நானும் கதாசிரியரே! - 19: எதை விரிவாக, எதை சுருக்கமாக எழுத வேண்டும்?

நானும் கதாசிரியரே! - 19: எதை விரிவாக, எதை சுருக்கமாக எழுத வேண்டும்?
Updated on
2 min read

இதுவரை வந்த பகுதிகளைப் படித்ததில் கதைகளை உருவாக்குவது பற்றிய புரிதல் உங்களுக்குக் கிடைத்திருக்கும். நாம் உருவாக்கிய கதைகளை எழுதும்போது பயன்படுத்தும் சொற்களைக் கவனத்தோடு கையாள வேண்டும். ஏனென்றால், கதை படிப்பதன் பலனாக புதிய சொற்களைத் தெரிந்துகொண்டோம் என்று மாணவர்கள் சொல்வார்கள் அல்லவா? அப்படியென்றால் கதை எழுதும் எழுத்தாளர் அதில் கவனம் செலுத்த வேண்டும் இல்லையா?

வழக்கமாக, ஒரு கதை எப்படித் தொடங்கும்? ‘ஒரு ஊர்ல…’ என்று. ஆனால், கதையாக எழுதும்போது இப்படி வரவேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏதோ ஒரு காட்சியில் இருந்துகூட கதையை தொடங்கிவிடலாம் அல்லது ஓர் இடத்தைப் பற்றிய அறிமுகம் செய்யும் வர்ணனையாகக் கதையைத் தொடங்கலாம்.

எங்கிருந்து கதையை தொடங்குவது? - எப்படித் தொடங்கி எப்படி முடித்தாலும் கதையை சோர்வு இல்லாமல் படிக்க வைப்பது கதையின் போக்கு மட்டுமல்ல, எழுத்து நடையும்தான். அதனால், சுவாரஸ்யமாகக் கதையைப் படிக்கும் வகையான மொழிநடையில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு, நாம் எழுதும் கதையில், ஒரு சிறுவனை நாய் ஒன்று துரத்தும் காட்சி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை எப்படி எழுதலாம்?

“ஒரு சிறுவன் தெருவுக்குள் நுழையும்போது அங்கிருந்த நாய் ஒன்று அவனை முறைத்துப் பார்த்தது. அடுத்து, அவனை நோக்கி ஓடிவர, இந்தச் சிறுவன் வந்தவழியிலேயே திரும்பி ஓடினான். அவனை நாய் துரத்திக்கொண்டு ஓடியது”.

இப்படி எழுதுவது வழக்கமான ஒன்று. இதையே, “சிறுவன் சத்தமாகப் பாட்டு பாடிக்கொண்டே வடக்குத் தெருவுக்குள் வந்தான். பாட்டுப் பாடும் உற்சாகத்தில் எதிரில் வந்த நாயைக் கவனிக்கவில்லை. திடீரென்று, எதிரில்கறுப்பும் வெள்ளையும் கலந்த நாய் நின்றது. அதன் கண்களைப் பார்க்கையில் சிறுவனின் கால்கள் பயத்தில் நடுங்கின. திறந்திருந்த நாயின் வாயில் கூரான பற்களும் வெளியே தொங்கும் நாக்கைப் பார்த்ததும் ராட்டினத்தில் ஏறியதும் வயிற்றில் ஒரு மாதிரி செய்யுமே அதுபோல அவனுக்கு செய்தது. மெதுவாக ஓரடி பின்னால் நகர்ந்தான். நாய் ஓரடி முன்னால் நகரந்தது. அவன் இரண்டடி நகர, அதுவும் இரண்டடி நகர்ந்தது. அப்போது ஒரு இருசக்கர வாகனத்தின் ஹாரன் ஒலிக்க, நாய் அதை நோக்கித் திரும்ப, இதுதான் நேரம் என சிறுவன் திரும்பி ஓடத் தொடங்கினான். அவனை நாயும் துரத்தியது. பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டே ஓடினான்” என்று இப்படியும் எழுதலாம்.

கதையோடு நெருக்கம்: இப்படி எழுதும்போது படிக்கும் ஒவ்வொரு வரியும் வாசகரின் கண் முன் காட்சிகளாக விரியும். அவர்கள் முன் நாய் நிற்பதுபோல நினைத்துக் கொள்வார்கள். அந்தச் சிறுவன் தப்பித்தானா… அல்லது நாயிடம் கடி வாங்கினானா என்று பதற்றத்தோடு பக்கங்களைப் புரட்டுவார்கள். அதாவது கதையோடு நெருங்கி விடுவார்கள். எழுத்துகள் வழியே ஒரு காட்சியை கண்முன் கொண்டுவரும் வலிமை நல்ல மொழிநடையில் அமைந்த எழுத்துக்கு உண்டு.

இப்படி விரித்து எழுத வேண்டும் என்பதால் எல்லாவற்றையும் நீளம் நீளமாக எழுதிகொண்டிருந்தாலும் வாசகருக்குச் சோர்வு அளித்துவிடும். அதனால், கதையின் எந்த இடத்தை விரிவாக எழுத வேண்டும்… எந்த இடத்தை சுருக்கமாக எழுத வேண்டும் என்பதையும் தெளிவாக முடிவு செய்துகொள்ள வேண்டும். மொழிநடையை வலுவாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம். இப்போது, உங்களுக்கு ஒரு கதை பாடம்:

ஒரு காடு. அங்கே ஒரு புலி ஒரு மானை விரட்டுகிறது. ஆனால், மானுக்கு முன் ஓடிக்கொண்டிருப்பது ஒரு முயல். புலி தன்னைத் தான் துரத்துகிறது என்று நினைத்துகொண்டு தலைதெறிக்க ஓடுகிறது. இந்தக் காட்சியை எழுத்தில் கொண்டு வாருங்கள் பார்ப்போம்.

- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in