

நம் வளிமண்டலத்தில் காணப்படும் காற்றில் பசுமைக்குடில் வாயுக்களின் சதவீதம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அந்த வாயுக்கள் நமது பூமியின் ஒட்டுமொத்த வெப்பநிலையையும் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
கடந்த 200 ஆண்டுகளாகத்தான் புவி வெப்பம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பனியுகத்தில் இருந்து பூமி மீண்ட போதுகூட 1000 ஆண்டுகளுக்கு ஒரு டிகிரி செல்சியஸ் என்ற அளவில்தான் புவி வெப்பம் அடைந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு 0.7 டிகிரிசெல்சியஸ் என்ற வேகத்தில் வெப்பம் உயர்கிறது என்கின்றனர். இந்த 200 ஆண்டுகளில் அப்படி என்ன நடந்தது?
இதற்குக் காரணம் புதைவடிவ எரிபொருட்களின் (Fossil Fuels) பயன்பாடு. தொழில்புரட்சிக்குப் பிறகுநாம் அன்றாட வாழ்வுக்குத் தேவையான மின்சாரம், வாகனத்தை இயக்குவதற்கு தேவையான ஆற்றல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள்களைத்தான் நம்பி இருக்கிறோம். இந்த எரிபொருட்கள் அதிகம் எரிக்கப்படும்போது அதில் இருந்து வெளியேறும் கரியமில வாயு காற்றில் அதிகம் கலக்கிறது. இதன் விளைவாக சூரிய வெப்பம் வளிமண்டலத்தில் அதீதமாக அடைக்கப்பட்டு புவி வெப்பமடைகிறது.
நம் பூமியில் மக்கள் தொகைஅதிகரிக்கும்போது தேவைப்படும் ஆற்றலின் அளவும் அதிகரிப்பதால் நம் சுற்றுச்சூழல் மேலும் பாதிப்படைகிறது. புவியின் வெப்பம் அதிகரிக்கும்போது காலநிலை மாற்றமும் ஏற்படுகிறது. இது பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டம் உயர்வு, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களுக்கு வழி வகுக்கிறது. இதனால் உயிரினங்களின் வாழ்வாதாரங்கள் அழிகின்றன. உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
மொத்தத்தில் உலகம் முழுவதும் எல்லா உயிர்கள் இடத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. இந்தக் கால நிலை மாற்றம் உலக பொருளாதாரத்தையும் கூட பாதிக்கிறது. எளிய மக்களுக்கு அநீதி இழைக்கிறது. இது குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com