவின் பசித் துன்பின்… புறநானூறு

கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியைக் குறித்துப் பாடியது. வறுமையில் வாடிக் கொண்டிருந்த எங்களுக்கு நெய், இறைச்சி, சோறு கலந்து சமைத்த உணவை அளித்தான் என்கிறார். அதியமான் பொருநனுக்கு மதுவோடு ஊன் துவைசோற்றை வழங்கினான் என்றும் ஆட்டுக்கிடாய் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட ஊன்துவை சோற்றினை அன்புடன் தரும் பாரி இப்போது இல்லை என்று கபிலர் கூறுவதான செய்தியை இலக்கியத்தில் காணமுடிகின்றது.

அரிசெத்து உணங்கிய பெருஞ்சோறு- அரிசி சோறுடன் வெள்ளாட்டு இறைச்சி கலந்து உணவு. மைஊன் தெரிந்த நெய்வெண்புழுக்கல் – ஆட்டிறைச்சியுடன் நெய் கலந்து உணவு .மைஊன் கலந்த ஒக்கல் – ஆட்டிறைச்சி கலந்த உணவு .

சோறு வேறு ஊன்துவை அடிசில்

ஓடாப் பீடர் உள்வழி இறுத்து… மதுரைக்காஞ்சி

பிரியாணி வகைகள்: ஹைதராபாத் பிரியாணி, கல்யாணி பிரியாணி, தூத் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, ராவுத்தர் பிரியாணி, தலப்பாகட்டி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, சங்கரன் கோவில் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, பட்கல் பிரியாணி, பாம்பே பிரியாணி, தஹரி பிரியாணி, பியரி பிரியாணி, கம்புரி பிரியாணி, லக்னோ பிரியாணி, முகல் பிரியாணி, மொராதாபாத் பிரியாணி, சித்தி பிரியாணி, ஆப்கன் பிரியாணி, பர்மீஸ் பிரியாணி, இலங்கை பிரியாணி, பிலிப்பைன்ஸ் பிரியாணி, மலாய் பிரியாணி, தாய் பிரியாணி, சல்மோன் பிரியாணி, மொரிஷியன் பிரியாணி என்று பல வகைகள் உள்ளன.

இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி, சென்னை சுக்குபாய் பிரியாணி, திருச்சி சந்துக்கடை பிரியாணி,குற்றாலம் பார்டர் கடை பிரியாணி, ராயப்பேட்டை பிரியாணி, ராயப்பேட்டை சார்மினார் பிரியாணி, பல்லாவரம் யாமொகையதீன் பிரியாணி, மதுரை அம்சவல்லி பவன் பிரியாணி, காஞ்சிபுரம் மன்னார் மிலிட்டரி பிரியாணி, ஆற்காடு ஸ்டார் பிரியாணி, தொப்பி வாப்பா பிரியாணி என தமிழகம் முழுவதும் உள்ள பாரம்பரியமான பிரியாணி கடைகளைப் பற்றி முகில் உணவு அரசியல் நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்படி நம் உணவோடு இரண்டறக் கலந்த பிரியாணியை அவரவர் விருப்பப்படி உண்டு மகிழ்வோம்.

(நிறைவுற்றது)

- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல்நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்; தொடர்புக்கு: devavino86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in