

வாழ்வின் அடுத்த கணத்தை யாராலும் சரியாக கணிக்க முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சத்தோடே ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிச்சயமற்ற வாழ்வில் நமக்கு பின்னால் குடும்பத்தினரின் நிலை உணர்ந்து, அனைவரும் கட்டாயம் காப்பீடு எடுத்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் அலட்சியத்தோடு அதனை கடந்துவிடுகிறார்கள்.
இன்னொரு பக்கம் காப்பீட்டு திட்டங்களின் ப்ரீமியம் தொகையை செலுத்த முடியாத ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு காப்பீட்டு திட்டங்களை தீட்டியுள்ளன. தனியார் காப்பீட்டு திட்டங்களை பெற முடியாதவர்கள், இந்த அற்புத திட்டங்களை அலட்சியம் செய்யாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முதல்வர் காப்பீட்டு திட்டம்: தமிழக அரசின் முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தற்போது மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம்வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம்.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படும், இந்தக் காப்பீட்டு திட்டத்தில் குழந்தைகளுக்கான சிகிச்சைகள் உள்பட 1,090 சிகிச்சை முறைகள், 8 தொடர் சிகிச்சைகள், 52 பரிசோதனைகள் ஆகியவற்றை ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம்வரை இலவசமாக பெறலாம். இதில் 800 அரசு மருத்துவமனைகள், 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ஆயுள் காப்பீடு: இதில் 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இணையலாம். வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் விருப்பத்தின்பேரில் இதில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான ஆண்டு ப்ரீமியம் தொகை ரூ.436. அதாவது மாதத்துக்கு ரூ.36 மட்டுமே. இந்த காப்பீடு எடுத்தவர்கள் எந்த காரணத்தினால் உயிரிழந்தாலும் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
பிரதமர் இலவச ஆயுள் காப்பீடு: இந்த திட்டத்தில் ரூபே வங்கி அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. இதில் ரூ. 30 ஆயிரம் ஆயுள் காப்பீடும் கிடைக்கிறது. இதற்கு தனியாக ப்ரிமீயம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
பிரதமர் விபத்து காப்பீடு: இதில் 18 முதல் 70 வயது வரையில் உள்ளவர்கள் இணையலாம். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இதில் சேரலாம். விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது உடல் ஊனத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதன் ஓராண்டு ப்ரீமியம் ரூ. 20 மட்டுமே. விபத்தில் சிறிய அளவிலான ஊனத்துக்கு ரூ.1 லட்சம் கிடைக்கும்.
அடல் ஓய்வூதிய திட்டம்: அரசு சாரா ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருமான வரி செலுத்தாத 18 முதல் 40 வயது உள்ளவர்கள் இதில் இணையலாம். பாலிசிதாரர் மாதந்திர, காலாண்டு, அரையாண்டு வாரியாக ப்ரீமியம் செலுத்தலாம்.
செலுத்திய தொகைக்கு ஏற்ப, 60 வயதுக்கு மேல் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை மாதந்தோறும் உத்தரவாத ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை பாலிசிதாரர் 60 வயதுக்கு முன்பு மரணித்துவிட்டால், அவரது 60 வயதுக்கு பின்னர் பாலிசிதாரரின் நாமினிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
பிரதமர் பயிர் காப்பீடு திட்டம்: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் மழை, வெள்ளம், வறட்சி, பூச்சி ஆகியவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகள் நிவாரணம் பெறலாம். பயிர் மதிப்பீட்டில் 5 சதவீதம் அளவுக்கு ப்ரீமியம் செலுத்தினால் போதும். மீதி தொகையை அரசு செலுத்தி, 100 சதவீதம் வரை விவசாயிகளுக்கு பலனை தருகிறது. சேதமடைந்த பயிர் குறித்து 72 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனை வேளாண் அதிகாரி ஆய்வு செய்து, இழப்பீடு கிடைக்க வழிவகை செய்வார்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு :vinoth.r@hindutamil.co.in