

குழந்தைகள் திறம்பட யோசிக்கவும் அறிவார்ந்த கேள்விகளை எழுப்பவும் நாம் பயிற்றுவிப்போம். மூடநம்பிக்கை என்பது மனித சிந்தனைக்கும் மனித வளர்ச்சிக்கும் முற்றிலும் எதிரானது. அதனை நாம் வேரோடு ஒழிப்போம் என்று கூறியவர் டாக்டர் நரேந்திர தபோல்கர்.
"நல்லவன் வாழ்வான்" என்று படித்திருப்போம். ஆனால், சிலசமயம் நடப்பதோ அதற்கு நேர்மாறாக இருக்கும். ஆனால், அதற்கும் ஒரு காரணம் இருக்கும். அப்படி வாழ்ந்த ஒரு மருத்துவர்தான் டாக்டர் நரேந்திர தபோல்கர். அவருக்கு அப்படி என்ன சோதனை நடந்தது? நல்லவர்களுக்கு அத்தகைய சோதனைகள் ஏன் வருகின்றன? அதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
டாக்டர் நரேந்திர தபோல்கர் என்னும் நரேந்திர அச்யுத் தபோல்கர், மகாராஷ்டிரா சதாரா மாவட்டத்தில், 1945 நவம்பர் 1 ஆம் தேதியன்று தனது குடும்பத்தின் பத்தாவது குழந்தையாக பிறந்தார். அவரது தந்தை அச்யுத் தபோல்கர் முன்னணி வழக்கறிஞர் என்பதாலும், தாய் தாராபாய் சமூக சீர்திருத்தவாதி என்பதாலும் அந்த முற்போக்கு குடும்பத்தின் கடைக்குட்டியான தபோல்கர் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக ஆனால் அறிவுப் பிள்ளையாக விளங்கினார்.
படிப்பிலும் விளையாட்டிலும் சுட்டி: தனது மூத்த சகோதர சகோதரிகளுடன் இணக்கமாக வளர்ந்ததோடு, சிறுவயது முதலே கல்வியிலும் விளையாட்டிலும் பேரார்வம் கொண்டும் விளங்கினார். சதாராவின் நியூ இங்கிலீஷ் பள்ளியிலும் வெலிங்டன் கல்லூரியிலும் முதல் மதிப்பெண்களுடன் ஆரம்பக் கல்வி முடித்த கையோடு, மருத்துவத்திற்கான நுழைவுத்தேர்வை எழுதி, மகாராஷ்டிரத்தின் மிராஜ் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலச் சென்றார் தபோல்கர்.
கல்வியில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் பேரார்வம் இருந்ததால், மகாராஷ்டிரத்தின் சிவாஜி பல்கலைக்கழக கபடிக் குழுவின் வெற்றிகரமான கேப்டனாகவும் திகழ்ந்தார். அதுவும் சாதாரணமாக அல்ல. தான் தலைமையேற்ற அணியுடன் தேசிய அளவில் பல தங்கப் பதக்கங்களைப் பெற்று, தனது மாநிலத்திற்குப் புகழ் சேர்த்ததோடு நில்லாமல், பங்களாதேஷிற்கு எதிரான சர்வதேச கபடிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்தார். படிப்பு, விளையாட்டு மட்டுமல்லாமல் எழுத்து, பேச்சு, நடிப்பு என அனைத்திலும் சிறந்து விளங்கிய தபோல்கர், தனது கல்லூரி காலத்திலேயே எழுதி, பேசி, நாடகங்களில் நடித்த ஒரு பிரபலமான மருத்துவ மாணவராகத் திகழ்ந்தார்.
மேலும், சமூக அக்கறை என்பது தாயின் வழியாக அவரது ரத்தத்தில் ஊறி இருந்ததால், கல்லூரிக் காலத்திலேயே ‘சமாஜ்வாடி யுவ தள்' அமைப்பில் இணைந்தார். அதன் மூலம் சாதிய வன்முறைகள் மற்றும் தீண்டாமையை எதிர்த்துப் போராடுவதையும், இளைஞர்களிடையே சமுத்துவத்தை நிலைநிறுத்துவதையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இன்னும் சொல்வதென்றால், அப்போது அங்கிருந்த மராத்வாடா பல்கலைக்கழகம் என்பதை பாபா சாகிப் அம்பேத்கர் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ததில் தபோல்கரின் பங்கு மிகப்பெரியது எனப்படுகிறது.
போதைக்கு எதிரான போராட்டம்: இளநிலை மருத்துவம் முடித்து மருத்துவராக வெளிவந்த தபோல்கர, தன்னைப் போல் சமூக அக்கறை கொண்ட டாக்டர் ஷைலாவை மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். அவரது மூத்த சகோதரர்கள் ஒவ்வொருவரும் அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மேம்பாடு என தத்தம் துறைகளில் தனித்து விளங்கினாலும், அதுபோல சாதனைகளில் சலனமடையாமல், எளிய மக்களுக்கு தனது படிப்பு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு சதாராவின் சிறிய கிராமங்களுக்கு தன் மனைவியுடன் சென்று மருத்துவம் செய்யத் தொடங்கினார்.
ஏறத்தாழ 12 ஆண்டுகள் தொடர் பணிபுரிந்து, ஏழை எளிய மக்களின் பிணித்துயர் தீர்த்த அவர், அந்த கிராம மக்களிடையே நோய்களைக் காட்டிலும் மிக மோசமாக புரையோடியிருந்த பிற்போக்குத்தனங்களை நீக்குவது அவசியம் என்பதை அப்போது உணர்ந்தார்.
தான் பணிபுரிந்த இடங்களில் மதுபோதைக்கு பல இளவயதினர் ஆளாவதையும், மதுவின் காரணமாக கல்லீரல் சிதைந்து அவர்கள் மரணமடைவதுடன், அந்த மரணங்களால் அவர்கள் குடும்பங்களும் நிலைகுலைந்து போவதையும் கண்ட தபோல்கர், அதை எதிர்க்க முடிவு செய்தார். தனது மாநிலத்தின் முக்கிய விளைச்சலான சோளத்தை, அரசாங்கம் மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது என்பது அவரது முதன்மையான போராட்டமாக மாறியது.
(தபோல்கர் மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com