

ஜோத்பூரில் இருந்து ஜெய்சல்மர் சென்று தார் பாலைவனத்தைப் பார்க்க வேண்டும், அங்கு மக்கள் வாழ்கிறார்களா, அந்த கொளுத்தும் வெயிலில் மக்கள் எப்படி இருப்பார்கள் என்ற கேள்வி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இப்போது முதன்முறையாகத் தார் பாலைவனத்தைப் பார்க்கப்போகிறோம் என்ற உணர்வே மேலிட்டது.
மறுநாள் அதிகாலை ஜோத்பூரில் இருந்து கிளம்பி ஜெய்சல்மர் நோக்கி பயணித்தோம். இதுவரை நாம் பார்க்காத நிலப்பரப்பு நம்மை வரவேற்றது. தார் பாலைவனத்துக்குள் இருக்கும் தார் சாலையை கழுகு பார்வையில் பார்த்தால், கறுப்பு மலைப்பாம்பு வளைந்து வளைந்து செல்வதுபோன்றே இருந்தது.
திகிலூட்டிய ஒட்டக சவாரி: நம் ஊரில் ஆடு மாடுகளைக் கூட்டம்கூட்டமாக மேய்த்து செல்வதை பார்த்திருக்கிறோம். முதல் முறையாக ஒட்டகங்களைக் கூட்டமாக மேய்த்து செல்வதை வழி நெடுகிலும் பார்த்து சென்றோம். ஆங்காங்கே சாலை ஓரங்களிலேயே சில கிராமங்கள் இருக்கிறது. வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, அங்கேயே கிடைக்கும் கற்களைக் கொண்டு தார் பாலைவனத்தில் வீடுகளைக் கட்டி இருக்கிறார்கள்.
ஜெய்சல்மருக்கு மதியம் சென்று சேர்ந்தோம். அப்போது தான் மழை பெய்து ஓய்ந்திருந்ததால், நகரமே கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. நம்முடைய உடைமைகளை, நாம் ஏற்கெனவே பதிவு செய்த விடுதியில் வைத்துவிட்டு அவர்கள் ஏற்பாடு செய்துவைத்திருந்த ஜீப்பில் தார் பாலைவனத்துக்குக் கிளம்பினோம்.
கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் பயணித்து பாலைவனத்துக்கு வந்துவிட்டோம். பாலைவனத்தில் தங்க வேண்டும். பாலைவனத்துக்குள் செல்ல ஒரே வழி ஒட்டகம் தான். முதல் முறையாக ஒட்டக பயணம் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. மேடு பள்ளங்களில் ஒட்டகம் ஏறி இறங்கும் ஒவ்வொரு முறையும் அடிவயிறு கலங்கி விடுகிறது. ஒரு மணி நேர ஒட்டக பயணத்துக்குப் பிறகு பாலைவனத்தின் நடு பகுதிக்கு வந்திருந்தோம்.
ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் தங்க இரண்டு வகையான முறைகள் இங்கு நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று தார் பாலைவன சுற்றுலா. ராஜஸ்தான் மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்களது நடனம், அவர்கள் உணவு என அந்த கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நிறைய வசதிகளுடன் தார் பாலைவனத்தில் தங்குவது.
இரண்டாவது, எந்த வசதிகளும் இல்லாமல், தார் பாலைவனத்தின் மணல் மேல் ஒரு தார்ப்பாயை விரித்து வெட்ட வெளியைப் பார்த்துக்கொண்டே தூங்குவது. நாம் தேர்ந்தெடுத்தது இரண்டாவது. அதற்கு காரணமும் இருக்கிறது. அந்த பாலைவனப் பகுதியில் நம்மைத்தவிர, நம்முடன் ஒட்டகத்துடன் வந்தவர்களும், ஒரு மேலாளரும் மட்டுமே இருப்பார்கள். நிச்சயமாக இது ஒரு திகில் பயணமாகத்தான் இருக்கும். அதேமாதிரி மொத்த பாலைவனத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம்.
பாலைவனத்தில் சூரிய அஸ்தமனம்: நம்மை அழைத்து வந்தவர்கள் ஒட்டகத்தை மேய விட்டுவிட்டு, நமக்கு டீபோட்டுக் கொடுத்துவிட்டு இரவு உணவைதயாரிக்கும் பணிகளைத் தொடங்கினார்கள். இரவு 7.45க்கு சூரிய அஸ்தமனம். கையில்டீ-யுடன் பாலைவனத்தில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க அத்தனை ரம்மியமாக இருந்தது. காற்றுக்குத் தகுந்தாற்போல் மணல் மேடுகள் உருவாகிறது. பத்து நிமிடத்துக்கு ஒரு மணல் மேடு உருவாகிறது. இன்னொரு மேடு காணாமல் போகிறது. முதல் முறையாக இதையெல்லாம் பார்க்கும்போது வியப்பாக இருந்தது.
நிலா வெளிச்சத்தில் இரவு உணவை முடித்துவிட்டு இரவு நேரத்தின் அமைதியை ரசித்துக்கொண்டிருந்தோம். மாசு இல்லாத பாலைவனம், அதனால் நிறைய நட்சத்திரங்கள் தெரிந்தது. இரவு முழுவதும் அந்த நட்சத்திரங்களோடு புகைப்படம் எடுத்துவிட்டு, அதிகாலை தான் தூங்கச் சென்றோம்.
தனியாகப் பாலைவனத்தில், முன்பின் தெரியாதவர்கள் காவல் இருக்கும்போது தூக்கம் உடனே வரவில்லைதான். 4 மணிக்கெல்லாம் விடியல் வர, ஜெய்சல்மர் செல்ல தயாரானோம். மனமின்றி, ஒட்டகப்பயணத்தை மேற்கொண்டோம். இப்படி ஒரு அனுபவம் வாழ்நாளுக்குமானது. ராஜஸ்தானுக்கு சுற்றுலா ரொம்ப முக்கியம். குறிப்பாக தார் பாலைவன மக்களுக்குச் சுற்றுலா தான் ஆதாரமே. அதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நிறையவே பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com