

அரண்மணைச் செயலாளர் பதவியிலிருந்து ஆவணக் காப்பாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டார் லாவோ. அந்த நேரத்தில் சோ வம்சத்து அரசாட்சி சரியத் தொடங்கியது. திரும்பிய பக்கமெங்கும் ஊழல், சீர்கேடு. ஆரம்பத்தில் லாவோ இதற்குச் சட்டை செய்யாமல், அமைதியான முறையில் ஆன்ம தேடலில் ஈடுபட்டிருந்தார்.
சீடர்களுக்கு தியானப் பயிற்சிகளைக் கற்பித்தார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நெருக்கடி அதிகமானது. அரசு, ஆட்சி, அதிகாரம் என எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, வேறொரு நாட்டிற்குச் சென்று துறவு வாழ்க்கை வாழ முடிவெடுத்தார்.
கரியநிற காளை மாட்டுவண்டியில் ஏறி அமர்ந்து ஊரைவிட்டு வெளியேறினார். ஹான்-கு கணவாய்க்கு அருகில் சென்றதும், இன்-கிசி என்ற காவலர் லாவோவை தடுத்து நிறுத்தினார். இன்-கிசி லாவோவின் ஞான உபதேசங்களை பல இடங்களில் கேட்டவர். அவரோடு அந்த உரையாடல் நின்றுவிடக்கூடாது என்பதற்காக, அவற்றையெல்லாம் எழுதிக் கொடுத்தால்தான் ஊரைவிட்டு வெளியேறவிடுவேன் என்று அன்புக் கட்டளையிட்டார்.
விடைதெரியாத விடைபெறல்: ஹான்-கு கணவாயிலேயே மூன்று நாட்கள் தங்கியிருந்து ‘சொர்க்கத்திற்கான வழி’ என பொருள்படும் ‘தாவோ தே ஜிங்’ புத்தகத்தை எழுதி காவலாளியிடம் ஒப்புடைத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார். தாவோயிசம் மதத்திற்கு மட்டுமல்ல, லாவோ சீ என்றொருவர் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கும் இந்நூலே சாட்சி.
அதற்குப் பின் மூத்த குரு எங்கு சென்றார், என்ன ஆனார் என்பதற்குப் பதில் இல்லை. மணல் பரந்த மத்திய ஆசியப் பகுதிக்கு சென்றார் என ஒருசிலரும், திபெத் பகுதிக்குச் சென்று ஞான உபதேசங்களில் ஈடுபட்டார் என வேறு சிலரும் சொல்கின்றனர். தாவோயிச மத நம்பிக்கையின்படி, வெண் நாரைமீது அமர்ந்து ஷொவ்-ஷான் எனச் சொல்லப்படும் தாவோயிச சொர்க்கத்தில் ஞானிகளோடு இரண்டறக் கலந்தார் எனச் சொல்லப்படுகிறது.
சீனப் பண்பாட்டில் தாவோ: சீனாவை நினைத்தாலே டிராகன் உருவங்கள்தான் கண்முன் வரும். அதற்குப்பின் பாம்பு, நாரை, வாத்து, வாள், புலி, ஆமை, கண்ணாடி என்று அதன் பண்பாட்டில் பொதிந்துள்ள அத்தனைப் படிமங்களும் தாவோயிசத்தோடு தொடர்புடையன. டாய்ச்சி கலையின் குறியீடாக வரும் கருப்பு வெள்ளை சின்னமும் இதனோடு சேர்ந்தது.
தாவோ பற்றி நாம் அறிந்தது குறைவு என்றாலும், உலகப் பாரம்பரியத்தில் அவருக்கான மதிப்பு அதிகம். தான் எழுதிய ஒற்றை நூலால் உலகறியப்பட்டு, அதன்மூலம் அமைதி மார்க்கம் தோன்ற காரணமாயிருந்தவரை யுகங்களானாலும் சீனப் பண்பாட்டில் இருந்து பெயர்க்க முடியாது.
- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com