

மலையில் பயணம் செய்தாலே குமட்டலும் வாந்தியும் ஏற்படுகிறதே எதனால் என்று கவலையோடு கடந்த வாரம் கேட்டிருந்தார் மாணவி வர்ஷா.
நாம் ஒரு பேருந்தில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நாம் அசையாமல் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதை நமது தசைகளும் மூட்டுகளும் உணர்த்தும். அதேசமயம் நமது கண்களோ வேகமாகக் கடக்கும் மரங்களையும் மனிதர்களையும் கவனித்து, நாம் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் நகர்ந்து கொண்டிருக்கிறோம் எனும் தகவலை மூளைக்கு சொல்லும். அத்துடன் சருமத்தில் மோதும் காற்று மற்றும் அசைவுகளை வைத்து, நாம் பயணிப்பதை மூளை உறுதி செய்துகொள்கிறது.
அதாவது ‘சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.. அதேசமயம் பயணித்துக் கொண்டும் இருக்கிறீர்கள்' என்ற இருவேறு முரண்பட்ட தகவல்களை ஆராய்ந்து, உண்மையில் நம்மைச் சுற்றி இருப்பவை மட்டுமே நகர்கிறது. ஆனால் நாம் சமநிலையில் தான் இருக்கிறோம் என்பதை, தன்னுள் இருக்கும் நகராத திரவம் வாயிலாக மூளைக்கு தெளிவுபடுத்தும் வேலையை ‘வெஸ்டிப்யூல்’ செய்கிறது.
சிலசமயம் இந்த தகவல்கள் சரியாக மூளைக்குச் செல்லாதபோது ஒரு சிலருக்கு மட்டும் மூளைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, சமநிலைக்கும் இயக்கத்திற்கும் இடையே மூளை disconnect ஆகி, அந்தக்குழப்பம் motion sickness எனும் பயணப்பிணியாக அவர்களுக்கு மாறிவிடுகிறது.
ஆக, பயணப்பிணி என்பது பார்ப்பதால் வருவதில்லை; அதைத் தவறாக உணர்வதால் தான் வருகிறது. மேலும், இது நம்மிடையே மூன்றில் ஒருவருக்கு காணப்படும் ஒரு சாதாரண சிக்னெஸ்தான் என்பதால் இதில் பயப்படவும் தேவையில்லை. பொதுவாக இது ஆண்களைக் காட்டிலும் பெண்களில்தான் அதிகம் காணப்படுகிறது. அத்துடன் குழந்தைகளிடையே அதிகம் காணப்படும் இந்த சிக்னெஸ் வளர வளரக் குறையும்.
ஏற்கெனவே ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு பயணப்பிணி எளிதில் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும் இதில் மரபணுக்களின் பங்கும் அதிகம் இருப்பதால் குடும்பத்தில் பெரியவர்களுக்கு இந்தப் பிணி இருந்தால் அடுத்தவர்களுக்கும் தொடர வாய்ப்புகள் அதிகம்.
அடுத்து, பயணப்பிணிக்கும் பயணத்தின் தூரத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு நீண்டதூர பயணத்திலும், வெகு சிலருக்கு மிகச்சிறிய பயணத்திலும் கூட இது ஏற்படலாம். இவர்களுக்கு காருக்குள் அடைத்த கண்ணாடிகள், நீரில் மிதக்கும் படகின் மிதவை அசைவு, வாகனங்களில் வெளிவரும் புகை போன்ற எதுவும் பயணப்பிணியைத் தூண்டக்கூடும். மலைப்பயணத்தில் ஏறும்போது இருப்பதை விட இறங்கும்போது மூளையின் டிஸ்கனெக்ட் வெகு எளிதாக ஏற்படுவதால் அதிக சிரமங்கள் திரும்பும் பயணத்தில் ஏற்படும்.
(பயண ஆலோசனை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com