

உலகம் முழுவதும் புவி வெப்பம் அதிகரித்து வருகிறது. வெயிலின் கொடுமையால் மனிதர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மறுபக்கம் திடீரென பெய்யும் அதீத மழை, வெள்ள பாதிப்பை ஏற்படுத்தி சேதம் விளைவிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் காலநிலை மாற்றம் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர். காலநிலை மாற்றம் என்றால் என்ன? அதற்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் என்ன சம்பந்தம்?
1850ஆம் ஆண்டு யூனிஸ் ஃபுட் என்கிற பெண் அறிவியலாளர் பூமி ஏன் வெப்பம் அடைகிறது என்று ஆராயத் தொடங்கினார். பூமி வெப்பம் அடைவதற்கும் காற்றில் கலந்துள்ள வாயுக்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று ஆராய்ந்தார். அவரது ஆய்வுகள் சில உண்மைகளை உணர்த்தின.
நம் வளிமண்டலத்தில் காணப்படும் கரியமிலவாயுதான் (Carbon Dioxide)நமது சுற்றுப்புறம் வெப்பமடைவதற்கும், அந்த வெப்பம் நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கும் காரணம் என்று அவரது ஆய்வுகள் தெரிவித்தன. இதனால் நம் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகம் இருந்தால், புவியும் அதிகம் வெப்பமடையும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
புவி வெப்பமடைவது ஏன்? - ஏன் கரிய அமில வாயு புவி வெப்பத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ந்தபோது, பசுமைக்குடில் விளைவு (Greenhouse Effect) என்ற ஒன்று இருப்பதும் தெரியவந்தது. பசுமைக்குடில் விளைவு என்றால் ஒன்றும் இல்லை, கண்ணாடிக் கூரையிட்ட குடில் ஒன்றை அமைத்து தாவரங்கள் வளர்ப்பதைப் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அந்தக் குடிலுக்குள் நுழைந்தால் உள்ளே வெப்பம் அதிகமாக இருக்கும்.
இதற்குக் காரணம் அந்தக் கண்ணாடிக் கூரை, சூரியனின் வெப்பத்தை வெளியேறாமல் அடைத்து உள்ளேயே வைக்கிறது. அதேபோல நம் வளிமண்டலத்தில் காணப்படும் கரியமில வாயு, மீத்தேன், நீராவி போன்ற வாயுக்களும் சூரிய வெப்பத்தைப் புவியில் அடைத்து வைக்கின்றன. இந்த வாயுக்களைதான் நாம் பசுமைக்குடில் வாயுக்கள் (Greenhouse Gases) என்கிறோம்.
சூரியனில் இருந்து வெளிவரும் வெப்பம் நம் பூமியை அடைகிறது அல்லவா? அந்த வெப்பம் நிலத்தாலும், கடலாலும் சிறிது உறிஞ்சப்படும். மீதமுள்ள வெப்பம் தெறிக்கப்பட்டு மீண்டும் மேல் நோக்கிச் செல்லும். அவ்வாறு மேல் நோக்கிச் செல்லும் வெப்பத்தை வளிமண்டலத்தில் உள்ள பசுமைக்குடில் வாயுக்கள் தடுத்து நிறுத்துக்கின்றன. இதனால் வெப்பம் வெளியேறாமல் மீண்டும் நிலத்திற்கே திரும்புகிறது. நமது சுற்றுப்புறமும் சூடாகிறது. இதைத்தான் நாம் புவி வெப்பமடைதல் என்கிறோம்.
(காலநிலை மாற்றம் தொடரும்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com