தயங்காமல் கேளுங்கள் - 44: மலையேறும்போது மொபைல் பார்க்காதீர்

தயங்காமல் கேளுங்கள் - 44: மலையேறும்போது மொபைல் பார்க்காதீர்
Updated on
2 min read

மலையில் பயணம் செய்யும்போது ஏற்படும் தலைசுற்றல், குமட்டல் பற்றி கடந்த சில வாரங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். பொதுவாக இந்த டிராவல் சிக்னெஸ் சாதாரண நோய் தான் என்றாலும் சிலரில் தொடர் வாந்தி மற்றும் நீரிழப்பு காரணமாக மருத்துவமனை அனுமதி வரைக்கூட இது அழைத்துச் செல்கிறது.

இப்போது வர்ஷாவின் அடுத்த முக்கியமான கேள்விகளுக்கு வருவோம். இதைத் தவிர்க்க உதவும் உணவு மற்றும் மருந்துகள், வேறு வழிமுறைகள் இவற்றைப் பற்றி பார்ப்போமா?

தவிர்க்க வேண்டியவை: பொதுவாகவே அதிக உணவுகளையும்,கொழுப்பு நிறைந்த உணவுகளையும் பயணத்திற்கு முன்பாக உட்கொள்வதைத்தவிர்க்க வேண்டும். காஃபி, டீ, கோக்போன்ற கேஃபைன் நிறைந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். எளிதாகசெரிமானம் ஆகக்கூடிய உணவு வகைகளையும், குறிப்பாக திரவ உணவுகளையும் பயணத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரம் முன்பாகவே உட்கொள்வது நல்லது.

தண்ணீர், லெமன் ஜூஸ் அல்லது எலக்ட்ரால் போன்ற உப்புகரைசலை கைவசம் வைத்துக் கொண்டு, பயணத்தின்போது சிறிது சிறிதாகப் பருகுவது நீர்த்தன்மையை தக்கவைத்துக் கொள்ள உதவும். இதில் இஞ்சி, எலுமிச்சை, பெப்பர்மிண்ட் போன்றவை அவற்றின் மணம் குணங்களால் வாந்தி மற்றும் குமட்டலைத் தவிர்க்க பெரிதும் உதவும். அதற்காகவே இஞ்சி மொரப்பா, பெப்பர்மிண்ட் அல்லது லெமன் கேண்டி மிட்டாய்களை கைகளில் வைத்திருப்பது நல்லது.

மெல்லிய இசை கேளுங்கள்" அடுத்து வேறு வழிமுறைகள். பயணப்பிணி ஏற்படுவதே மூளைக்குள் ஏற்படும் டிஸ்கனெக்ட் காரணத்தால் தான் என்பதால், அதனை கனெக்ட் செய்யும் வழிமுறைகளை மேற்கொள்வது இதில் நன்கு உதவும். அதாவது தலையை நேராக ஒரேநிலையில் வைத்துக்கொள்வது, தலைக்கு சிறிய தலையணையைப் பயன்படுத்துவது, முன் இருக்கைகளில் மற்றும் ஜன்னலோர இருக்கைகளில் அமர்வது, ஓடும் மரங்களைப் பார்க்காமல் தொடுவானத்தில் பார்வையை நிலைநிறுத்துவது (fixing eyes at Horizon), கண்களை மூடிக்கொண்டு ஆழமாக சுவாசிப்பது, எதிர்திசையில் அமர்ந்து பயணம் செய்வதைத் தவிர்ப்பது, இன்னும் குறிப்பாக மொபைல், டேப் அல்லது புத்தகங்கள் பார்ப்பதையும் படிப்பதையும் தவிர்ப்பது, மெல்லிய இசையைக் கேட்பது, இவற்றுடன் ஜன்னல்களை திறந்து சுத்தமான வெளிக்காற்றை சுவாசிப்பது போன்ற மனதை திசைதிருப்பும் எந்தவொரு எளிய வழிமுறையும் இதில் பலருக்கும் உதவும்.

மேலும் உடற்பாகங்களில் முக்கியமாக மணிக்கட்டின் உள்புறமாகக் கொடுக்கப்படும் அக்யூ-ப்ரெஷர் அழுத்தங்கள், பயணப்பிணிக்கு பலனளிக்கும் என்கிறது சீனமருத்துவம். பயணத்தில் பலரும் விரும்பிஅணியும் Wrist band எனும் மணிக்கட்டு பட்டைகள் செயல்படுவதும் இந்த அக்யூ-ப்ரெஷர் முறையால் தான். மேலும் கற்பூரத் தைலம், லெமன் கிராஸ் தைலம் போன்ற அரோமா தெரப்பியும் பயனளிக்கும்.

ஆனால் இந்த எளிய வழிமுறைகள் எதுவும் பயனளிக்காதபோது Dramimine, Meclizine போன்ற சமநிலைக்கான மருந்துகளையும், Ondansetron, Domperidone போன்ற வாந்தியைத் தவிர்க்கஉதவும் மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரையுடன் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே உட்கொள்வது பயணப்பிணியைத் தவிர்க்க உதவும்.

ஆகவே வர்ஷா, பயணத்தின்போது ஏற்படும் இந்தத் தொய்வுகளுக்காக கவலைப்படாதே. மேற்சொன்ன எளிய வழிமுறைகளுடன் உனது ஜன்னலோரப் பயணமும், அதன் வசீகரங்களும் உன் வசப்படட்டும். மகிழ்வுடன் மலைகளின் ராணி உன்னை வரவேற்கட்டும்.

(ஆலோசனைகள் தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in