

சுடர்: பெண்கள்ல கண்ணகிக்கு மட்டும்தான் நடுகல் எடுத்தாங்கன்னு சொன்னயே... நாட்டுக்காகப் போராடி உயிரையே கொடுத்த வீரர்களுக்குத் தான் நடுகல் எடுக்கறது வழக்கம்னு சொல்லிட்ருந்தோம். ஆனா, கண்ணகிக்கு எதுக்காக நடுகல் வச்சாங்க? அவங்க போர் செய்யலையே. தன் கணவனுக்கு அநீதி நடந்திருச்சுங்கிறதுக்காக, மத்தவங்க பாதிக்கப்படுற மாதிரி மதுரையையே தீயிட்டு எரிச்சாங்களே அது சரியா...
குழலி: மன்னனையே எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒரு பெண்ணோட வீரத்தைப் பாராட்டுறதுக்காக இருக்கலாம். தன் குலத்தோட பெருமைய நிலைநாட்றதுக்காக, தன்னைச் சுத்தி இருக்கிற மக்களுக்கு ஏதாவது ஆபத்துவந்தா அதிலிருந்து அவங்களக் காப்பாத்தறதுக்காகத் தன் உயிரக் கொடுத்தவங்களக் கூட நடுகல்லா வச்சு வழிபட்டிருக்காங்க.
சுடர்: ஆமா குழலி. குலதெய்வங்களப் பத்திக் கதை சொல்லும் போது எங்க பாட்டி கூட இதைச் சொல்லியிருக்காங்க.
குழலி: நம்ம முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்கள்ல பலரும் இப்படி இறந்தவங்க தான். எங்க அப்பா ஊர்ப் பக்கம், அணை காத்த அய்யனாருன்னு ஒரு சாமி இருக்கு. ஒரு பெரும் மழக் காலத்துல கடுமையான வெள்ளப் பெருக்காம். அப்ப அந்த ஊர் அணை உடைஞ்சி போற நிலமை வந்ததாம்.
அந்த அணை உடையாம விடிய விடியக் கொட்டுற மழையில நின்னு ஊர் மக்களுக்கு எதுவும் ஆபத்து வந்திடாமக் காப்பாத்திட்டுத் தன் உயிர விட்டாராம். அவர் பேரு அய்யனாரு. அந்த அணையக் காத்ததுனால அணை காத்த அய்யனாருன்னு அவர சாமியா நெனச்சுக் கும்பிட ஆரம்பிச்சாங்களாம்.
சுடர்: அப்ப நம்மளப் பத்தி மட்டும் நினைக்காம, அடுத்தவங்களுக்கு உதவணும்னு பொதுநலத்தோட இருந்தா சாமி ஆயிடலாம்.
குழலி: "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" ன்னு திருவள்ளுவர் சொல்றது இதத்தான் சுடர். எத்தனை பெரிய அறங்களை அழிச்சவங்களுக்கும் பாவத்தைக் கழுவ வழிகள் இருக்காம். ஆனா, ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்றவங்களுக்கு அந்தப் பாவத்திலிருந்து விடுபட வழியே இல்லையாம்.
சுடர்: இப்ப எதுக்காக இந்தக் குறளச் சொன்ன...
குழலி: சுடர், இந்த நடுகல் வழிபாடே நன்றி உணர்வக் காண்பிக்கிற செயல்பாடுதான. தங்களுக்கு நன்மை செய்தவங்கள நாம காலமெல்லாம் நினைக்கிறது. இயற்கை வழிபாடுகூட அப்படித்தான. ஆனா, அதுல கொஞ்சம் பயமும் இருந்துச்சு. தன்னை ஏதும் செஞ்சிடக் கூடாது இயற்கைப் பேரழிவுகள்னு தான் முதல்ல வேண்டத் தொடங்கினாங்க. இந்த நடுகல் வழிபாட்லயும் அப்படி ஒரு எண்ணம் இருக்கு.
சுடர்: கண்ணகியப் பத்திப் பேசத் தொடங்கி, இப்பப் பேச்சு வேற திசை மாறிடுச்சு.
குழலி: சரி அங்கயே வருவோம். பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டீர், மூத்தோர், குழந்தைகள்னு இவங்களையெல்லாம் விட்டுட்டு, அநீதிக்குச் சார்பாக இருந்தவங்க பக்கம் தீ பரவட்டும்னு சொன்னாங்களாம். போர்லகூட இவங்களையெல்லாம் தாக்கக் கூடாதுன்னு விதி இருக்கு தெரியுமா..
சுடர்: குழலி, இன்னைக்கும் போர் விதிமுறைகளை மீறியதாச் சில நாடுகள் மேல குற்றச்சாட்டு இருக்கறக் கேள்விப்படுறோம். சட்டம், நீதிமன்றம், ஐ.நா, போன்ற அமைப்புகள் எதுவுமே இல்லாத சங்க காலம் போன்ற காலங்கள்ல எப்படிப் போர்ல நடக்குற விதிமீறல்களக் கட்டுப்படுத்தியிருப்பாங்க...
குழலி: அந்தக் காலத்துலயும் இருந்ததுதான். ஆண் பிள்ளைகள் பெறாதவங்கள, பெண்களை, முதியவர்கள, குழந்தைகள, அந்தணர்கள, பசுக்களக் கொல்ல மாட்டாங்களாம்.
சுடர்: ஆண் பிள்ளை பெறாதவங்களக் கொல்ல மாட்டாங்களா.., இது என்ன புது விதியா இருக்கு...
குழலி: ஏன்னா இறக்கற வீரனுக்குப் பின்னால, வாரிசு இல்லாமப் போயிடக் கூடாதில்லயா.
சுடர்: இப்படியெல்லாம் யோசிப்பாங்களா...
குழலி: நேரமாகிடுச்சு சுடர். நாளைக்குப் பார்ப்போம்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com