

உடன்பாட்டு உணர்வுகளுக்கு மனநிறைவும் தேடியறியும் ஆவலும் அடித்தளமாய் இருப்பதைப்போல எதிர்மறை உணர்வுகளுக்கும் அடித்தளம் உண்டா? என்று வினவினாள் பாத்திமா. ஆம் என்றார் எழில். அந்த அடித்தளம் எது? என்று வினவினான் கண்மணி.
செல்வி கைபேசியில் விளையாடிக் கொண்டு இருந்தாள். மும்முரமாய்ச் சமைத்துக் கொண்டிருந்த அவள் அம்மா, அருகிலுள்ள கடைக்குச் சென்று சமையலுக்கு அவசரமாய்த் தேவைப்படும் பொருளொன்றை வாங்கி வரும்படி நான்கு, ஐந்து முறை செல்வியிடம் கூறிவிட்டார்.
அவளோ, இதோ போகிறேன் என்று கூறியவாறே தொடர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தாள். கோபமடைந்த அம்மா அவள் தலையில் ‘நங்கு’ ‘நங்கு’ எனக் கொட்டினார் என்று கூறிய எழில், அம்மா ஏன் கோபமடைந்தார்? என்று வினவினார்.
கோபம் என்ன செய்ய தூண்டியது? - செல்வி கடைக்குப் போகாததால் என்றாள் மணிமேகலை. செல்வியிடம் கோபப்படாமல் அம்மாவே கடைக்குப் போயிருக்கலாமே! என்றாள் இளவேனில். மும்முரமாய்ச் சமைக்கும் அம்மாவால் எப்படி இடையில் கடைக்குப் போக முடியும்? என்றான் சாமுவேல்.
தன்னால் கடைக்குப் போக இயலாததாலும் செல்வியைக் கடைக்குப் போகச்செய்ய இயலாததாலும் அவள் அம்மா கோபமடைந்தார் என்றான் உரையாடலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அருளினியன். அப்படியானால், இயலாமைதான் கோபத்தின் அடித்தளமா? என்று ஆசிரியரைப் பார்த்து வினவினான் கண்மணி. ஆம் என்றார் எழில்.
ஆனாலும், அம்மா கோபப்பட்டதில் நியாயம் இருக்கிறது என்றாள் தங்கம். ஒருவேளை செல்வியின் அப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ இப்படிச் செய்திருந்தால் செல்வியின் அம்மா அவர்களையும் அடித்திருப்பாரா? என்று வினவினாள் நன்மொழி. அடித்திருக்க மாட்டார். ஏனென்றால் அம்மாவைவிட மூத்தவர்களான அவர்கள், அவரைத் திருப்பி அடித்துவிடுவார்கள் என்றான் முகில். அடிப்பது கோபத்தைக் காட்டுவதற்கான வழியன்று. மாறாக தனது இயலாமையை வெளிக்காட்டும் வழி அது என்றார் எழில்.
ஆனால், கோபம் வந்ததும் அடிக்கத்தானே தோன்றுகிறது என்றாள் அருட்செல்வி. அடிப்பதைத் தவிர்க்க கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றான் அழகன். எப்படி என்று வினவினாள் பாத்திமா. என் அப்பாவிற்குக் கோபம்வந்தால் தனது கைகளைப் பின்னால் கட்டிக்கொள்வார்.
உன்னிடம் அப்புறம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவார். கோபம் மறைந்ததும் வந்து அவர் கோபமடைந்ததற்கான காரணத்தை விளக்கிக்கூறி, இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ளாதே என்பார் என்று விளக்கினான் அழகன். உன் அப்பாவின் வழிதான் கோபத்தைக் கையாள்வதற்கான எளிய வழி என்றார் எழில்.
கோபத்தை உணரக் கூடாது! - அப்படியானால் ஒருவர் கோபப்படவே கூடாதா? என்று வினவினான் காதர். எல்லாருக்கும் கோபம் வரும். அதனை முறையாகக் கையாள வேண்டும். இல்லையென்றால், கோபப்படுபவரின் உடல்நலந்தான் பாதிக்கப்படும் என்றார் எழில். கோபத்தை எப்படி முறையாகக் கையாள்வது? என்று வினவினாள் மணிமேகலை.
கோபத்தை உணரக் கூடாது; ஆனால் கோபத்தைக் காட்டலாம் என்றார் எழில். புரியவில்லை என்றாள் பாத்திமா. செல்வியின் அம்மா கோபத்தைத் தனது மனத்தில் உணர்ந்ததால் அவளை அடித்தார்; மாறாக அவர் தனது செய்கையால் கோபத்தைக் காட்டலாம் என்றார் எழில்.
எப்படி? என்று வினவினான் தேவநேயன். செல்வியிடமிருந்து கைபேசியைப் பறித்திருக்கலாம் என்றாள் மதி. அவளிடம் பேசாமல் இருந்திருக்கலாம் என்றான் அழகன். அருமை. கோபத்தை மனத்தால் உணராமல், செய்கையால் காட்டும் வழிமுறைகள் பலவற்றுள் சில இவை என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com