

ஆப்பிள் மரம், ஆடு, மாடு, மனிதன், மிருகம் என்று எவையாக இருந்தாலும் அதன் அடுத்த சந்ததியும் முந்தைய தலைமுறை போன்ற நிறமோ, குணமோ, பண்போ, சுவையோ பெறுவதற்கு என்ன காரணம் எனத் தெரியாமல் புரண்டுக் கொண்டே இருந்தார், கிரிகர் ஜோகன் மெண்டல்.
தன் மடலாயத்தைச் சுற்றி இருந்த ஏராளமான மரங்களைக் கண்ட பிறகு அவருக்கு நிம்மதியான உறக்கம் இல்லை. அதற்கு விடை தேட முயன்றார். அந்தப் பயணத்தில் மரபியல் எனும் மாபெரும் அறிவியல் புலத்தை உலகிற்கு அறிமுகம் செய்ய நேரும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
பாடங்களில் பசியாறுதல்: 1822ஆம் ஆண்டு இன்றைய செக் குடியரசு நாட்டில் உள்ள 71 குடும்பங்களைக் கொண்ட ஒரு சிறிய கிராமத்தில், 479 மனிதர்கள், 41 குதிரைகள், 98 ஆநிரைகளோடு தானும் ஒருவனாக வளரத் தொடங்கினார் கிரிகர். கிரிகரின் தந்தைக்கு விவசாயப் பணி.
தன் சொந்தக் கிராமத்தில் இலக்கணப் பாடங்களைக் கற்றுக் கொண்டதும், அரைநாள் தூரத்தில் உள்ள தொலைதூரப் பள்ளியில் மேற்படிப்புக்காகச் சேர்ந்தார். கிரிகரின் பள்ளிக் கட்டணம் செலுத்தவே போதுமென்றாகிவிட்ட பெற்றோரால், அவரின் வயிற்றுப் பசிக்கு உணவு கொடுக்கமுடியாமல் போனது. பன்னிரண்டு வயது நிறைந்த கிரிகர், பாடப் புத்தகங்களில் பசியாற உண்டு செறித்து படிப்பில் ஜொலித்தார்.
பெறனோவில் உள்ள புனித தோமையார் மடத்தில் அகத்தீனிய அவைத் துறவியாகச் சேர்ந்ததும், கிரிகரின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது. தன் சக துறவிகளுடன் சேர்ந்து பிரசங்கம் செய்வது, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது, கல்வி கற்பிப்பது, கணிதம் சொல்லித்தருவது என்று கிரிகர் மகிழ்ச்சியில் திளைத்தார்.
மடாலய நூலகத்தில் இருந்த 30,000 நூல்களையும் தன் அறிவுப் பசிக்கு இரையாக்கிக் கொண்டார். மூன்று வேளை உணவு இடைவெளியில் படித்த கருத்துக்களை வைத்து விவாதம் செய்தார். கிரிகரின் அறிவுத் தேடலை அடையாளம் கண்டு, வியன்னா பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானிகளுடன் அவரைப் படிக்க அனுப்பிவைத்தார், மடாதிபதி. அங்கு அவர் கணிதமும் அறிவியலும் கற்றுத் தேர்ந்தார்.
ஆசிரியப் பணியில் அறிவியல் வேட்கை: பல்கலைக்கழகப் படிப்பிற்குப் பிறகு, மடாலயத்துக்கு அருகில் செயல்பட்டு வந்த பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். தன் மேலான கணித மற்றும் அறிவியல் புரிதலைக் கொண்டு, மாணவர்களுக்குத் தெளிவாகப் பாடம் சொல்லித்தந்தார். எளிய அறிவியல் விதிகளைச் சோதனைச் செய்தார்.
தந்தையின் நீலக் கண்களும் சீரான தலைமுடியும் மகளுக்கு வாய்த்திருப்பது பற்றியும்; தாயின் பழுப்பு நிறக் கண்களும் சுருட்டை கேசமும் மகனிடம் வெளிப்பட்டிருப்பது பற்றியும் கிரிகர் காலத்தில் எவ்விதப் புரிதலும் இல்லை. இருவகைப்பட்ட ஆப்பிள் மரங்களைப் புணர்ச்சிக்கு உட்படுத்தினால் மேம்பட்ட விளைச்சல் வரும் என்று மேம்போக்காகப் பின்பற்றி வந்தனர். ஒருதலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் ஒருமித்த பண்புகளை மெண்டல் தீர யோசித்தார்.
பண்பு நிலைப் பரிசோதனைகள்: இனவேறுபாடு இல்லாமல் எல்லாவகை உயிரினங்களிலும் பண்புநிலை கடத்தல் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என மெண்டல் நம்பினார். இருவேறுபட்ட இனங்களைக் கலப்பதன் மூலம், ஹைபிரிட் (கலப்பின) வகை இனம் உருவாகும் என முன்மொழிந்தார்.
மெண்டலுக்கு முன் மக்காச்சோளம், கோதுமை போன்ற தாவரங்களை கலப்புக்கு உட்படுத்தியிருக்கின்றனர். ஆனால் அதைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்தபாடில்லை. இந்த அரைகுறை மரபை முறியடித்ததன் மூலம், மெண்டல் புதிய சகாப்தம் படைத்தார்.
(மெண்டல் ஆய்வுத் தொடரும்)
- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com