கற்றது தமிழ் - 13: கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ!

கற்றது தமிழ் - 13: கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ!
Updated on
2 min read

சிறந்த பாடகர் பாடகியைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில், 'எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே' என்ற பாடலை சிறுமி ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் தம்மை மறந்து கலங்கிய நெஞ்சோடு அந்தப் பாட்டில் ஆழ்ந்திருந்தார்கள்.

'கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ' என்ற வரி வருகையில் அம்மாவின் கண்கள் பனித்தன. இந்தப் பாட்டை எழுதிய கவிஞர் யுகபாரதியின் நேர்காணல் ஒன்றைத் தான் பார்த்ததாகவும், இந்தப் பாட்டின் பின்னணி பற்றி அவர் விளக்கிய விதம் குறித்தும் அப்பா அம்மாவிடம் பேசத் தொடங்க, குழலியும் சுடரும் உரையாடலில் கலந்துகொண்டார்கள்.

அப்பா: தனக்காக மட்டுமில்லாம, தான் வாழ்ற சமூகத்துக்காக, உயிரைத் தியாகித்த எத்தனையோ வீரர்கள் இருக்காங்க. தன் சமூகத்தோட உரிமைக்காக, விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த வீரர்களச் சாமிக்கு நிகராகப் பார்க்கிற நம் சமூகத்தோட ஒரு குறியீடுதான் இந்தப் பாட்டுக்குள்ள இருக்குறதா யுகபாரதி சொன்னார்.

சுடர்: இன்னைக்கு ராணுவம்ங்கிற பேர்ல நம்ம நாட்டைக் காப்பாத்திக்கிட்டிருக்கிற வீரர்கள் போல எல்லாக் காலத்திலயும் சமூகத்துக்காக உயிரையே கொடுக்குற வீரர்கள் இருந்திருக்காங்க இல்லையா. இந்தப் பாட்டுகூட அப்படிப்பட்ட ஒரு வீரனோட இழப்பைத்தான் சொல்லுது.

குழலி: சுடர், அந்தக் காலத்துப் போர் முறைகள் பத்தியெல்லாம் பேசிட்டிருந்தோமே... விழுப்புண் பட்டு வீரமரணம் அடையறது தான் ஒரு ஆண்மகனுக்கு அழகுன்னு சொன்னாங்க.

சுடர்: எனக்குக் கூட ஒரு புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருது. ஒரு சமூகத்துல யாருக்கு என்ன கடமைன்னு சொல்ற பொன்முடியார் பாட்டு.

குழலி: சுடர், நான் அந்தப் பாட்டைச் சொல்றேன். மனப்பாடப் பகுதியில படிச்சிருக்கேன்.

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம்: 312)

சுடர்: பரவாயில்லையே. ஒரு வரி கூட மறக்காமச் சொல்லிட்ட. பொருளை நான் சொல்லட்டுமா... ஒரு குழந்தையைப் பெத்து, அதைப் பாதுகாத்து, இந்த சமூகத்துக்கான மனிதனாக்கறது தாயோட கடமை; அந்தக் குழந்தைக்கு,

படைக்கலப் பயிற்சிய, கல்வியக் கொடுத்து உயர்ந்த பண்புள்ளவனாக்கறது தந்தையோட கடமை; நாட்டோட பாதுகாப்ப வலுப்படுத்தற படைக்கலங்களை, அதாவது போர்க்கருவிகளச் செய்து கொடுக்கறது கொல்லர்களோட கடமை; நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக, சிறந்த அறநெறிகளப் பின்பற்றி, உயர்வான பண்புகளோடு ஆட்சி செய்வது மன்னனின் கடமை; இளைஞனுக்கு என்ன கடமை தெரியுமா? ஒளி பொருந்திய வாளைக் கையில் பிடித்து, எதிரிகளின் யானைகளை வீழ்த்திப் போர்ல வெற்றி பெறுவது.

குழலி: ஆம்பளப் பிள்ளையப் பெத்துக் கொடுக்கறது மட்டும்தான் பெண்ணோட கடமையா...

சுடர்: நல்ல கேள்விதான். சங்க இலக்கியத்துல நடுகல் வழிபாடு பத்திப் பேசியிருக்காங்க தான.

குழலி: போர்ல விழுப்புண்பட்டு இறந்த வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் நினைவாகக் கல் அமைச்சு, அதை நடுகல்னு சிறப்புச் செஞ்சு சாமியாக வழிபடுற மரபு தொல்காப்பியர் காலத்திலேயே இருக்காம். அதியமானுக்கு வைக்கப்பட்ட நடுகல்லப் பத்தி ஔவையார் பாட்டுல வருது.

சுடர்: அப்படின்னா ஆண்களுக்குத் தான் நடுகல் வழிபாடு.

குழலி: ஆனா, கண்ணகி இதுல விதிவிலக்கு. கணவனுக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்ட கண்ணகிக்கு, சேரன்செங்குட்டுவன் நடுகல் நட்டுக் கோட்டம் எழுப்பி வழிபட்டதாக சிலப்பதிகாரம் சொல்லுது.

சுடர்: புறத்திணைகள்ல துறைகள் பத்திப் பேசினோமே, இந்தப் பாட்டும் மூதின்முல்லைத் துறையைச் சேர்ந்த பாட்டுதான். நடுகல் வழிபாட்ட ஆறு நிலைகள்ல சொல்றாரு தொல்காப்பியர்.

சரி சுடர். நேரமாச்சு. நாளைக்குப் பேசுவோ என்று குழலி கேட்க, அப்பாவும் அம்மாவும் பிள்ளைகள் எவ்வளவு அறிவோடும் பொறுப்போடும் உரையாடுகிறார்கள் என்று மகிழ்ந்திருந்தார்கள்.

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in