

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்
என்று ரஜினிகாந்த் திரையில் பாடிக் கொண்டிருக்க, கூடச் சேர்ந்து குழலியும் பாடியவாறே தன் உடைகளை மடித்துக் கொண்டிருந்தாள்.
சுடர்: ஒரே உற்சாகமா இருக்க போல. பாட்டெல்லாம் அமர்க்களப்படுது.
குழலி: வா சுடர்... எப்பவும் போலதான். ஆனா நல்ல மெட்டுள்ள பாட்டுக்கள் நம்மளயும் சேர்ந்து பாடவைக்குதே...
சுடர்: நீ சொல்றது சரிதான். கேட்கும்போதே உற்சாகமாதான் இருக்கு. ஆம்பல், மௌவல்ன்னு இந்தப் பாட்டுல வர்ற சொற்களெல்லாம் பாட்டு வந்த புதுசுல அதிகமா இணையத்துல தேடின சொற்களா இருந்துச்சு நினைவிருக்கா...
குழலி: ஆமா சுடர். ஆம்பல்ங்கிறது அல்லிப் பூவில ஒரு வகையாம். வெள்ளாம்பல், நீலாம்பல், செவ்வாம்பல்னு அதுல பல வகைகள் இருக்காம்.
சுடர்: மௌவல்னா மரமல்லியாமே...
குழலி: மரமல்லி பாத்திருக்கியா...
சுடர்: அத எங்க போய்ப் பார்க்கறது. நம்ம இலக்கியங்கள்ல வர்ற பல பூக்களோட பேர் மட்டும்தான் இருக்கு. அந்தப் பேருக்குரிய பூ எங்க இருக்குன்னு தேடித்தான் பார்க்கணும்...
குழலி: அந்தப் பூக்கள் இன்னைக்கு வேற பேர்ல இருக்கலாம். ஆனா மரமல்லியை நீ தேட வேண்டாம். நம்ம பக்கத்துலயே இருக்கு.
சுடர்: அப்படியா.. எங்க இருக்கு?
குழலி: நம்ம வாசல்ல அழகா வெள்ளையா நீளக் காம்புகளோட உதிர்ந்து கிடக்குதே இந்தப் பூவுக்குப் பேர் என்ன...
சுடர்: பன்னீர்ப்பூ...
குழலி: பன்னீர்ப் பூ தான் மரமல்லி. எவ்வளவு அழகு... அந்த வாசத்தைக் கவனிச்சிருக்கியா...
சுடர்: ஓ... மௌவல் என்கிற மரமல்லி... புன்னகைக்கு உவமையாச் சொல்றாரு.
குழலி: நம்ம பண்பாட்டுல பூக்களுக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு.
சுடர்: ஆமா குழலி. அந்தக் காலத்துல மன்னர்கள் போர் செய்யும் போதுகூட தங்கள் குலத்துக்கான மாலைகளை அணிஞ்சுதான் போர் செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
குழலி: புறத்திணைகள்ல போரோட ஒவ்வொரு நிலைகள்லயும் ஒவ்வொரு பூ சூடினாங்களாம். போர் தொடங்குகிறபோது அதற்கேத்த மாதிரி அடையாளப் பூவைச் சூடுவாங்களாம். ஆநிரைகளைச் கவரப் போறவங்க வெட்சிப் பூவையும், ஆநிரையை மீட்கப் போறவங்க கரந்தைப் பூவையும், பகைவர் நாட்டு மேல படை எடுத்துப் போறவங்க வஞ்சிப் பூவையும், அரணைக் காக்கிறவங்க நொச்சிப் பூவையும், அரணை முற்றுகை இடுறவங்க உழிஞைப் பூவையும், களத்தில் நின்னு போர் செய்ற இரண்டு பக்கத்து வீரர்களும் தும்பைப் பூவையும், போர்ல வெற்றி பெற்றவங்க வாகைப் பூவையும் சூடுவாங்களாம்.
சுடர்: அப்பாடி... இவ்வளவு பூக்களையும் மறக்காமச் சொல்லிட்டியே...
குழலி: அது ரொம்பவே எளிது சுடர். நீ கவனிச்சுப் பார்த்தா கண்டுபிடிச்சிருப்ப. திணைகளோட பேரும் பூக்களோட பேரும் ஒன்னாதான் இருக்கு.
சுடர்: ஆமால்ல.. குறிஞ்சி, முல்லைன்னு அகத்திணைகள் கூட பூக்களோட பேரால தான் அமைஞ்சிருக்கு... பூக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவமா...
குழலி: மன்னர்கள் இந்தப் பூக்களத் தங்கத்தால செய்து சூடுறதும் உண்டாம். சிறப்பாப் போரிட்ட வீரர்களுக்கு மன்னனே தங்கத்தாலான பூவைச் சூடிவிடுறதும் உண்டாம்.
சுடர்: தங்கத்திலே பூ வா...
குழலி: ஆமா சுடர்... இன்னொன்னு தெரியுமா.. முருகக் கடவுள் அசுரனை எதிர்த்துப் போர் செய்து கிரௌஞ்ச மலையை வென்றபோது, காந்தள் பூவைச் சூடினாராம். அதே மாதிரி சிவபெருமான் முப்புரங்களை எரிச்சபோது உழிஞைப் பூவைச் சூடினார்னு நம்ம புராணங்கள் சொல்லுது.
சுடர்: அப்பக் கடவுள்களும் விதிவிலக்கில்லன்னு சொல்லு.
குழலி: புராணங்கள் பலவும் கடவுள்களும் நம்மளப் போலத்தான்னு, நம்மளக் கடவுள்களோட நெருக்கமாக்குறதுக்காகச் சொல்லப்பட்டதுதான. அதனாலதான் கண்ணன், முருகன்னு எல்லாக் கடவுள்களும் லீலைகள் செய்ததாச் சொல்றாங்க...
சுடர்: சரிதான்... மூவேந்தர்களுக்குன்னு தனியா பூக்கள் இருந்ததுன்னு சொல்வாங்களே.
குழலி: சேரர் மன்னர்கள் பனம்பூ மாலையையும் பாண்டியர்கள் வேப்பம்பூ மாலையையும் சோழர்கள் ஆத்திப்பூ மாலையையும் சூடினாங்களாம். இந்த மாலைகள்ல எது பெரிசு, மன்னர்கள்ல யார் பெரியவன்னு ஒட்டக்கூத்தரோட தனிப்பாடல் ஒன்னு இருக்கு. நாளைக்குஅதைப் பத்திப் பேசுவோம்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com