

நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து விதவிதமான கதைகள் எழுதுவதைத் தெரிந்து கொண்டீர்களா? அதிலும் ஃபேன்டஸி வகை கதை பலருக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. சரி, உடனே நாம் பார்க்கும் அத்தனையும் கதைகளாக எழுதி தள்ளிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். நிச்சயம் எழுதலாம். ஏனெனில், நம் கண் முன் நடப்பவை அனைத்துமே கதையின் ஒரு பகுதிதான். அதனால், எழுதலாம். ஆனால், எழுதுவதற்கு சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
நடக்கும் சம்பவத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அதில் என்ன சிக்கல் இருந்தது, அது எப்படி விடுவிக்கப்பட்டது என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியான சம்பவம் என்றால், அதை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள். அதன்பிறகு, அந்தச் சம்பவத்தை அப்படியே எழுதினால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்குமா அல்லது கொஞ்சம் கற்பனை கலந்து எழுதலாமா என்று யோசியுங்கள்.
கண்முன்னே காட்சி... ஒரு நிகழ்வை எழுதும்போது அது நடந்த இடத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது இந்த ஊர், இந்த இடம் என்று அல்ல. ஓர் ஊரின் மைதானத்தில், ஓர் ஊரின் குளத்தின் அருகே என்று நிகழ்வு நடந்த இடத்தைக் குறிப்பிட வேண்டும். அப்படி எழுதும்போது அந்த இடத்திற்கு எங்கிருந்து எல்லாம் மனிதர்கள் வந்தார்கள் என்று குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக, குளத்தின் அருகே மாடுகளை ஓட்டி வந்தவருக்கும், அவருக்கு எதிரில் வந்த இரண்டு பெண்களுக்கும் இடையில் நடந்த சண்டையைப் பற்றி எழுத உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, வலது பக்கத்தில் இருந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு ஒருவர் வந்தார் என்று எழுதுவோம்.
பிறகு சில வரிகள் எழுதிவிட்டு அந்தப் பெண்கள் பற்றி எழுதப் போகிறீர்கள். அவர்களையும் வலது பக்கத்தில் இருந்து வருபவர்களாக எழுதி விடக் கூடாது. அவர்கள் குளத்தின் இடதுபுறதில் இருந்து வருவதாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் அந்த நிகழ்வைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே இதையெல்லாம் சரியாக எழுத முடியும். அப்படி எழுதினால் மட்டுமே படிப்பவருக்குக் குழப்பம் இல்லாமல் இருக்கும்.
பெயரை மாற்றி எழுதுங்கள்: நிகழ்வில் கலந்துகொண்ட மனிதர்களின் உண்மையான பெயர்களை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். நல்ல விஷயம் என்றால் அவர்கள் ஏதும் சொல்ல மாட்டார்கள். அவர்களை விமர்சனம் செய்யும் கதை என்றால் உங்களிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அதனால், அவர்களின் பெயர்களை, குணங்களை, அடையாளங்களை மாற்றி எழுத வேண்டும்.
எல்லாவற்றையும் விட, நிகழ்வில் இருந்து நாம் எழுதவுள்ள கதையின் மையம் எது என்ற புரிதல் அவசியம் வேண்டும். தேவைப்பட்டால் நாம் முன்பின் கற்பனையாக சில காட்சிகளை உருவாக்கி கொள்ளலாம். உதாரணத்துக்கு, மாடு மேய்ப்பவருக்கும் எதிரில் வந்த பெண்களுக்கும் சண்டை நடக்கிறது.
காரணம், மனிதர்கள் குளிக்கும் இடத்தில் மாட்டைக் குளிப்பாட்ட முயற்சி செய்கிறார். இந்த நிகழ்வுக்கு முன், மாடுகள் குளிப்பாட்டும் இடத்தில் ஆழமாக பள்ளம் தோண்டியதுபோலவோ, அந்த இடத்திற்கு செல்ல முடியாமல் முட்களைப் போட்டு விட்டதாகவோ காட்சியை உருவாக்கி கொள்ளலாம். அப்போதுதான் ஒரு கதை முழுமையாக வரும்.
சரி, இப்போது நான் ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். ‘ஒரு கிராமத்துப் பேருந்து நிலையம். அதன் உள்ளே நான்கு ஐந்து நாய்கள் படுத்து கிடக்கின்றன. அருகில் சென்றால் பாய்ந்து வந்து கடிக்க வருகின்றன’ இதுதான் அந்த நிகழ்வு. இதை வைத்து முன், பின் காட்சிகள் சேர்த்து அழகான ஒரு கதையை எழுதுங்கள்.
- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com