

“கடன் அன்பை முறிக்கும்' என்ற வாசகத்தை அடிக்கடி கேட்டிருப்போம். ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான்' என்று இலக்கியத்திலும் படித்திருப்போம். ‘கடன் தொல்லையால் தற்கொலை' என செய்திதாளில் அன்றாடம் வாசிக்கிறோம். இந்த வார்த்தைகள் எல்லாம் ‘கடன் எவ்வளவு கொடுமையானது' என்பதை விவரிக்கின்றன.
‘கடன் அற்ற வாழ்க்கையே சிறந்தது' என முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் ‘கடன் வாங்குவது பெரும் குற்றம்' என்பதை சொல்லியே வளர்த்திருக்கிறார்கள். இதனால் கடன் வாங்குபவர்களை குற்றவாளிகளைப் போல பார்க்கிறோம். ஆனால், அம்பானியும் அதானியும்கூட கடன் வாங்குகிறார்கள். அவர்கள் எப்படி உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆனார்கள்?
கடன் இல்லா வாழ்வு சாத்தியமா? - பொருளாதார நெருக்கடி மிகுந்த இன்றைய காலத்தில், அதுவும் நுகர்வு கலாச்சாரம் அதிகரித்துவிட்ட நவீன காலத்தில் கடன் இல்லாத வாழ்க்கை சாத்தியமா? லட்சக்கணக்கில் மாத சம்பளம் வாங்குபவர்கள் கூட மாத கடைசியில் கடன் வாங்கியே வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதனால் ஏழைகள் தொடங்கி கோடீஸ்வரர்கள் வரை கடன் இல்லாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லி விடலாம்.
கடன் கொடுப்பது திருவிழாவா? - ‘கடன் வாங்குவதை கெட்ட குணம் என பயிற்றுவிக்கப்பட்ட இதே சூழலில், வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் ‘லோன் மேளா' (கடன் திருவிழா), ‘ஆடி தள்ளுபடி' என்ற பெயரில் கடனை வாரி வழங்குகிறார்கள். வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன், தனிநபர் கடன் என கடனை கூப்பிட்டு தருகிறார்கள்.
செல்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு நாளைக்கு நாலைந்து அழைப்புகளாவது ‘கடன் வேண்டுமா?' ‘கிரெடிட் கார்ட் வேண்டுமா?' என கேட்டு தொல்லை செய்கிறார்கள். இதுதவிர, ‘ப்ரீ அப்ரூவ்ட் லோன்' என குறுந்தகவல்களும் வருகின்றன. சொத்தின் ஆவணங்களை தூக்கிக்கொண்டு வங்கிப் படிக்கட்டுகளை ஏறி இறங்கிய காலம் போய், செல்போன் ஆப்பில் கடன் கொடுக்கிறார்கள். செல்போன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கும் கடையிலும் ஜீரோ வட்டியில் கடன் கொடுக்கிறார்கள்.
தேவையா? ஆசையா? - ‘கடன் நல்லதா? கெட்டதா?' என்பதற்கு நேரடியான பதிலை தர முடியாது. எதற்காக கடன் வாங்கப்படுகிறது என்பதை பொறுத்தே, அந்த கடன் நல்லதா? கெட்டதா? என்பதை வரையறுக்க முடியும். கடன் அத்தியாவசிய தேவைக்காக வாங்கப்பட்டதா? ஆடம்பர தேவைக்காக வாங்கப்பட்டதா? என்பதை கண்டறிந்தாலே கடன் வாங்குவது நல்லதா? கெட்டதா? என்பதை முடிவு செய்ய முடியும்.
கடன் என்பது நெருப்பு போன்றது. அதனை வைத்து விளக்கை ஏற்றவும் முடியும். வீட்டை கொளுத்தவும் முடியும். நாம் நல்ல காரணங்களாக கடன் வாங்கினால், அதன் மூலம் நமது சொத்தை அதிகரித்து, வாழ்க்கைக்கு ஒளியேற்றிக் கொள்ளவும் முடியும். கெட்ட காரணங்களுக்காக கடன் வாங்கினால், அதற்கு வட்டிக் கட்டி நமது சொத்தையே அழித்துக்கொள்ளவும் முடியும்.
அதேவேளையில், பெரும்பாலான நிதி ஆலோசகர்கள், ‘கடன் (Other People's Money) என்பது நாம் சொத்து சேர்க்க சிறந்த வழி ஆகும். அதன் மூலம் நம் வருமானத்தை உயர்த்தி, செல்வம் சேர்க்க உதவும் கடன்கள் நல்லவை. எனவே கடனை சரியாகப் பயன்படுத்த தெரிந்தால் கடன் வாங்குவதும் நல்ல வாய்ப்புதான். ஆனால் அதனை வாங்குவதற்கு முன் பல முறை யோசித்து செயல்படுவது சிறந்தது என்கிறார்கள்.
கடன் கிடைப்பது எளிதாகிவிட்ட சூழலில், அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது என்ற புகாரும் எழுகிறது. இதுதவிர, ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் அடகு கடை, கந்து வட்டி, மீட்டர் வட்டி கும்பலிடம் சிக்கி தவிக்கிறார்கள். கடனை எப்படி பார்க்க வேண்டும்? எதற்காக கடன் வாங்க வேண்டும்? எதற்காக வாங்க கூடாது? அதனை எப்படி கையாள வேண்டும்? எப்படி அடைக்க வேண்டும்? என இனி காண்போம்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in