

விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான ‘வீரமுரசு’ சுப்பிரமணிய சிவா (Subramaniya Siva) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் (1884) ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தார். 12 வயது வரை மதுரையிலும், பிறகு கோவையில் ஓராண்டும் பயின்றார். இலவச உணவு கிடைக்கும் என்பதால் திருவனந்தபுரம் சென்று மேற்படிப்பு படித்தார்.
# கொட்டாரக்கரையில் சதானந்த சுவாமிகளை சந்தித்து ராஜயோகம் பயின்றார். பிறகு தமிழகம் திரும்பியவர், சிவகாசியில் காவல் துறை எழுத்தராகச் சேர்ந்து, மறுநாளே விலகினார்.
# தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக எழுதக்கூடியவர். கவிதை புனைவதில் வல்லவர். சிறந்த சொற்பொழிவாளர். திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார்.
# தூத்துக்குடி சென்று வ.உ.சிதம்பரனாரை சந்தித்தார். இருவருக்கும் நட்பு மலர்ந்தது. பாரதியார் தனது சுதேசி கீதங்களால் இவர்களது சுதேச உணர்வை மேலும் தூண்டினார். பாரதியும் சிவாவும் மேடைதோறும் விடுதலைப் போராட்ட முழக்கமிட்டனர்.
# சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலியில் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தினார். ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 1908-ல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கடும் சித்ரவதைக்கு ஆளானார். 1912-ல் விடுதலையாகி, சென்னையில் குடியேறினார்.
# ‘ஞானபானு’ என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் பின்னர் ‘ஞானபானு’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.
# துறவிபோல காவி உடை அணிந்தார். பெயரை ‘ஸ்வதந்திரானந்தர்’ என்று மாற்றிக்கொண்டார். தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். விடுதலையானதும், சென்னைக்கு வந்தார். உடல்நிலை தேறியதும் கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்றார்.
# நண்பர்கள் உதவியுடன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலம் வாங்கி ஆசிரமம் நிறுவினார். அதற்கு ‘பாரதபுரம்’ எனப் பெயர் சூட்டினார். சர்வ மதத்தினரும் வழிபடும் வகையில் அங்கு பாரதமாதா கோயில் கட்டமுடிவு செய்தார். ‘தேசபந்து’ சித்தரஞ்சன்தாஸை அழைத்துவந்து அடிக்கல் நாட்டினார்.
# தொழுநோயின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல், ஊர் ஊராகச் சென்று கோயிலுக்கு நிதி திரட்டினார். நோயைக் காரணம் காட்டி, பேருந்து, ரயில்களில் ஏற ஆங்கில அரசு தடை விதித்தது. உடல் முழுவதும் புண்ணாக இருந்தபோதிலும், துணியால் மூடிக்கொண்டு நடந்தும், கட்டை வண்டியிலும் பல ஊர்களுக்குச் சென்றார். சொற்பொழிவாற்றி, நிதி திரட்டினார்.
# தொடர் பயணத்தால் உடல்நலம் குன்றியது. பாப்பாரப்பட்டி திரும்பி யதும், உடல்நிலை பாதிக்கப்பட்டு 41-வது வயதில் (1925) மறைந்தார். ‘வீரமுரசு’ என்றுபோற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா நினைவாக பாப்பாரப்பட்டியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவரது பாரத மாதா கோயில் கனவு மட்டும் இன்னும் நிறைவேறவே இல்லை.