கதை கேளு கதை கேளு 43: கஜா புயலும் காவிரி டெல்டாவும்

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
Updated on
2 min read

இயற்கைச் சூழலியலாளர்களில் ஒருவரான வறீதையா கான்ஸ்தந்தின் ‘கஜா புயலும், காவிரி டெல்டாவும்' நூலில் பேரிடரின் காரணங்கள், நிவாரண உதவிகள், மீட்பின் ஜனநாயக உரிமை பற்றிய தகவல்களை களஆய்வில் பெற்ற தகவல்களுடன் , பிரதேச புவியியல் வரலாற்று அறிவின் அவசியம் பற்றியும், உலக நாடுகளில் பேரிடர் அபாயங்களைக் கையாளும் முறைகள் பற்றியும் 360 டிகிரி கோணத்தில் பேரிடர் பற்றிய முழு அறிவையும் அறிவியல் ரீதியாக கொடுத்துள்ளார்.

பேரிடர் மேலாண்மை: புயல் மேலாண்மையில் பாதிக்கப்பட்ட கடற்கரை மக்கள் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்று சொல்வது, அரசு மக்களை பேரிடர் மீட்புக்கு போதுமான அளவில் தயார்படுத்தவில்லை என்பதன் அடையாளம் ஆகும் என்கிறார் வறீதையா. 2017 ஓக்கி, 2018 கஜா, 2018 கேரள வெள்ளம் என பேரிடர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இனி வரும் காலம் பேரிடர்கள் தொடரும் காலம்தான். இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள மக்களை ஆற்றல்படுத்தும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பான குடியிருப்புகள் முக்கியமான தேவை. பேரிடர்கள் தரும் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் சமூகமும், அரசும் வருங்கால இழப்புகளை எளிதில் தவிர்த்துவிடலாம் என்கிறார் வறீதையா.

பேரிடர் மேலாண்மையில் மரபுசார் அறிவின் பங்களிப்பை இந்நூல் வலியுறுத்துகிறது. இதற்காக நவீன அறிவியல் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதல்ல. கடந்த காலம், எதிர்காலத்தின் வழி காட்டியுமல்ல. நாள்தோறும் புதிது புதிதாக பேரிடர்கள் முளைக்கின்றன.

மானிடக் காரணிகளும் இவற்றில் அடங்கும். அரசு பேரிடர் கண்காணிப்பு நிலையங்களைப் போன்றே மிகத் துல்லியமான தகவல்களை தற்போது, தன்னார்வ பருவநிலைக் கணிப்பாளர்கள் தருகிறார்கள். வெதர்மேன் போன்றோரின் தன்னார்வ செயல்பாடுகளை பயன்படுத் திக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. அதேபோன்று பிரதேச புவியியல் வரலாற்று அறிவுகள் பேரிடர் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக் கிறது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி: புயல்கள் நிலச்சரிவை உண்டாக்கும் என்பது கஜா புயல் தந்த அனுபவ பாடம். இதுபோன்ற பிரதேச புவியியல் அறிவை பத்திரப்படுத்துவதன் தேவையை வறீதையா கூறிச்செல்கிறார். நிலநடுக்கம் நிகழும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை ஜப்பானியர்கள் அனைவரும் மனப்பாடமாக கற்று வைத்திருக்கிறார்கள். நம் நாட்டின் தனிமனித பாதுகாப்பு நிலையை எண்ணிப்பார்க்கும் கட்டாயம் தற்போது உள்ளது.

இதுபோன்று நிலநடுக்கம்,புயல், வெள்ளம், தொடர் மழை, இடிமின்னல் தாக்குதல் போன்ற ஒவ்வொரு வகையான பேரிடரின்போதும் கரிசனத்தோடு கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் உள்ளன. பேரிடர் கல்வியைச் செயல்ரீதியாகப் புகட்ட ஆசிரியர்களுக்கும் பயிற்சி தேவை. பேரிடர் குறித்த குடிமைச் சமூகத்தின் புரிதல், பேரிடர் தற்காப்புக்கு மட்டுமன்றி அன்றாட வாழ்வில் விபத்துகளைத் தவிர்க்கவும் உதவும். பொதுவாழ்வில் பேரிடர் அபாயங்களைக் குறைக்கும் சமூகப் பொறுப்புணர்வையும் உருவாக்கும் என்கிறார் நூலாசிரியர்.

குறைபாடுகள்: பேரிடர் கால மீட்புக்காலங்களில் மதங்கள் நிற்பதில்லை. மனிதம்தான் நிமிர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிக் கட்டமைப்பு இல்லாமல் போனது கஜா புயல் மீட்பு, நிவாரண மறுவாழ்வு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட முக்கியமான காரணம் என்கிறது களஆய்வு அறிக்கைகள். யூனியன், மாநில அரசுகளுக்கிடையே தகவல் பரிமாற்றமும் ஒருங்கிணைப்பும் இல்லாமை முக்கியமான குறைபாடுகள் என்கிறார் வறீதையா.

மீன்பிடி சிரமங்கள்: ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பேரிடர் குறித்த புவியியல் அறிவும், பாதுகாப்பு வசதிகளும், அரசாங்கத்தின் முறையான மீட்பு நடவடிக்கைகளும் கிடைக்கப்பெற வேண்டும். பேரிடர் மேலாண்மையுடன், விவசாயத்தின் தற்போதைய நிலை, மழைநீர் போதாமை மட்டுமே விவசாய அழிவுக்கு காரணமல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த விவசாய அலுவலக அதிகாரிகளின் வழிகாட்டல் தற்போதைய நிலையில் இல்லாமை, விவசாயம் செய்யும் முறைகள், மீன்பிடிக்கும் தொழிலில் உள்ள சிரமங்கள், கடல் போடும் சோறு, அலையாத்தி காடுகள் தரும் இயற்கைப் பாதுகாப்பு என புத்தகம் பேசும் தகவல்கள் ஏராளம். தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, நிலையான வசதிகளுடன் மக்களின் துயர்தீர்க்கும் கருவியாக பயன்படுத்தும்போது பேரிடர் துயரிலிருந்து மக்களை மீட்பது ஜனநாயக செயலாக மாறும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in