

அடர்ந்த காட்டில் மானும் வரிக்குதிரையும் நண்பர்களாக இருந்தனர். குப்பைகளை சுத்தம் செய்தபோது அங்கு ஒரு முயல் குட்டி இருப்பதை மான் பார்த்தது. அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தது.
அதை மோப்பம் பிடித்த ஓநாய் முயலை எடுக்க திட்டமிட்டது. இதை அறிந்த மானுக்கோ கடும் கோபம் வந்தது. ஓநாயை எச்சரித்தது. ஆனாலும் ஓநாய் முயல் இருந்த இடத்தை சுற்றி சுற்றி வந்தது. மானுக்கோ எரிச்சல் உண்டானது. ஓநாயின் வருகையை எதிர்பார்த்து காத்து கிடந்தது.
வரிக்குதிரை மானை காணாமல் தேடி வந்தது. இருட்டு நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்டது. மான், வரிக்குதிரையிடம் நடந்ததை சொன்னது. சரி சரி கோபப்படாதே. அதுவே உனக்கு ஆபத்தாய் முடியும் என்று அறிவுறுத்தியது.
சற்று நேரத்தில் சருகுகள் அசையும் நேரம், தட தட என்று ஓடும் ஓசை... மானுக்கோ இருப்பு கொள்ளவில்லை. ஓநாய் மீது பாய்ந்தது. இரண்டு விலங்களும் கட்டி புரண்டதில் மான் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடியது. எல்லா விலங்குகளும் எவ்வளவோ காப்பாற்ற முயற்சி செய்தும் மான் இறந்துவிட்டது. தன்னுடைய கோபமே அதன் உயிரைப் பறித்துவிட்டது என்று எல்லா விலங்குகளும் பேசிக் கொண்டன.
தன்னை காக்க வேண்டுமானால் சினத்தை அடக்க வேண்டும். சினத்தை காக்கா விட்டால் அது தன்னையே அழித்துவிடும் இதைத்தான் வள்ளுவர்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
குறள்:305
அதிகாரம் வெகுளாமை
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்