முத்துக்கள் 10: எளிய அகராதி தந்த சாமுவேல் ஜான்சன்

முத்துக்கள் 10: எளிய அகராதி தந்த சாமுவேல் ஜான்சன்
Updated on
2 min read

எளிமையான அகராதியை உருவாக்கிய ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson) பிறந்த தினம் செப்டம்பர் 18. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# இங்கிலாந்தின் ஸ்டாபோர்டுஷயர் கவுன்ட்டிக்கு உட்பட்ட லிச்ஃபீல்டு நகரில் (1709) பிறந்தார். தந்தை புத்தக வியாபாரி. 3 வயதில் வீட்டில் அம்மாவிடம் பாடம் கற்றார். பிறகு, உள்ளூர் பள்ளியில் கல்வியைத் தொடங்கினார்.

# சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். அப்பாவின் கடைக்குச் சென்று புத்தகம் பைண்டிங் செய்ய உதவுவார். கூடவே, அங்குள்ள நூல்களைப் படித்து அறிவை விசாலப்படுத்திக் கொண்டார். கவிதைகளும் எழுத ஆரம்பித்தார்.

# லத்தீன் மொழியில் சிறந்து விளங்கிய இவரிடம், ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப்பின் ‘மெஸையா’ நூலை மொழிபெயர்க்குமாறு கூறினார் ஆசிரியர். பகலில் பாதியும் மீதியை அடுத்த நாள் காலையிலும் எழுதி முடித்துவிட்டாராம்.

# பெரும்பாலான நேரத்தை எழுதுவதிலும் வாசிப்பதிலும் செலவிட்டார். ஆக்ஸ்ஃபோர்டு பெம்ப்ரோக் கல்லூரியில் சேர்ந்தவர், வறுமையால் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘தி ஜென்டில்மேன்ஸ்’ இதழில் அரசியல், பொருளாதாரம், சமூகம், இலக்கியம் குறித்த கட்டுரைகள், கதைகள் எழுதத் தொடங்கினார்.

# ஆங்கிலத்தில் பல அகராதிகள் இருந்தாலும் ஆழமான, எளிமையான அகராதி இல்லை என்ற குறை இருந்தது. ஒரு நல்ல ஆங்கில அகராதி உருவாக்க வேண்டும் என்று இவரிடம் சில பதிப்பாளர்கள் கேட்டனர். ஒப்புக்கொண்ட இவர் உடனே அதற்கான வேலையில் இறங்கினார்.

# அது சற்று சவாலாகத்தான் இருந்தது. வறுமையுடன் போராடிக்கொண்டே இப்பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து கதை, கட்டுரைகளும் எழுதிவந்தார். 5பவுண்ட் கடனை திருப்பிச் செலுத்தாததால் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மனைவியும் இறந்தார்.

# இதையெல்லாம் மீறி அகராதி பணியை விடாமல் மேற்கொண்டார். 8 ஆண்டுகளாக தனி நபராக நின்று, கடுமையாக உழைத்து ஆங்கில அகராதியை எழுதி முடித்தார். 1755-ல் 2 தொகுதிகளாக வந்தது. இது இவருக்கு உலகம் முழுவதும் புகழைப் பெற்றுத் தந்தது.

# ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இவருக்கு எம்.ஏ. பட்டமும் பின்னர் டாக்டர் பட்டமும் வழங்கியது. ட்ரினிட்டி கல்லூரி டாக்டர் பட்டம் வழங்கியது. பல பிரபல இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் எழுதினார். இவரது பல நூல்கள் பிரெஞ்ச், டச்சு, ஜெர்மன், இத்தாலி, ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

# கவிதையை அலங்கார வார்த்தைகளுடன் எழுதுவதைவிட, எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எழுதுவதே முக்கியம் என்று வலியுறுத்தினார். பொருளாதார ரீதியான போராட்டம் இருந்தபோதிலும் தன்னைவிட ஏழ்மை நிலையில் இருந்த நண்பர்களை ஆதரித்து வந்தார். இவரைப் பற்றி நண்பர் பாஸ்வெல் எழுதிய ‘லைஃப் ஆஃப் ஜான்சன்’ வாழ்க்கை வரலாற்று நூல் பெரும் வரவேற்பை பெற்றது.

# இவருக்குப் பின்னர் எளிய வடிவில் பல அகராதிகள் வந்தாலும் இவருடையதுதான் முன்னோடி அகராதியாக கருதப்படுகிறது. கவிஞர், கட்டுரை ஆசிரியர், இலக்கிய விமர்சகர், வாழ்க்கை வரலாறு எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சாமுவேல் ஜான்சன் 75-வது வயதில் (1784) மறைந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in