

பழம்பெரும் பின்னணிப் பாடகரும், 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவருமான P.B.ஸ்ரீநிவாஸ் (P.B.Srinivas) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் (1930) பிறந்தவர். பிரதிவாதி பயங்கரம் நிவாஸ் என்பது முழு பெயர். தந்தை அரசு ஊழியர். தாய் இசை ஆர்வலர். அவர் பாடும் ராகங்களையும், பஜன்களையும் கேட்டு இசை ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.
# இந்திப் பாடல்களை கவனமாகக் கேட்டு, இசை ஆசிரியர்களின் உதவியுடன் பயிற்சி செய்வார். முழு திருப்தி வரும்வரை பயிற்சியை விடமாட்டார். இவர் அரசு உத்தியோகம் அல்லது வக்கீல் தொழிலுக்குச் செல்லவேண்டும் என்பது பெற்றோர் விருப்பம். அதனால், முறையான இசைப்பயிற்சி இவருக்கு வாய்க்கவில்லை.
# பெற்றோர் ஆசைப்படியே இளங்கலையில் பட்டம் பெற்றார். பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். வேண்டா வெறுப்பாக கல்லூரியில் சேர்ந்தவர், குடும்ப நண்பரும் வீணை வித்வானுமாகிய ஈமணி சங்கர சாஸ்திரியைப் பார்க்க ஜெமினி ஸ்டுடியோவுக்கு அடிக்கடி செல்வார். அந்த சூழலால் ஈர்க்கப்பட்டவர், படிப்பை நிறுத்திவிட்டு, அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். முறையாக சங்கீதம் பயின்றார்.
# ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பில் 1951-ல்வெளிவந்த ‘மிஸ்டர் சம்பத்’ என்ற இந்தி திரைப்படத்தில் ‘கனஹிபரது’ என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார். பின்னர் தமிழில் ‘ஜாதகம்’ என்ற திரைப்படத்தில் ‘சிந்தனை செய் செல்வமே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.
# ‘யார் யார் யார் இவர் யாரோ’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘தாமரைக் கன்னங்கள்’, ‘காத்திருந்த கண்களே’, ‘மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம்’, ‘ரோஜா மலரே’ என காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களைப் பாடி அழியாப் புகழ்பெற்றார்.
# சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் அனைவருக்கும் பாடியுள்ளார். தமிழில் ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் ஏறக்குறைய அவர்களது எல்லா பாடல்களுக்குமே இவர்தான் பின்னணி பாடினார். பி.சுசீலா, ஜானகி, பானுமதி, ஜிக்கி, லதா மங்கேஷ்கர் என அனைத்து பாடகிகளுடனும் இணைந்து பாடியுள்ளார்.
# தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திஉட்பட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். கர்னாடக இசை மட்டுமல்லாது, ஹிந்துஸ்தானியிலும் சிறந்து விளங்கியவர். கஜல் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
# பிறரை மனம் திறந்து பாராட்டுவார். உடையில் அதிக கவனம் செலுத்துவார். இவரது சட்டைப் பையில் எப்போதும் வெவ்வேறு நிறங்களில் 10, 12 பேனாக்கள் இருக்கும்.
# ஆங்கிலம், உருது உட்பட 8 மொழிகளில் புலமை பெற்றவர். நினைத்த மாத்திரத்தில் கவிதை புனையக்கூடியவர். பல மொழிகளில் ஏராளமான பாடல்கள், கவிதைகளை எழுதியுள்ளார். தமிழில் ‘மதுவண்டு’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.
# கலைமாமணி, கன்னட ராஜ்யோத்சவா, டாக்டர் ராஜ்குமார் சவுஹர்தா உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பாடி,தனது வசீகரக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற P.B.நிவாஸ் 83-வது வயதில் (2013) மறைந்தார்.