மாறட்டும் கல்விமுறை - 15: சந்தேகம் கேட்பதை குழந்தை நிறுத்திக்கொள்வது ஏன்?

மாறட்டும் கல்விமுறை - 15: சந்தேகம் கேட்பதை குழந்தை நிறுத்திக்கொள்வது ஏன்?
Updated on
2 min read

குழந்தை ஒரு பொருளை நம்மிடம் கேட்கிறது. நாம் மறுக்கிறோம். சிணுங்கிப் பார்க்கும். அழுது பார்க்கும். கிடைக்காவிட்டால் போய்விடும். ஆனால், அதை நம்மிடமிருந்து வாங்காமல் விடாது. எப்படித் தெரியுமா? பார்ப்போம்.

நம் வீட்டிற்கு உறவினர்களோ, நண்பர்களோ யாராவது வரும் வேளையில் அப்பொருளை மீண்டும் கேட்கும். வேறு வழியில்லாமல் நாமும் அப்பொருளைக் கொடுத்துவிடுவோம்.

இங்கு என்ன நடக்கிறது? நண்பர்களும் உறவினர்களும் விருந்தாளிகளும் வரும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை சற்றே யோசித்துப்பாருங்கள். வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வோம். உண்மையான உணர்ச்சிகளை மறைத்துவைத்து பொய்யான உணர்ச்சிகளை முகத்தில் ஒட்டவைத்துக் கொள்வோம்.

சில நிமிடங்களுக்கு முன்பு குழந்தை சுவரில் பென்சிலால் கிறுக்கியபோது அப்படி செய்ய வேண்டாம் என்று அதட்டியிருப்போம். ஆனால், விருந்தினர்களின் முன்பு குழந்தையின் இந்தச் சுட்டித்தனத்தைப் பாராட்டுவோம். முதலில் சற்றே குழம்பிப்போன குழந்தைஓரிரு அனுபவங்களில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளும்.

பிறரின் முன்னால் பெற்றோர் தன்னை திட்டுவதில்லை. அதட்டுவதில்லை. மாறாகப் பாராட்டுகிறார்கள்; புகழ்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்ளும். அதனால் நமக்குத் தேவையானதை அந்தச் சூழலில் கேட்டுப் பெற்றுக்கொள்ளும். அவ்வளவு சமர்த்து நம் குழந்தைகள். உண்மையில் எல்லா குழந்தைகளும்.

கேள்விகளின் ஊற்று வற்றிப்போனது ஏன்? - பள்ளிக்கூடத்திற்கு வரும்முன் குழந்தைகள் கேள்விகளால் நம்மைத் துளைத்தெடுத்திருப்பார்கள். எறும்புகள் உறங்குமா? பட்டாம்பூச்சிக்கு இவ்வளவு அழகான வண்ணச்சட்டை கொடுத்தது யார்? பகலில் நட்சத்திரங்கள் எங்கே போயின? மழை பெய்வது எப்படி? என எத்தனை எத்தனை கேள்விகள். திருமணப் படத்தொகுப்பைக் குழந்தைகள் முன் பார்த்திருந்தால் இந்தக் கேள்வியிலிருந்து நம்மால் தப்பிக்கவே முடியாது. இது அம்மா, இது அப்பா. நான் எங்கே?

இவ்வளவு கேள்விகள் கேட்ட குழந்தை, பள்ளிக்கூடத்திற்கு வந்து சில மாதங்களில் கேள்வி கேட்பதையே நிறுத்திக்கொள்கிறதே. ஏன்? ஆசிரியரைப் பார்த்து பயந்ததாலா? ஆசிரியர் அடிக்கடி அமைதியாக இருக்கும்படி சொல்வதாலா? பேசாதே பேசாதே என்று அதட்டுவதாலா?

ஆம் என்று நினைத்தால் அது தவறு. குழந்தைகளிடத்தில் அன்பாக இருக்கும் ஆசிரியரின் வகுப்பிலும் குழந்தைகள் கேள்வி கேட்பதில்லை என்பதைக் கண்டுபிடித்தபோது வியப்பாக இருந்தது. பிறகு காரணம் தேடத் தொடங்கினோம். பல வகுப்பறைகளைக் கூர்ந்து கவனித்தபோது ஓர் உண்மை புலப்பட்டது.

வகுப்பில் எந்தப் பாடத்தை நடத்த வேண்டும், எப்போது நடத்த வேண்டும்? எப்படி நடத்த வேண்டும்? எந்தெந்த கேள்விகள் கேட்க வேண்டும்? என்னென்ன கேள்வி பதில்களை எழுதிட வேண்டும்? என எல்லாவற்றையும் ஆசிரியரே முடிவு செய்கிறார். எல்லா நேரத்தையும் ஆசிரியரே எடுத்துக்கொள்கிறார். குழந்தைக்கு எவ்விதப் பங்கும் இல்லை. இதைக் கவனிக்கும் குழந்தை மெல்ல மெல்ல சந்தேகம் கேட்பதை நிறுத்திக்கொள்கிறது. ஆசிரியர் சொற்படி நடக்கும் “சமத்தான” குழந்தையாக மாறிவிடுகிறது.

பாடம் கற்றுக்கொள்ளும் குழந்தை: குழந்தைகள் நம்மைக் கவனிக்கிறார்கள். கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். நம் செயல்களிலிருந்து ஓர் அடுக்கைக் கண்டுபிடிக்கிறார்கள். அது நம்மைப் பற்றிய அவர்களின் கருத்தாக மாறிவிடுகிறது. அதை நம்மிடம் விளக்கிச் சொல்லத் தெரியாது. ஆனால், அவர்களின் செயல்களிலிருந்து நம்மால் உணர முடியும்?

எட்டாம் வகுப்பு ஆசிரியர். அவர் ஆறுபாடங்கள்தாம் நடத்தியிருந்தார். சில காரணங்களால் இரண்டு மாதங்கள் விடுப்பெடுத்தார். குழந்தைகளுக்கோ வாசிக்கத் தெரியும். இருந்தும் அவர்கள் அடுத்த பாடத்தை வாசிக்கவில்லை. காரணம் ஆசிரியர் பாடத்தை நடத்தினால்தான் அந்தப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளிடம் ஆழப்பதிந்துள்ளதே.

இது குழந்தைகளின் இயல்பு. இந்த இயல்புகொண்ட குழந்தையிடம் நாம் பாடத்தை வாசித்துக் காட்டி, விளக்கிச் சொல்லி, கேள்வி பதில் எழுதிக்கொடுத்து, அவற்றை மனப்பாடம் செய்ய வைத்தால், ”ஓ! பெரியவர்கள் சொல்வதைத் திருப்பிச் சொல்வதுதான் கற்றல் அல்லது கல்வி” என்று குழந்தை நினைக்கும் இல்லையா? அப்படியே பல வகுப்புகள் கடந்த வந்த குழந்தையிடம், இந்த எண்ணம் பல அனுபவங்களால் ஆழப்பதிந்த குழந்தையிடம் திடீரென்று நீயே யோசி, காரண காரியத்தொடர்புடன் சிந்தி, வாழ்க்கையில் சொந்தக்காலில் நில் என்றெல்லாம் சொன்னால் நடக்குமா? அது தடுமாறிப்போகும் இல்லையா?

நம் செயல்களிலிருந்து, நம் நடத்தைகளிலிருந்து நாம் சொல்லிக்கொடுக்காமலே பல பாடங்களை அவர்கள் கற்கிறார்கள் என்பது நினைவிருக்கட்டும்.

(தொடர்ந்து யோசிப்போம்)

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in