

பசிப்பிணி போக்க பாடுபட்டவர் ராமலிங்க அடிகள். இவர் சிதம்பரம் அடுத்த மருதூரில் 1823 அக்டோபர் 5-ம் தேதி பிறந்தார். தமிழ் அறிஞரான அண்ணனிடமே கல்வி கற்று தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான அண்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லை. முருகன் பாடல்களைப் பாடிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கப்பட்ட 9 வயது சிறுவன் ராமலிங்கம் சொற்பொழிவாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
சாதி, மத வேறுபாடுகள் கடந்து எல்லோரிடமும் கருணையோடு திகழ ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். பெண்களுக்குக் கல்வி, யோகா பயிற்சி உள்ளிட்டவை அவசியம் என்றார். ‘தெய்வமணி மாலை’, திருவருட்பா’, ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார். சஞ்சீவி மூலிகைகள் குறித்து பல குறிப்புகளை எழுதியுள்ளார். வடலூரை சேர்ந்த விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கினார்கள். அந்த இடத்தில் 1865-ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலை நிறுவி ஏழைகள் அனைவரும் அந்த அணையா அடுப்பின் மூலம் இன்றுவரை பசியாறுவதால் ‘வள்ளலார்’ எனப் போற்றப்பட்டார்.