

ஏரியில் தூண்டிலைப் போட்டுவிட்டு அதன் தக்கை மீதே கண் வைத்திருந்த குணபாலனுக்கு பார்வை மட்டுமே அங்கிருந்தது. எண்ணங்களோ எங்கெங்கோ பறந்து சென்றது. இந்த இரண்டு மாதங்களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து, ஆதரவு அளித்து வந்தவர்கள் அனைவருமே மக்கள் புரட்சிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டான்.
அவனுக்கு அவனது குடும்பமும் ஊரும் நினைவுக்கு வந்தது. எப்போது சொந்த ஊருக்குத் திரும்புவது? தாய், தந்தை, சகோதரியை திரும்பவும் எப்போது பார்ப்பது? அப்படியே அங்கு சென்றாலும் திருச்சேந்தியின் ஆட்கள் என்னை சுதந்திரமாக வாழ விட்டுவிடுவார்களா? அல்லது தேசத் துரோகி என்று முத்திரை குத்தி மறுபடியும் கூகைச் சிறையில் தள்ளுவார்களா? எப்படி ஆயினும் இப்படிப் பதுங்கி வாழுதல் கோழைத்தனம். இனியும் இங்கு நாட்களைக் கடத்தாமல், கூடிய விரைவில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்றது எது நடந்தாலும் எதிர்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டான்.
சிறிது நேரத்தில் குணபாலன் தூண்டில் போட்ட இடத்தில் மீன்கள் வந்து அந்தத் தூண்டிலில் இருந்த இரையைக் கொஞ்சம் கொஞ்சமாக கவ்வி இழுக்க ஆரம்பித்தன. அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக மீன்கள் அந்தத் தூண்டிலில் சிக்கின. சிறிது நேரத்திலேயே குணபாலனுக்கு தேவைக்கும் அதிகமாகவே மீன்கள் சிக்கின.
அவற்றை எல்லாம் ஒரு நாணலில் கோர்த்து எடுத்துக்கொண்டு கழுகுகுஞ்சுகள் இருக்கும் இடத்துக்கு வந்தான். அங்கே சில மீன்களை தான் கொண்டு வந்திருந்த சிறிய கத்தியால் துண்டுதுண்டுகளாக வெட்டி அந்தக்கழுகுக்குஞ்சுகளுக்குத் தீனியாக அளித்தான். மிகுந்த பசியில் இருந்தஅந்த குஞ்சுகளும் ஆவலாக குணபாலன் கொடுத்த மீன்துண்டுகளைப் புசித்தன.
அவற்றின் பசி அடங்கிய பின்னரேஅவை கத்துவதை நிறுத்தி அமைதியாகின. அதன் பிறகு குணபாலன் அந்தக் குஞ்சுகளை மென்மையாக தடவிக் கொடுத்தான். கண்திறக்காத குஞ்சுகள் என்பதால், இரையை ஊட்டிய குணபாலனின் கைகளை தங்களின் பெற்றோரின் கைகள் என நினைத்து அவனது கைகளில் தஞ்சமடைந்தன.
அதன்பின் அவற்றைப் பாதுகாப்பாக மறுபடியும் அந்த மரப் பொந்திலேயே வைத்துப் பாதுகாப்பாக மூடிவிட்டு குணபாலன் தான் தங்கியிருந்த குடிலை நோக்கி நடந்தான். அங்கு சென்று அவன் தான் படித்த மீன்களை அங்கிருந்த வீரர்களிடம் காட்டியதும் அங்கிருந்த அனைவரும் குணபாலனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
‘இஃது எப்படி உனக்குத் தோன்றியது?’ என்று கேட்டு வியந்தார்கள். ‘எனக்கும் பொழுது போக வேண்டும் அல்லவா? எத்தனை நாள்தான் சும்மாவே இருப்பது? என்னால் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசித்தேன். அதனால்தான் இன்று மீன்களைப் பிடித்து வரலாம் என்று சென்றேன்.
ஏதோ என் அதிர்ஷ்டம், நான் போட்ட தூண்டிலில் ஏராளமாக மீன்கள் சிக்கின’ என்றான் குணபாலன். அப்போது அங்கு வந்த பெரியவர், ‘உனது உதவிக்கு மிகவும் நன்றி குணபாலா. ஆனால், இது மிகவும் சிறிய உதவி. உன்னால் எங்களுக்கு இதைவிடச் சிறந்த, பெரிய உதவிகளைச் செய்ய முடியும். செய்வாயா?’ என்று கேள்வியுடன் குணபாலனைப் பார்த்தார்.
குணபாலனுக்கு மறுத்துப் பேசவும் நாக்கு எழவில்லை. ஆனால், என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. ‘ஐயா, உங்களுக்கு இந்த ஆயுள் முழுவதுமே நீங்கள் கேட்பதை செய்து கொடுக்கக் கடமைப்பட்டவன் நான். ஆனால்…‘என்று நிறுத்தினான்.
‘ஆனால், ஆனால்என்று நீதயங்குகிறாயே. அஃது ஏன்? இதுதான் நீ காட்டும் நன்றி கடனா?’ என்று கேட்டார் பெரியவர். ‘ஐயோ, அப்படி இல்லை. என்ன உதவி வேண்டும் என்று கேளுங்கள்? முடிந்தால் செய்கிறேன். முடியாவிட்டாலும் முயற்சிக்கிறேன்’ என்றான் குணபாலன். ‘அஃது ஒன்றுமில்லை, மக்கள் புரட்சிப்படையின் தூதுவனாக அரண்மனைக்குச் சென்று மன்னரைச் சந்தித்து விட்டுவர வேண்டும்’ என்றார் பெரியவர்.
குணபாலனுக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது. உடனே சுதாரித்துக் கொண்டவனாய், ‘என்ன, என்னசொல்கிறீர்கள்? நான் தேசத்தையே எதிர்க்கும் ஒரு இயக்கத்தின் தூதுவனாக மன்னரைச் சந்தித்து வர வேண்டுமா? அப்படிச் சென்று வந்தால், என்தலையைத் துண்டித்து அரண்மனை வாசலில் கொலுவைத்து விடமாட்டார்களா? என்றான் குணபாலன். ‘பயப்படாதே, தூதுவனைக் கொல்வது மன்னர்கள் மரபில் இல்லை’ என்றார் பெரியவர்.
அதே நேரம் பாதாளச் சிறையின் ஒரு ஓரத்தில் முகமூடி கிடந்தது. அந்த சிறிய அறையின் இன்னொரு ஓரத்தில் முகமூடியை கழட்டிப்போட்ட அந்த மர்ம மனிதன் தலையை திரும்பியவாறு அமர்ந்திருந்தான் ஜன்னலில் இருந்து வந்த சூரியஒளி அவனது தலையில் விழுந்து கொண்டிருந்தது. விரக்தியால் குனிந்திருந்த முகத்தை சற்றே நிமிர்த்தி ஜன்னலை அண்ணாந்து பார்த்த அந்த முகம்...அட, இஃது என்ன? அந்த முகமூடி மனிதன் வேறுயாரும் அல்ல, தென்திசை தளபதியான திருச்சேந்தியேதான்.
(தொடரும்)