மகத்தான மருத்துவர்கள் - 44: தண்ணீரில் நிலவிய சாதியத்தை ஒழிக்க போராடியவர்

மகத்தான மருத்துவர்கள் - 44: தண்ணீரில் நிலவிய சாதியத்தை ஒழிக்க போராடியவர்
Updated on
2 min read

இளநிலை மருத்துவம் முடித்த இளம் தபோல்கர் கிராம மக்களிடையே பரவியிருந்த மது பழக்கத்தை ஒழிக்க போராடுவது என்று முடிவெடுத்த அதேசமயம் அம்மக்கள் மத்தியில் வேரூன்றி இருந்த பல மூட நம்பிக்கைகளையும், கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களையும் எதிர்க்கலானார்.

குறிப்பாக பல தீராத நோய்களுக்கு மந்திர தந்திரம் செய்து காப்பாற்றுவதாகக் கூறிவந்த போலி சாமியார்களையும் போலிமருத்துவர்களையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். மனநலம் பாதித்தவர்களுக்கு மருத்துவம் செய்யாமல், பாதித்தவர்களை சங்கிலியால் பிணைத்து கொடுமை செய்வதைக் கண்டு மனம் வெதும்பிய அவர், உடனடியாக ‘பரிவர்தன்' எனும் போதை ஒழிப்பு மற்றும் மனவியல் ஆலோசனை கிளினிக் ஒன்றைத் தொடங்கினார்.

மனநல பாதிப்பும் மற்ற நோய்களைப் போன்று குணப்படுத்தக் கூடியவையே என்பதை மக்களுக்கு அறிவுறுத்தியதோடு, அவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக அவர் வழங்க ஆரம்பித்தது அந்தப் பகுதியில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தத் தொடங்கியது.

சாதித்த சாதனா இதழ்: அக்கம்பக்க கிராமத்து மக்களுக்கும் அறிவியலின் பயன்கள் சென்றுசேர ‘சாதனா'எனும் வாரப்பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். மனநலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருக்கும் மூட நம்பிக்கைகள் மற்றும் அதற்காக மருத்துவம் அளிப்பதில் இருக்கும் பயன்கள் புரியுமாறு தாய்மொழியிலேயே இதில் எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து சமூக நலன் குறித்த தனது பல்வேறு கருத்துகளை கட்டுரைகளாக எழுதி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

அப்படி, தனது தாய்மொழியான மராத்தியிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய சமூக நலன் சார்ந்த கட்டுரைகளைத் தொகுத்து ஏறத்தாழ 12 புத்தகங்களாக வெளியிட்டு அவை அடக்க விலையிலேயே மக்களைச் சென்றடையவும் வழிவகுத்தார் தபோல்கர். அதில், ‘சற்றே சிந்தியுங்கள்' (Please Think) மற்றும் ‘காரணங்களுக்கான காரியம்' (The Case for Reason) எனும் இரு புத்தகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

எழுதுவதோடு நில்லாமல், கல்லூரியில் இருந்ததைப் போலவே மேடை நாடகங்கள்வாயிலாக தேவதாசி ஒழிப்பு, கட்டப்பஞ்சாயத்து ஒழிப்பு, விதவை மறுமணம் மற்றும் கலப்புத் திருமணம் ஆகியவற்றை ஆதரித்து, தானே நடித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் தபோல்கர்.

1989 ஆம் ஆண்டு, மகாராஷ்டிர அந்தஸ்ரத்த நிர்மூலன் சமிதி (மான்ஸ்) எனும் அமைப்பை நிறுவிய நரேந்திர தபோல்கர், அதன் வாயிலாக மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், அறிவியல் மேம்பாடு, சிந்தனைமன்றம் என பல இயக்கங்களைஅமைத்தார். அதன்மூலம் அவர் மேற்கொண்ட சமூகப்பணிகள் மாநில அளவில் பெரிதளவில் மாற்றங்களை உண்டாக்கத் தொடங்கியது.

ஒரு ஊர், ஒரு நீர்நிலை: அதேசமயம் அவர் தொடங்கி வைத்த "ஏக்கோவன் ஏக் பனவ்தா" அதாவது "ஒரு ஊர், ஒரு நீர்நிலை" போராட்டம், மாநிலத்தில் உயர்சாதிகளின் கோபத்தைத் தூண்டக் காரணமாகவும் அமைந்தது. அதாவது, கிராமத்தில் தலித்துகளுக்கு தனி நீர்நிலைகள் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, பொது நீர்நிலைகளில் தலித் மக்களை தண்ணீர் எடுக்கத் தடைசெய்த உள்ளமைப்புகளுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான ஆர்வலர்களுடன் தபோல்கர் போராடியது மாநிலமெங்கும் உயர்சாதியினர் இடையே அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதேசமயத்தில், அவர் தனது போராட்டத்தைத் துரிதப்படுத்த மாநிலமெங்கும் பயணங்கள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்.

இவற்றுடன் நிற்காமல் தானே பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று, பொதுக்கூட்டங்கள் கூட்டி இளைஞர்களிடையே பேசியதோடு, தனது கருத்துகளை அடுத்த தலைமுறையினரிடம் சென்று சேர்க்க, ஒருகட்டத்தில் எந்தவொரு சமூக நலன் சார்ந்த பொதுக்கூட்டமும் தபோல்கரின் தலைமையில் தான் நடைபெறும் என்ற‌ அளவில் மாறத் தொடங்கியிருந்தது.

அந்த சமயத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் பயணம் செய்து, ஏறத்தாழ 3000த்துக்கும் அதிகமான கூட்டங்களில் கலந்துகொண்டு தனது எண்ணங்களை, புரிதல்களை மற்றவர்களிடம் சென்று சேர்ப்பதை ஒரு தவம் போல செய்ய ஆரம்பித்திருந்தார் தபோல்கர். ஒருமுறை, அப்படி சோலாப்பூரில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார் மராத்திய முன்னணி நடிகையான சோனாலி குல்கர்னி.

அக்கூட்டத்தில் தபோல்கரின் ஆழமான கருத்துகள் தன்னுள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று பின்னர் கூறியதோடு, தனது வாழ்வின் அடுத்தகட்டங்களை தான் அடைந்ததற்கு அவரது புத்தகங்கள் மற்றும் அவரது உரையாடல்கள் மிக முக்கியக் காரணம் என்று கூறும் அளவு அவரது தாக்கம் சமூகத்தில் ஊடுருவியிருந்தது.

(தபோல்கர் மகிமை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in