

நான் பிளஸ் 1 படிக்கிறேன். எங்கள் வீட்டில் ஐந்து பேர். அதனால் பிளஸ் 2 முடித்து விட்டு உடனடியாக வேலைக்கு போகனும். உடனே வேலை செய்யவோ அல்லது சுயதொழில் செய்யவோ எனக்கு ஆலோசனை தாருங்கள்.
- செண்பகவல்லி, உடுமலை, பொள்ளாச்சி.
நீங்கள் கண்டிப்பாக வேலைக்கு உடனே செல்ல வேண்டுமெனில் குறுகிய கால திறன் பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் ஏற்றுமதி / உற்பத்தி நிறுவனங்களில் பணிவாய்ப்பு கிடைக்க வழியுண்டு. இல்லையெனில் விருப்பத்திற்கேற்ப திறன் பயிற்சிகளை மேற்கொண்டு சுயமாக தொழில் தொடங்கலாம். மனிதனின் முக்கிய தேவைகளில் ஒன்றான ஆடைகள் குறித்த குறுகிய கால திறன் பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கலாம். தமிழ்நாடு ஆயத்த ஆடைகள் / நிட்வேர் தொழிலில் முன்னணி மாநிலமாகும்.
மத்திய அரசின் அங்கமான ஏ.டி.டி.சி. (Apparel Training and Textile Design Centre) 22 மாநிலங்களில் செயல்படுகின்றது. தமிழகத்தில் சென்னை கிண்டி, கீழ்பாக்கம், கடலூர், திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், அரியலூர், பரமக்குடி ஆகிய இடங்களில் பயிற்சிகளை வழங்குகின்றது. இங்கு குறுகிய கால திறன் பயிற்சிகள், 1 வருட டிப்ளமா மற்றும் மூன்று வருட பி.வோக் (B.Voc – Bachelor of Vocation) படிப்புகள் வழங்கப்படுகின்றன.
குறுகிய கால திறன் பயிற்சிகள் 200 மணி நேரம் முதல் 800 மணி நேரம் வரை வழங்கப்படுகிறது. அவற்றில் குறிப்பிட்ட சில பயிற்சிகளான பேட்டர்ன் மேக்கர், குவாலிட்டி செக்கர், இன்லைன் செக்கர், சுவிங் மிஷின் ஆப்ரேட்டர், ஹான்ட் எம்ப்ராய்ட்ரி, அசிஸ்டண்ட் டிசைன் ஹோம் பர்னிசிங், கார்மெண்ட் கட்டர் ஆகியன உள்ளன.
1 வருட டிப்ளமா படிப்பாக ஆப்பேரல் மேனுஃபாக்சரிங் டெக்னாலஜி / பேஷன் டிசைன் டெக்னாலஜி ஆகியவையும் மூன்று வருட பட்டப்படிப்பாக பி.வோக் படிப்பு சென்னை கிண்டி மற்றும் திருப்பூரில் வழங்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் திறன் பயிற்சிகளுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் வெற்றிகரமாக பயிற்சிகளை முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. சுயதொழில் அல்லது பணி வாய்ப்பினை உடனடியாக பெற விரும்பினால் இதனை தேர்ந்தெடுக்கலாம்.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.