மாறட்டும் கல்விமுறை - 14: சுவரில் கிறுக்க அனுமதியுங்கள்!

மாறட்டும் கல்விமுறை - 14: சுவரில் கிறுக்க அனுமதியுங்கள்!
Updated on
2 min read

ஒரு மழலைக் குழந்தை முதன் முதலாகத் தெள்ளத் தெளிவாக எழுதியதைப் பார்த்ததுண்டா? அது ஓர் எழுத்தா? இல்லை சொல்லா? அச்சொல்லுக்கோ அல்லது எழுத்துக்கோ ஏதேனும் தனித்தன்மைகள் உள்ளனவா? பார்ப்போம்.

பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் பாடப்புத்தகம் எழுதவும் சில ஆய்வுகள் மேற்கொண்டோம். மூன்று முதல் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தோம். புதிய பேனா ஒன்றை வாங்கி அதை சிறுபெட்டிக்குள் வைத்து, வண்ணத்தாளால் பொதிந்து குழந்தையிடத்தில் காட்டி, அதன் கவனத்தைக் கவர்ந்து மெல்ல பேனாவைக் காட்டினோம்.

பிறகு “இதோ ஒரு புது பேனா. மாமா வாங்கி வந்திருக்கிறேன். உனக்காக வாங்கினேன். நான் என்ன எழுதனும் சொல்லு. அதை நான் எழுதுறேன்” என்றோம். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெயரை எழுதும்படி கூறினார்கள்.

தானாக எழுதிய துளிர்: குறிப்பேட்டை விரித்து ஒரு புதுப்பக்கத்தை எடுத்தோம். குழந்தையை வலது தோளுக்கு அருகே வந்து நிற்கச் சொன்னோம். குறிப்பேட்டில் சற்றே பெரிய எழுத்துகளால் மிக மெதுவாக அவர்களின் பெயரை எழுதிக் காட்டினோம். ஒருபோதும் எழுதும் வேளையில் எழுத்துகளை உச்சரித்துக் காட்டமாட்டோம்.

எழுதி முடித்ததும்குழந்தை நம் கையிலிருந்து குறிப்பேட்டையும் பேனாவையும் பிடுங்காத குறையாக வாங்கியிருக்கும். பிறகு தரையில் குறிப்பேட்டை விரித்து வைத்துப் படுத்துக்கொண்டு எழுதத் தொடங்கியிருக்கும். அது யாரும் கட்டாயப்படுத்தாமல், குழந்தை தன் சுயவிருப்பத்தோடு எழுதத் தொடங்கும் காட்சி. அழகான காட்சி. ஷண்முகநாதன் என்று தன்பெயரைக் குழந்தை எழுதியபோது சுயவிருப்பத்தின் ஆற்றலைத் தெரிந்துகொண்டோம்.

நேர்கோடுகளா? வளைகோடுகளா? - நாங்கள் நடத்திய ஆய்வு அதுவரை நாம் புரிந்து வைத்திருந்த பல கருத்துக்களைத் தவிடு பொடியாக்கியது. பின்பற்றி வந்த பல பழக்கங்களை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ விதைத்து.

# நேர்கோடு, சாய்கோடு, படுக்கைக்கோடு என எழுதிப்பழக வேண்டும் என்பது குழந்தைக்குச் சிரமத்தைத் தரும். வெறுப்பை விதைக்கும்.

# ட, ப, ம என்ற வரிசையில் எழுதுவதுதான் குழந்தைகளுக்கு எளிமையானது. அதனால் படம், பட்டம், மடம், மட்டம் என்ற வரிசையில் பாடங்கள் அமைய வேண்டும் என்பது தவறு. நேர்கோடு வரைவதுதான் உள்ளதிலேயே சிரமமானது.

# ஓர் எழுத்தைப் பலமுறை எழுத வைத்து எழுத வைத்துப் பயிற்சியளிக்க வேண்டும் என்பது இயந்திரத்தனமானது.

எப்படி எழுத வேண்டும் என்பதைவிட என்ன எழுத வேண்டும் என்பதே முக்கியம் என்று நேரடியாக உணர்ந்த நாட்கள் அவை.

எழுத்துக்கு முன்: பேனா பென்சில் பிடித்து எதையாவது எழுதுவதற்கு முன் அவர்களின் பிஞ்சு விரல்கள் உறுதிப்பட வேண்டும். அதற்கான சூழலை நாம் சற்றே விழிப்புணர்வுடன் உருவாக்கி தர வேண்டும்.

களிமண்ணால் உருவங்கள் செய்வது, காகிதத்தை நுணுக்கமாக கிழித்து உருவங்கள் செய்வது, குச்சியால் தரையில் கோடுகள் வரைவது, மணலை அள்ளுவது, பெரிய பாத்திரத்திலுள்ள தண்ணீரைச் சிறிய பாத்திரத்தில் சிந்தாமல் ஊற்றுவது, பாசிமணியில் நூல்கோர்ப்பது, குச்சியால் ஈரமண்ணில் குழி தோண்டுவது எல்லாவற்றையும் விட சுவர்களில் கிறுக்குவது போன்றவற்றில் ஈடுபட வாய்ப்புருவாக்க வேண்டும். அதைப் பற்றிய நம் கருத்தைக் கூறி, பாராட்டி அச்செயல்களை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

நாம் படங்கள் வரைவதைக் குழந்தைகள் பார்ப்பதும் அதைப் பற்றி அவர்களிடம் பேசுவதும் நல்லது. நாளடைவில் அவர்களுக்கும் வரைய வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே தோன்றும். அதுதான் எழுத்தின் முதல் படி.

முதல் எழுத்தின் தன்மைகள்: ஒரு சொல்லை ஒரு பக்கத்திற்கும், ஓர் எழுத்து பெரியதாகவும் ஓர் எழுத்து சிறியதாகவும், சரியான வடிவம் இல்லாமலும், கோடுகளின் மேலே கீழேயென்றும், ஓரிரு எழுத்துகளை விட்டும் குழந்தைகள் எழுதுவார்கள். இவை மழலை எழுத்தின் முக்கியபடிநிலைகள் என்பதை நாம் உணர வேண்டும். நாளடைவில் மெல்ல மெல்ல இப்பிரச்சனைகளை குழந்தைகளே புரிந்துகொண்டுதங்களைத் திருத்திக் கொள்வார்கள்.

கடந்த ஆறுமாதத்தில் நாம் எதையாவது எழுதுவதைக் குழந்தைகள் பார்த்திருக்கிறார்களா? கட்டம் போட்ட குறிப்பேட்டில் ஒரே எழுத்தைத் திரும்பத் திரும்ப நாம் எழுதியிருக்கிறோமா? நல்ல கையெழுத்தில் எழுதுபவர்கள்தாம் நன்றாகப் படிப்பார்கள் என்ற நம் எண்ணத்திற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?

(தொடர்ந்து யோசிப்போம்)

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in