

சித்தர்களுள் ஒருவராக அறியப்படும் இடைக்காடர், மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டு வந்தவர். ஒரு சமயம் ஊர் மக்களிடம் , இன்னும் கொஞ்ச நாள்களில் கொடிய பஞ்சம் வரப்போகிறது என்று எச்சரித்தார். ஆனால் மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருந்ததால் யாரும் இடைக்காடரின் சொற்களை மதிக்கவில்லை. அவரை ஏளனமாக பேசினார்கள். இடைக்காடரோ பஞ்சத்தை எதிர்கொள்ளத் தயாரானார்.
தம் ஆடுகளை எந்தக் காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலைகளைத் தின்ன பழகினார். தன் கைவசமிருந்த வரகு தானியத்தை மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பிக் குடிசை கட்டினார். எருக்கிலையை உண்ட ஆடுகள் உடலில் அரிப்பெடுக்க, அவை சுவரில் தம் உடம்பைத் தேய்த்துக் கொண்டன. ஆகவே மண் சுவரிலிருந்து வரகு தானியங்கள் உதிர்ந்தன. அவற்றைச் சேகரித்து கஞ்சி காய்ச்சி உண்டு வாழ்ந்தார்.
வரகு ரொட்டியும் ஆட்டுப் பாலும்! - இடைக்காடர் எதிர்பார்த்தபடியே பஞ்சம் வந்தது. ஊர் மக்களும் கால்நடைகளும் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி தவித்துக் கிடக்க, இறப்பின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால், இடைக்காடரின், அவரது ஆடுகளின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தது.
இதைப் பார்த்த நவக்கிரக நாயகர்களும் ஊரே பஞ்சத்தில் பாலைவனமாகிக் கிடக்க, இடைக்காடரை மட்டும் பஞ்சம் எதுவும் செய்யவில்லையே, எப்படி? என்று வியந்தனர். அதைத் தெரிந்து கொள்ள நவக்கிரக நாயகர்களும் ஒன்றாக இடைக்காடரின் குடிசைக்கே வந்தனர்.
இடைக்காடர் நவக்கிரகங்களைப் பார்த்ததும் அகமகிழ்ந்தார். இந்த ஏழையின் குடிசையில் வரகு ரொட்டியும், ஆட்டுப் பாலும்தான் உள்ளன. எளிய உணவை தாங்கள் தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நவக்கிரகங்களையும் நன்றாக உபசரித்தார். வரகு ரொட்டியை விரும்பி உண்ட நவக்கிரக நாயகர்கள், தாகத்துக்கு ஆட்டுப் பாலைப் பருகினா்.
அது எருக்கிலைச் சத்து நிறைந்த ஆட்டுப்பால் என்பதால் அதை அருந்தியதும் மயங்கி விழுந்தனர். உடனே இடைக்காடர், கிரகங்கள் எந்த அமைப்பில் இருந்தால் மழை பொழியுமோ அந்த அமைப்பில் அவர்களை மாற்றிப் படுக்க வைத்தார்.
உடனே வானில் கருமேகங்கள் திரண்டன. பூமி குளிரக் குளிரக் மழை பொழிந்தது. பஞ்சம் நீங்கியது. மயக்கம் தெளிந்து விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள், மக்கள் நலனுக்காக இடைக்காடர் செய்த இந்த அருஞ்செயலைப் பாராட்டினர் என்ற ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.
நெல்லோ, பிற பயிர்களோ வறட்சி தாங்காமல் மடிந்துவிடும். வெள்ளம் வந்தாலும் சங்கடம்தான். ஆனால், நீரே இல்லாத வறட்சியான சூழ்நிலை என்றாலும், அதிக மழை பெருவெள்ள சூழல் என்றாலும், சரியான முறையில் விளைந்து உழவனுக்கு உற்சாகத்தைத் தரக் கூடியவை சிறுதானியங்களே. அப்படிப்பட்ட சிறுதானியங்களில் தனித்துவம் மிக்கது வரகு.
இலக்கியத்தில் வரகு: ஔவையார், வேளூரை ஆண்ட குறுநில மன்னனான பூதன் என்பவன் விரும்பி அளித்த உணவை உண்டகளிப்பில் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.
வரகரிசி சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரவென் றேபுளித்த மோரும் - பரிவுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந் திட்டசோ
றெல்லா வுலவும் வரும்.
அதன்படி வரகரிசியில் சமைத்த சோறும், அதற்குத் தொட்டுக்க, வழுதுணங்காயில் அதாவது கத்திரிக்காயைச் சுட்டு சமைத்த கறியும், முரமுரவெனப் புளித்த மோரும் அன்றே நம் ஔவை பாட்டி ரசித்து உண்ட உணவாகும்.
(தொடர்ந்து ருசிப்போம்)
- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்; தொடர்புக்கு: devavino86@gmail.com