

இன்றைக்கு உலகத்துல பொருளாதாரத்துல மிக வலிமையா இருக்குற நாடுகளோட பட்டியலைப் பார்த்தால்… ஓர் உண்மை தெரிய வரும். இத்தனை நாளா நாம் கவனிக்காத ஓர் உண்மை இது.
அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட ‘பெரிய’ வலிமையான நாடுகள், உலகில் அதி நீள கடற்கரை’ கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ‘அபாரம் சார்… இது வரைக்கும் நாங்க இந்தக் கோணத்துல பார்க்கவே இல்லையே.” ஆமாம் செல்வி.
கொழிக்கும் கடல் வளம்: புவியியல் கோணத்துல பார்க்கும்போதுதான், வளர்ந்த நாடுகளின் பொருளாதார வலிமைக்கு ‘இயற்கை’ எந்த அளவு துணையாய் இருக்கிறது என்பது புரியும். குறிப்பா, ஒரு நாட்டுக்கு கடல் வளம் ஒரு மிகப் பெரிய வரம். மீன் வளம் இருந்தாலே, அதை முறையாப் பயன்படுத்தினாலே, நாட்டு மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செஞ்சுடலாம். இதுல இன்னொரு முக்கிய செய்தி இருக்கு. கடல் வளங்களை நாம் ‘வளர்க்க’ வேண்டியது இல்லை. தானாகவே ‘உற்பத்தி’ ஆகுது. நாம செய்ய வேண்டியது எல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். அது என்ன..?
‘ஊம்… தெரியலியே சார்.’ ‘வேற ஒன்ணும் இல்லை… கடல் நீரை நாம் மாச படுத்தாம இருந்தாலே போதும்.’ ‘வாவ்.. ஆமாம் சார்.. கடல் நீரை சுத்தமா வச்சிருந்தாலே நல்ல பயன்கள் கிடைக்கும் சார்… உண்மைதான்.’
சரியா சொன்னீங்க உமா. வெவ்வேறு காரணங்களால கடல், மாசுப்படுது. அதுலயும் கடல்ல கொட்டப்படுகிற பிளாஸ்டிக்கழிவுகள்… ‘எங்கேயோ படிச்சேன் சார்.. ஒரு முதலை இறந்து போய்க் கிடந்ததாம். அதனோட வயிற்றுக்கு உள்ளே நிறைய பிளாஸ்டிக் பாட்டில் குத்தி ரணம் ஆயிடுச்சாம். அதனால்தான் அது இறந்து போச்சுதாம்.’
உண்மை. இப்படி பல லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் மோசமா பாதிக்கப்பட்டு இருக்கு. ஒரு முக்கியமான அம்சம் கவனிச்சீங்களா? கடல்வாழ் உயிரினங்கள், அதுபாட்டுக்கு அமைதியா நடுக்கடல்ல யாருடைய தொந்தரவும் இல்லாம ‘ஒளிஞ்சு’ வாழ்ந்தா கூட அங்கேயும் போயி பிளாஸ்டிக் பாட்டிலைப் போட்டுட்டு வந்தா மனிதனை விட மோசமான ஆபத்தான மிருகம் வேற இல்லை. சரிதானே?
இந்த வாரக் கேள்வி: கடல் நீர் மாசுபடாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?
(பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com